Monday, March 23, 2009

உதிரிப் (புகைப்)படங்கள்



தலைகீழாகத்தான் இருக்கு உலகம்
காதலில் இருக்கையில்.

In Love, World is upside down!

மாட்டுக்கும் மனுசனுகும்
மவுசும் பவுசும்.

Chennai Sangamam 2009


எதிர்காலம் விற்பனைக்கு
நிகழ்காலம் கட்டணம்

Fortunately Unfortunate!

பாதியைக் காணோமேன்னுட்டு வருந்தறவன் இறந்தகாலம் தாண்டறதில்லை.
மீதி இருக்கேன்னுட்டு குஜாலாகறவன் தேங்கி நிக்கறதில்லை!

Those Early days... mmm...

மசினகுடியில் ஒரு மப்புகுடி... பாட்டிலு அவுட்டாப் ஃபோகஸ்ல இருக்கறதுக்கு காரணம்.. ஹிஹி...

Batchelors meet


ஹேங் ஓவர்..
கூழானாலும் குளித்துக் குடி
குவாட்டரானாலும் அளவாய் அடி

Hangover!!!


அடையார் இரட்சகர்...

Ghandinagar Church, Adyar


ரேபனுக்கா? கோல்கேட்டுக்கா?

Close-Up or Ray-Ban ?!


மதுரை தெப்பக்குளத்தினுள் ஒரு அமேசான் காடுகள்...

Madurai Temple Pool - A Google view :)


கட உள்...

Madurai Temple Statue

தனிமையில் தனி மயில்...

Loneliness in the Crowd

எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!!

எலேய்... போட்டா மட்டும் புட்ச்ச...டங்கு டணாருதான்!!!

Saturday, March 07, 2009

ஈழத்தமிழர் மீதான தமிழக தூரிகைகளின் துயரப்பதிவுகள் - 07 மார்ச், சென்னை

தூரிகைகளின் துயரப்பதிவுகள், 07 மார்ச், தியாகராயா பள்ளி, தி. நகர், சென்னை.




தூரிகைகளின்_துயரப்பதிவுகள்



ம.செ, மதன் மற்றும் மாருதி...

Maa Se, Madhan & Maaruthi

1000 பேர் சாவு... போர்... எல்லாமே நமக்கு திடுக்கிடும் “செய்திகள்!”

1000 Dead... War... All just NEWS!!!

ஓவியம் என்னவோ முடிஞ்சது.. சொன்ன சேதி போய்ச்சேருமா?

Painting Completed... Will the Message reach?!

துயரத்தின் வெளிப்பாடு வண்ணங்களில்...

Colors of Emotions...


பரிட்சைதான்... மார்க்குக்கு இல்லாம உணர்வுக்காக...

This time not just for Marks...

அழிவினைப் பற்றிய உருவாக்கம்...

Creativity on Genocide...

நம்பிக்கையிழந்த கருப்பும் சிவப்பும் மற்றும் “வெளுப்பும்”!

Faded Black, Red & White...

அப்பா அங்கிட்டு வரையறாரு.. என்னால முடிஞ்சது இங்கிட்டு...

I can reflect Daddy's feelings..

தூரிகைகளின் துயரப்பதிவுகள்... சில உங்கள் பார்வைக்கு...

தூரிகைகளின் துயரப்பதிவுகள்...

Thursday, October 30, 2008

காரைக்குடியில் இருந்து சில படங்கள்

போனவாரம் காரைக்குடி பயணம். அங்க என்கூட படிச்ச கூட்டாளிகளை பாக்கறதுக்கு 14 வருசம் கழிச்சு போனேன்னு ஆரம்பிச்சன்னா “இவங்கூட இந்த கொசுவத்தி தொல்ல தாங்கமுடியலடா!”ன்னு நீங்க எஸ்ஸாக வாய்ப்புகள் அதிகமிருப்பதால், நண்பரது வீட்டில் காலை டிபனே முழுவாழையிலையில் பால்பணியாரம் தொடங்கி 12 ஐட்டங்களுடன் சாப்பிட்டதையோ, மதியத்துக்கு மட்டனிலே மூனுவகையும் சிக்கனிலே நாலு வகையுமாக ”முழு” இலையில் பிரண்டு எழுந்ததையோ (நண்டு சாப்ட்டு பழக்கமில்லாத்தால தொடலை! ) அப்பறமா சாயந்தரம் கமுக்கமாக லாட்ஜ்ல ரூம்போட்டு பயக எல்லாம் ஃபுல் அடிச்சும் ஸ்டெடியாக நின்னு பழய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய காலேஜ் லவ்வு பஞ்சாயத்தையெல்லாம் பேசி தீர்த்துக்கினதையோ இங்கே சொல்லப்போவதில்லை! :) ஆனால் சில படங்கள் மட்டும் போட்டால் பார்க்காம போக மாட்டீங்கன்னு...



சுட்ட கருத்துக்கள் அனைத்தும் படத்தைப்பார்த்ததும் (தொடர்பிருக்கோ இல்லையோ.. ) நினைவில் வந்த படித்துப்பிடித்ததன் குறிச்சொற்களை கூகிளிட்டு கிட்டியவை.

”ஒவ்வொரு புனிதனுக்கும் ஓர் இறந்தகாலம் உண்டு. ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு” - வி. ஆர். கிருஷ்ணய்யர்

இன்றைய பிரபலமும் அன்றைய புதுமுகமும் - இசைஞானி இளையராஜா “சுவாமி”கள்
"Pongal" after Deepavali


”வீடுகளில் தங்குகிறோமோ இல்லையோ, சில வீடுகள் நம்முள் தங்கிவிடுகின்றன” - தனது வீடு பற்றிய கவிதை பற்றி மாலன்

நண்பனின் வீடு
"Pongal" after Deepavali


“வீட்டில் தமிழ் கவிஞர்களுக்கு பிடித்த இடம் - ஜன்னல். உன் வீட்டு ஜன்னல் அல்லது என் வீட்டு ஜன்னல். இன்னும் எவ்வளவு வருடங்கள் காதலி ஜன்னலில் நின்று கொண்டிருப்பாள்?” - குண்டலகேசி

இதான் ஆயிரம் ஜன்னல் வீடுன்னு நினைக்கறேன்! ஆச்சி வந்திருக்காகன்னு உள்ள விடல.
"Pongal" after Deepavali


“இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும்
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்த கும்மிகள் கொட்டுங்களேன்” -வைரமுத்து

கருவியப்பட்டி கோவில்
"Pongal" after Deepavali


”வார்த்தையின் பள்ளத்தில்
அர்த்த கடல் விழுந்து
வீணாகிறது.
மிச்சமாய் நிற்பவை
வார்த்தைக்கான அர்த்தங்கள்!
எங்கே தேடுவேன்
அர்த்தங்களுக்கான வார்த்தைகளை?

வாழக்கை படிகளில்
சறுக்கி விழுந்தாலும் ஒரு படி
மேலே தான் விழுவோம்
விழுதலில் தவறில்லை! ” - இலக்குவனார்.

குன்றக்குடி கோவில்
"Pongal" after Deepavali


”புத்தகங்கள்
காசுக்கு வாங்கிய தண்ணீர்
அரைகுறை ஆடை அழகி
பிள்ளையார்பட்டி பிள்ளையார்
புத்தரின் கண்
எப்போதும் என்னைப் பார்த்திருக்க
இரும்புக் கட்டிலில் ஒரு இரும்பாக
கிடக்கிறது என் உடல்” - மேன்ஷன் கவிதைகள், பவுத்த அய்யனார்.

பிள்ளையார்பட்டி கோவில்
"Pongal" after Deepavali


”எத்தனை பேர் கூடி இழுத்துமென்ன
இன்னும் வரவில்லை
சேரிக்குள் தேர்.” - செ. ஆடலரசன்.

தேரும் குளமும்
"Pongal" after Deepavali


”நாடகம் போலிருக்கிறது. உள்ளே போனாள். முகம் கழுவினாள். பூத்த மலர் போலும் எப்படி வேறு கோலம் பூண்டுவிட்டாள்! பெண்கள் கனவு-தேவதைகள்தான்! குட்டிப் பெண்ணாய்ச் சுட்டிப் பெண்ணாய் மின்னல்போலும் நுழைந்தவள். பெண்ணின் குழைவுகளும் நளினங்களும் மேல்மட்டம் வந்திருந்தன. சுடிதார் களைந்து இப்போது, பட்டுப்புடவை. கூந்தலில் பொங்கிச் சிரித்துக் கிடந்தது மல்லிகை. செடி இடம் மாறிவிட்டாப் போல.” - மோகனம் - எஸ். ஷங்கரநாராயணன்

மொட்டும் மலரும்
"Pongal" after Deepavali

”வாழ்க்கையை அதன் இயல்பான அழகுடன் வாழ்ந்து பார்க்கும் மனிதர்களைப் படம் பிடிக்கப் போகிறோம், இந்தப் புகைப்படத்தில். - ராஜேஷ்லிங்கம், இயக்குனர்-புகைப்படம்

சம்பிரதாயமாக புகைப்படமெடுப்பது எப்படி? :)
"Pongal" after Deepavali

Tuesday, October 28, 2008

தீபாவளியின் பின்னிரவில் ’பொங்கல்’

தெருவோர திருப்பத்தில் ஒத்தை விளக்கு. சூழும் பனியில் மோதி உருகிவழியும் வெளிச்சம். 10 மணிக்கு மேலாக வெளிச்சமும் இருட்டும் முயங்கும் இப்படியாப்பட்ட இடத்தில் பைக்குகளை நிறுத்தி டாங்குமேல படுத்துக்கிட்டோ சீட்டுல சாஞ்சுக்கிட்டோ ஒலக நிகழ்வுகளையெல்லாம் எங்கள் அறிவுமுதிர்ச்சியெனும் எல்லை வகுத்துத்தந்த அவரவர் அளவுகோள்களோடு பொங்கித்தீர்த்த வயசு! தாவணிகளின் சிக்னல்களுக்கு அர்த்தங்களும் அப்பன்களின் அன்புஇம்சைகளுக்கு ஆறுதலும் அரியர்களை தண்டிவர கம்புசுத்தும் பார்முலாக்களுமாக மணித்துளிகள் கரைந்த பொழுதுகள். அதாச்சு 15 வருசம்!

நேற்று இந்த ’கேங்’கை அப்படி பார்க்கையில் ஒரு செகண்டு பொகையாக இருந்தாலும் அடுத்த நிமிசமே மனம்கொள்ளாத மகிழ்ச்சி. நாம் முன்னாடி நின்ற வாழ்க்கைப்படியில் இன்றைக்கு இவனுங்கன்னு ஒரு தற்பெருமை. கேட்பதற்கு யாருமே தயாராக இல்லையென்றாலும் ”அந்தக்காலத்துல நாங்களும் இப்படி புல்லட்டும் ஆர்ரெக்ஸ்சும் கேபியுமா..”ன்னு தொண்டைவரை முட்டிநிற்கும் பழமைகள். அங்கேயே தேங்கிவிடாமல் தாண்டிவந்த தெம்பு கொடுக்கும் தெகிரியத்தில் அன்றைய இத்துப்போன செயல்களெல்லாம் இன்று பெருமையாக சொல்லிக்கிறபடி மாறி நிற்கும் மேஜிக். பிரம்மச்சாரிகளின் கும்பலில் இருந்து ஒவ்வொருவராக கல்யாணமாகி குடும்பிகளாகி புள்ளைக்குட்டிகளோடு இருக்கும் மாறிப்போன ஒரு மனநிலையில் ஒரு பிரம்மச்சாரிகளின் கும்பலைக் காணு நேரும் பாலகுமாரனின் பெயர் மறந்துபோன சிறுகதையொன்று மனதில் ஓடவிட்ட ஒரு தருணம். சராசரிகளின் வாழ்க்கையும் ரசமானதுதான் போல. அந்தந்த கட்டத்தில் அப்படியப்படி இருந்துவிட்டால்! :)

Flickr:

"Pongal" after Deepavali

Google Pages:

"Pongal" after Deepavali

Wednesday, October 15, 2008

குலசை தசரா திருவிழா - என் புகைப்படப் பெட்டி

மீண்டும் ஒரு அற்புத பயணம். எல்லாம் நம்ப ஆதியோட சொந்த ஊரான குலசேகரன்பட்டணத்துல நடந்த தசரா விழாவை காணத்தான். 3 நாளைக்கு ஆதிவீட்டுலயே டேரா! வேளாவேளைக்கு கிணத்தடில குளியல், ரவுண்டு கட்டி சாப்பாடு, மொட்டைமாடி அறைல தென்னமரங்க காத்து தாலாட்ட உறக்கம், அப்பப்ப அப்டியப்டியே பெரண்டு படுத்துகினு மணிக்கணக்கா பொரளி பேசுதல். இதுக்கு நடுவால காலார நடந்து படமெடுக்கற வேலை! கொடுத்து வைச்சிருக்கனுமைய்யா! ஆதிக்கும் அவிங்கப்பாம்மாவுக்கும் எத்தனை நன்றி சொன்னாலும் தகும். வழக்கம் போலவே நம்ப காமேரா பிஸ்துங்க நாதன், ராம்கோ வினோத், பிரமிட் வினோத், கோகுல், கவுஜர் லக்குவனார், நம்ப சிவியாரு மற்றும் PeeVee ன்னு பெர்ரீய கும்பல். லடாக் புகழ் மோகந்தாஸு மட்டும் ஆணிங்க அதிகம்னு கடுக்கா குடுத்துட்டாப்புல. அந்தாளும் சேந்திருந்தா அதகளம்தான். இப்பல்லாம் படமெடுக்கறதுல அவ்வளவு ச்சுகுர்ரா இருக்க முடியலை.அங்கங்க நடக்கறதுல அப்படியே ஒன்றி ரசிக்கத்தான் புத்திபோகுதே தவிர காரிய நேர்த்தியா படமெடுக்கறதுல கவனம் போகமாட்டேங்குது. நாய் வாய்வைச்சாப்புல எல்லாத்தையும் செய்யும் என் வழக்கமான புத்திய வைச்சுப்பார்த்தா இந்த இன்ரஸ்ட்டும் போயிருமோன்னு பயமாத்தான் இருக்கு. இருந்தாலும் இந்தமாதிரி அருமையான மக்காகூட ஜமாபோட்டு ஊரு சுத்தவாவது கொஞ்சநாளைக்கு இத்துல ஒட்டிக்கனும்னு இருக்கேன் :)

அடடா! எத்தனை நாளாச்சு இப்படி ஒரு மனிதசக்தி கொப்பளித்து பிரவகிக்கும் கூட்டங்களைக் கண்டு? ரெண்டுநாட்களாக மக்களின் பக்தி, உற்சாகம், ஆட்டம், பாட்டம், விதவிதமான வேடம் மற்றும் இடையறாத(?!) ”டண்டணக்கர டண்டணக்கர...”. கலக்கறாங்கைய்யா. 10 நாளைக்கு குலசை முத்தாம்மனுக்கு வேண்டிகிட்டு விரதம். விதவிதமான வேடத்துல ஊர்மக்களிடம் கையேந்துதல். 10வது நாளைக்கு குழுகுழுவா கூடி குலசைக்கு ஆட்டத்துடன் பயணம். கையேந்திக்கிடைத்த காணிக்கையை கோயிலில் செழுத்திவிட்டு கடல்ல குளியல். அங்கயே சமைச்சு சாப்டுட்டு ராத்திரி நடக்கற சூரசம்காரத்தில் பக்திப்பரவசத்துடன் கலந்துக்கிட்டு வேசம் கலைச்சு ஊருக்கு போய்ச்சேர்றது. இதேன் அவங்க ப்ளானு. சும்மா சொல்லக்கூடாது. வருசமெல்லாம் பொழ்ப்பு எப்படியோ... ஆனா இந்த 10 நாளுக்கு வாழ்க்கைய அனுபவிக்கறாங்கய்யா அனுபவிக்கறாய்ங்க!




புயலுக்கு முன் அமைதி. முத்தாரம்மன் கோவிலின் முதன்மைத்தெரு... இதுவழியாத்தான் 5 லட்சம் மக்கா போனாங்கன்னா நம்புவீகளா?!

Koil_Street


நல்லநாளும் அதுவுமா சீக்கிரம் எந்திரிச்சு குளிக்காம தூங்கிக்கிட்டே இருந்தா எப்படி? முழிச்சுக்கடி என் புஜ்ஜிக்குட்டி...

Kid_Cat


குறத்தி மகள்கள்

Kurathi_Magal


ச்சே! ஒருத்தன் தனித்துவமா இருந்தா விடமாட்டீங்களே! என்னையும் திரு(ப்பி/த்தி)த் தொலைங்கப்பு!

Thanithuvamanavan


செய்வன திருந்தச் செய்!

Perfection


இந்த வருசக்குளியல் முடிஞ்சதுங்கப்பேய்...

After_Bath


மொதல்ல Sea Bath... பெறகு Sand Bath அப்புறந்தேன் Sun Bath... கலராயிடுவம்ல!

Sand_Bath


மணப்பாடு கோவில்

Manappadu Church


வேண்டுதல்னு வந்துட்டா எம்புட்டு கஷ்டம்னாலும் தாங்குவம்ல!

16Feet_Vel


கண்ணேறு காக்கப்போகும் கரும்புள்ளி

Tirushti_Pottu


அடடா! ஊருக்குள்ள வந்ததுல இருந்து இவனுங்க இம்சை தாங்கல. அவனவனுக்கு ஒளிஓவியனுங்கனு நெனப்பு. ஒரு திருகாணி மாட்ட விடுதாய்ங்களா?!

Model_Cameramen


ஆட்டத்தை ரசிக்கவில்லே... ஆளேத்தான் பார்க்குது...

Hide_See


தில்லானாவும் மோகனாம்பாளும்

Thillana



Its payback time! ஆடி சந்தோஷப்படுத்துனவுகளை சந்தோசப்படுத்தும் PeeVeeயின் கேமரா

Payback_Time


வருசத்துக்கு ஒருக்கா ச்சான்சு.. அம்புட்டையும் ஒரேராத்திரில வித்துப்புடனும்...

Kadalai_VAndi


வேண்டுதலுக்குன்னு சில வேசங்க. ஆழ்மன ஆசைகளை நிவர்த்திக்கன்னு சில வேசங்க. பத்ரகாளி, குறவன், ராப்பிச்சை, பைத்தியம், போலீஸ், கெழவி, அனுமாருன்னு ஆயிரக்கணக்கா வேசங்க.

அகந்தை அழியவேண்டி பைத்தியக்கார வேடம்.

Rappichai


இன்னொரு ஆச்சரியமான மேட்டரு பொம்பள வேசம்! புருசன் சரசரக்கும் பட்டுப்புடவையும் புது ஜாக்கெட்டும் இடுப்பைத்தொடும் சவுரியுமாக பதவிசாக கையில் தீச்சட்டியேந்தி நடக்க பின்னாடி பயபக்தியோடு வீட்டம்மாவும் கொழந்தைகளும். அப்பா சிவன் வயசுப்பையன் பார்வதி. 10 கைகள் நீள பத்ரகாளிகள். இதெல்லாம் வேண்டுதலுக்காம். இதுபோக மனசுக்குப்பிடிச்ச எந்த வேசமானாலும் கட்டலாம். தாவணிகளிலும், நைலக்ஸ் புடவைகளிலும், மிடிகளிலும், கனகச்சிதமான காட்டன் புடவைகளிலும் நளினம் கூட்டி ”கம்பீரமான” நடக்கும் பெண்கள். ஆணுக்குள் உறைந்திருக்கும் பெண்மையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக திருவிழாவெங்கும் வளைய வரும் ”திருவிழாப் பெண்”களை காண நல்லாத்தான் இருக்கு! :) அந்தக்காலத்துலதான் மனுசன் யோசிச்சிருக்கான்யா!

”நமக்குள் இருக்கும் ஆணும் பெண்ணும் ஒன்றாகவில்லை என்றால் , நாம் இறைவனை உணர முடியாது. ஒருமைதான் ஒருமையை அறியும்” - இ.சி.நே - கவிக்கோ.

குழந்தைகள் பெண்கள் மற்றும் பெண்கள்

Cross_Dressing



எலே.. ராஜா உத்தரவாகவே இருக்கட்டும். அதுக்காக பத்தவைக்காத தம்முக்கு எப்படில பைன் போடுவ?

King_Thum


சேர்ப்பித்த தீச்சட்டிகளும் சீர்செய்யும் சிறுவனும்

Theechati_Boy


கடற்கரை சூரசம்ஹார திடலில் ஆடி சாமிகும்பிட்டு ஓய்ந்து அமர்ந்திருக்கும் மக்கள் கடலின் நடுவில் ஒரு இ.ம.மு பிரமுகர் பேச்சு. பறையர் பள்ளர் வரலாற்றுச்சிறப்புகளை எடுத்துச்சொல்லி “சாதிபார்த்தா நாம் இம்புட்டுபேரும் குழுமியிருக்கோம்?”னு கேட்டப்ப நான் இருக்கறது தெந்தமிழ்நாடுதானான்னுட்டு கிள்ளிப்பார்த்துக்கிட்டேன். அப்பறம் வைச்சாரு வேட்டு. அதான்! கிறித்துவ இஸ்லாம் மதத்துக்காரங்களுக்கு சரமாரியாத் திட்டு. இதெல்லாம் பேச வேற மேடையே கிடைக்கல போல! நிறுவனமயமாக்குதல் என்று வரும்பொழுது உள்ளிருக்கும் அழுக்குகளை பூசிமெழுகி அதன் மேல் ஒரு பொது எதிரியை உருவாக்கி உட்கார்த்திவைக்கனும் அல்லவா?! சரியாத்தான் தொழில் செய்யறாங்க. ஆனாலும் ஒரு சந்தோஷம். ஒரு விசிலோ கைத்தட்டலோ இல்லாம மக்கள் மகா அமைதியா இருந்தாங்க. கவனமெல்லாம் நைட்டு சரியா 12 மணிக்கு நடக்கப்போகும் சூரசம்ஹரத்துக்காக வெயிட்டிங். 15 நிமிசம் இத்த பேசியும் எடுபடலைன்ன ஒடனே அப்படியே ட்ராக் மாறி “நாம் இங்கே மற்ற மதத்தினை விமர்சனம் செய்ய வரவில்லை.. இந்து மதத்தின் பெருமையை... “

ம்ம்ம்... இந்த வருசம் மக்கா அமைதியா கேக்காக. அடுத்தவருசம் கைத்தட்டுவாங்க. அதுக்கடுத்த வருசம் கொரளு விடுவாங்க. அடுத்தது... இந்துமதம் காக்க என்னே ஒரு லட்சியப்பாதை! விநாயகரு சதுர்த்திக்கு ஆன நிலைமை குலசை தசராவுக்குமான்னு மனசு கருக்குங்குது!

சரி விடுங்கப்பு. மனம் கவரும் குலசை முத்தாரம்மன் கண்டு மனம் குளிருங்க :)

Mutharamman

Tuesday, September 09, 2008

நீலாங்கரையும் பிள்ளையாரும் பின்னே என் புகைப்படப் பெட்டியும்

போனவாரம் நீலாங்கரை குப்பத்தைச் சேர்ந்த மீனவ நண்பர் “சும்மா இருந்தா வாங்க பிரதர்... போட்ல போலாம்!”னு வெத்தலப்பாக்கு வைச்சாப்புல. நானும் வார இறுதியில் சிவியரா ரெஸ்ட் எடுத்தே டயர்ட் ஆனதாலும் இதுக்குமேலும் கையக்காலை அசைக்கலன்னா வீட்டுல கட்டைல ஏத்திருவாங்கன்னும் பயந்து என் புகைப்படப்பெட்டியை தூக்கிட்டு கெளம்பிட்டேன். ச்சும்மா சொல்லப்படாது! ட்ரிப்பு செம ட்ரில்லு :)

நண்பரும் அவரு சோட்டாளிகளுமாக 12 பேரு. போட்டுல ரெண்டாளு இஞ்சினை மாட்டறதுக்குள்ள பயணத்துக்குண்டான பொருட்களை கவருமெண்டின் பட்டதாரிக்கடையில் வாங்கிக்கொண்டோம். அதாங்க... 4 மிராண்டா, 10 ப்ளாஸ்டிக் க்ளாசு, ஒரு ஹான்ஸ், ரெண்டு பாக்கெட்டு சிசர்ஸ் அப்பறம் த்ரி க்ரொன்ஸ் க்வாட்டர் நாலு. ஒரு க்வாட்டரு 70 ரூவாயாம்! நான் கடைசியா வாங்குனப்ப 32.50. வெலைவாசி இப்படி தாறுமாறா எகிறினா அப்பறம் “ஏழை எளிய மக்கள்” எப்படி பொழைக்கறது?! :( சரி விடுங்க... எஞ்சாய்மெண்ட்டு ஓவரா போனதால போட்டா புடிக்கறதுல கவனம் போகல..(இல்லைன்னா மட்டும்..? ) இருந்தாலும் எடுத்தவரைக்கும் இங்க வழக்கம்போல கடைவிரிக்கறேன் :)




படை கெளப்பிடிச்சு.... நல்லா சேர்றாங்கைய்யா செட்டு!
The_Gang

நகரமும் ( மீண்டும் கரைசேர்வதே விதியெனினும் ) அதில் ஒட்டாமல் விலகித் தத்தளிக்கும் மனமும்...
Boat_alone

சேச்சே.... எப்படித்தான் இந்தக்கெரகத்த ஊத்திக்கறாய்ங்களோ?!
Mixing

ரெண்டு காலையும் விரிச்சு மல்லாக்கப்படுத்து வானத்தப் பார்க்கறதுல எவ்வளவு சொகம்!
Sea_clouds

மக்கா சரக்கும் நான் ஃபாண்டாவும்னு ஒரு மணி நேரம் நல்லாத்தான் போச்சு. அப்பறம் போட்டமுய்யா கடலுக்கு சோறு... எக்கி எக்கி வாந்திதான்... அலையாட்டத்துல பெருங்கொடலு தொண்டைவரைக்கும் வந்து இனிமே ஏதாவது திம்பயா?”ன்னு கேட்டுட்டு போயிருச்சுங்கப்பு! ரெண்டுதபா வந்தா சரியாகிருமாம்! அது சரி!

குதியாட்டம் ஆரம்பம்! :) நானுங்கூட ஜெட்டியோட நல்லா டைவெல்லாம் அடிச்சனுங்க.. போட்டா புடிக்கத்தான் ஆளில்ல... :( உண்மையில் அழ்மன விருப்பம் என்னன்னா அம்மணக்கட்டையா நடுக்கடல்ல ஊறனுங்கறதுதான். அதுக்குள்ள மக்கா இங்கன சுறா வந்தாலும் வரும்னு பிட்டை போட்டுட்டானுவ... நானும் சுறாவின் மனநலம் கருதி என் ஆசையை மீண்டும் தள்ளிப் போட்டுட்டேன்! :(
Cool_Dive


அமோகமான நாலு மணிநேரத்துக்கப்பறம் அடிச்சுப்போட்டாப்புல கரைவந்து விழுந்தோம். மீன் புடிச்சு ரிடர்னான ஒரு படகு...
Boat_parking

என்னத்த புடிச்சுக்கினு வந்தாய்ங்கன்னா...
Earnings

சங்கரா.... சங்கரா மீன் கொழம்பு வைப்பதெப்படின்னு பதிவு போடறவுகளுக்கு என்னாண்ட இருந்து ஒரு கிலோ மீனு அன்பளிப்பேய்! :)
Fish_Tale

நாம ஏற்கனவே மாநிறத்துக்கும் மேல் கலர். இருந்தாலும் லைட்டா ஸ்கின் டேனிங் செஞ்சுக்கலாம்னு கரைலயே நண்டு, நத்தைகளோடு ரெண்டுமணி நேரம் உருளல். கண்டதையும் பேசிக்கினு அப்பப்ப வந்துபோறா அலைகளால் புரண்டு படுத்துகினு லைப்பு நல்லாத்தான் இருந்தது :) அப்பறமா சாயந்தரம் கரைல விநாய்கரு கரைக்கறாங்கன்னு கேள்விப்பட்டு அங்கே ஆஜர்...

கொட்டிவாக்கம் கடற்கரையே தானுங்க! :)

Kottivakkam


காவிகளோடு ஐக்கியமான காமன்மேன் பிள்ளையாரு ஊர்வலம்...
Vinayak_rally

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்னு இப்படி வந்த கணபதிகள்...
Vinayak_Coming

இப்படி கரை சேர்ந்தாய்ங்க... கட்டுமரத்தில் நடுக்கடலில் விட ஒரு விநாயகருக்கு 200 ரூபாய்.
Vinayak_going

நேத்துவரைக்கும் அருள் பாலிச்சவரை அள்ளி தூக்கிக்கினு வ்ரும் அருள் பெற்றவர்கள்...
bye_bye_Vinayak

இந்த வருசமும் கலக்கிப்புட்டம்ல....
Sendoff_Warriors

கணபதிக்கிட்ட களவாடுனது :)
The_remainings

ப்ளீஸ்மா.. எம்புள்ளையாரை மட்டுமாச்சும் ஒடைக்காம பத்தரமா வைச்சுக்றேன்!!
Saved_my_Vinayak

மாப்ளை விநாயாரு...
Rally_Melam

நண்பர்களும் நம்பர்களும்...
The_Numbers

கடைசிப்பிள்ளையாருக்கு பின்னான அலை ஓய்ந்த பீச் மற்றும் ஓய்வெடுக்கும் பளுதூக்கி...
Night_crane

காலைல இருந்து ஆட்டம் போட்டதுல நெம்ம டயர்டு! வாங்க ஆளுக்கொரு கார்னெட்டோ வாங்கித்தரேன் :)
ice_shop

Tuesday, September 02, 2008

ஆடுகளும் அவைதம் வாழ்க்கையும்...

ப்புதாங்க...

அவசரப்பட்டு கலைஞர், ஜெயா, ராஜ், விஜய் டிவிக்களை போன மாசம் திட்டிட்டேன். கெட்டது ஒன்னு இருந்தா அதுல நல்லதுன்னு ஒன்னு கட்டாயம் இருக்கும்னு யாகவாமுனிவரின் சித்தப்பா பையன் ஒரு முறை காக்கா மொழியில அருள்வாக்காக சொன்னதை மறந்துட்டு பொலம்புனது எந்தப்புத்தேன் போல! வம்படி டான்சு புரோகிராமெல்லாம் முடிஞ்சு, ”DMKகாரங்க எங்கள கிள்ளிவைச்சுட்டதால தமிழகம் இருளில் தவிக்குது... ADMKகாரங்க எங்க பொஸ்தகத்தை கிழிச்சுட்டதாலதால் வெலவாசியெல்லாம் ஏறிப்போச்சு ...”ங்கற செய்தியெல்லாம் முடிஞ்சு, அப்பறமா மத்தியானத்துல ஆரம்பிச்ச வாழ்க்கை, தாலி, பிறப்பு, வாக்கு, மயிரு, மட்டைங்கற எல்லா சீரியல்களும் முடிஞ்சு வீட்டு பொம்பளையாளுங்க எல்லாம் ஏறக்கட்டுன பிறகு 10..30 மணிக்கா ஆரம்பிச்சி 12வரைக்கும் இந்த எல்லா தமிழ் சேனல்களிலும் என்னத்த போடுறாய்ங்கன்னா முழுநீள படக்காமெடிகள்!

முழுநீளம்னா ஒரு படத்துல இருக்கற மொத்த காமெடி சீன்களும் கண்டினயுசா... அற்புதம்தான். வீட்டாளுங்க, வெளியாளுங்க, வெளம்பரங்கன்னு எந்தத் தொல்லையும் இல்லாமலும், ஆபிசு அழிச்சாட்டியங்களையெல்லாம் ஒதுக்கி ஓரமா வைச்சுட்டு ஆம்பளையா லச்சணமா அரையிருட்டுல தனியாளா ஒக்கார்ந்து வெடிச்சிரிப்பை வாயில் அடக்கி கண்ணுல தண்ணிவர சிரிச்சபாடுல பார்க்கற சொகமே சொகம். பல விவேக்கின் டெம்ப்ளேட்டு மொக்கைகளாக இருந்தாலும்( இதுக்கா ஒருகாலத்துல பெரண்டு பெரண்டு சிரிச்சோம்...?! ) சில வடுவேலுவின் ஸ்டீரியோடைப்பு காமெடியா இருந்தாலும் பிரச்சனையில்லை. அஞ்சாரு சேனல்ல பிடிச்ச காமெடி வர்றவரைக்கும் மாத்திக்கினே இருக்கலாம். பிடிச்ச காமெடி எதுவா? நம்ப கவுண்டபெல் தான்... மனுசன் பம்புசெட்டை கழட்டறதென்ன? மச்சினிச்சியை மடக்கறதென்ன? வெட்டியானாக பெருசுகளைத் தொறத்தறதென்ன? அழுக்குச்சட்டைகளை கழுதைகளோடு வெளுக்கறதென்ன? மாடர்ன் ட்ரசுல பிகருங்களை ரவுசுவதென்ன? குருவி சுடும் துப்பாக்கியோடு புலி வேட்டைக்கு போவதென்ன? "நான் டெர்ரரிஸ்ட்”ங்கற செந்தில் கிட்ட ”என்னது? சரச்சிட்டு வந்தியா?”ங்கற வாய்க்கொழுப்பென்ன? அடடா! இளயராசா பாட்டு என்னைக்கும் இனிக்குங்கற மாதிரி கவுண்டரு காமெடி என்னென்னைக்கும் தமாசுதான்...

ராத்திரி 10:30 to 12:00 வரை அனைத்து தமிழ் சேனல்களும் வாழ்க... வாழ்க! :)

*****

ன்னய்யா படம் இது? முழுநீள த்ராபை - ஆமாங்க... ரெண்டரை மணிநேரம் ஒக்கார்றது கஸ்டந்தாங்க..

பொண்டாட்டிய ஊரோட ஜன்னலு வழியா சைட்டடிக்கறதுகு பேரு காமெடியாயா? கருமம்.. கருமம்... - கருமமா? கசுமாலக் கன்றாவிக்காட்சிதாங்க...

உங்க ஆளு ஒகேனக்கல்லு பிரச்சனைல இப்படியா அந்தர்பல்டி அடிக்கறது?! - தப்புதாங்க.. அவருக்கு “நாதாரித்தனம் செஞ்சாலும் நாசுக்கா செய்யனும்”னு தெரில... இடம் பொருள் ஏவல் தெரியாம வழக்கம் போல உண்மையா பேசி மாட்டிக்கினாருதான். ஆனா அந்தர்பல்டி அடிச்சுட்டாருன்னு இவரை கேக்கறதை விட ”எலும்புகளை உடைத்தாலும் ஒகேனக்கல் திட்டத்தை நடத்தியே தீருவோ”முன்னும் அப்பறமா ”அடுத்த கவருமெண்டு வர்றவரைக்கும் தள்ளி வைக்கறோமு”ன்னும் சொல்லிட்டு இப்ப இதைப்பத்தி மூச்சுகூட விடாம இருக்கற முதல்வர் கலைஞரைப் பார்த்து இக்கேள்விய கேக்கறதுதானுங்களே கரெக்கிட்டா இருக்கும்?!

கெஸ்ட் ரோல்ல நடிச்ச ஒரு படத்துக்கு 60கோடி ரூவா வியாபாரங்கறதெல்லாம் பிராடுத்தனம் இல்லையா?! - இருக்கலாங்க... லாபம் வரும்னு நம்பி வாங்கறாங்க.. நட்டம் வந்தா வயித்துல அடிச்சிக்கறாங்க. கார்ப்பரேட்டு, வினியோகிஸ்தருங்க, தியேடரு லீசுன்னு பல வியாபாரிங்க உலவற எடத்துல அவரும் சரக்கு விக்குது. கேட்ட விலை கிடைக்குதுன்னு ஒரு வியாபாரியாத்தான் இருக்காரு. இருந்தாலும் சரக்கு மதிப்புக்கு மேல விலைவைச்சு விக்கறது தப்புத்தாங்க...

விகடன், ரிப்போர்ட்டர், ஞாநின்னு கருத்துக்கணிப்பு திணிப்புன்னு பட்டய கெளப்பறாங்களேயய்யா?! - அதெல்லாம் உண்மையா இருந்தா வருத்தம்தான். பொய்யா இருந்தா சந்தோசம் :)

ஒரு கன்னட ஆளு இங்க வந்து இப்படி தமிழர்களோட உணர்வுகளோட வெளையாடறாருன்னு உனக்கெல்லாம் சொரணையே இல்லையா?! - அப்படியா? அவரு கன்னடத்துலயே வருத்தம் தெரிவிச்சிருந்தாலும் நான் அவரை அப்படியெல்லாம் பிரிச்சு நினைச்சதே இல்லைங்க... இது என்னோட விக்னெசுதாங்க.. என்ன செய்ய?

ஒரு சினிமாக்காரனுக்கு எதுக்கய்யா நாட்டுல இத்தனை முக்கியத்துவம்?! - அதேதாங்க எனக்கும் புரியல. அவரு சினிமாக்காரருதான். அவருக்கு எதுக்கு இத்தனை முக்கியத்துவம்?

இத்தனைநாள் பஞ்ச் டயலாக்குல அப்பாவி ரசிகர்களை தூண்டிவிட்டுட்டு இப்பத்திக்கு அது ஜஸ்ட் டைரக்டரு வைச்ச வசனம்னு ஜகா வாங்கறது அசிங்கமா இல்லை?! - அசிங்கமாத்தாங்க இருக்கு. அவரே சொல்லறது மாதிரி அவரு நல்லதும் கெட்டதும் செய்யற ஜஸ்ட் ஒரு மனுசருந்தாங்க. இப்படி ஊர் நிலவரம் தெரியாம வசனம் பேசுனது தப்புத்தாங்க.

சிரஞ்சீவில இருந்து இத்துப்போன கார்த்திக் வரைக்கும் கட்சி ஆரம்பிச்சுட்டாங்க... உங்க ஆளு என்னடான்னா... - விடுங்க.. அவருக்கு அது சரியா வரலை. சறுக்குதுன்னு தெரிஞ்சப்பறமும் அவருகிட்ட நான் அதை எதிர்பார்க்கறதில்லை...

இதெல்லாம் இப்ப எதுக்குடா இப்ப நீட்டி வாக்குமூலம் மாதிரி முழக்கறன்னா கேக்கறீங்க? நாலு நாளைக்கு முன்னாடி குசேலன் குடும்பத்தோட பார்த்தனுங்க.. படம் பப்படம் தான். நயந்தாரா சீனு கேவலந்தான். வடிவேலு சகிக்கலதான். பசுபதிக்கான கதைல அவரை பின்னால தள்ளுனது அலும்புதான். திரைக்கதைய வல்லாங்கு செஞ்சது வாசுவின் மகாமகா தப்புத்தான். இருந்தாலும் ரஜினி எங்க நிக்கறாருன்னா அந்த கடைசி 15 நிமிசத்துலங்க. அதுவரைக்கும் ஒரு காண்டுலயே படம் பார்த்துக்கிட்டு இருந்தவன் சடன்னா மனநிலை தலைகீழா உணர்வுக்குவியலா மாறிப்போயி கண்ணுல தண்ணி கரைபுரண்டோட அந்த 15 நிமிசம் அடடா! வேணாங்க... அதை வார்த்தைல விளக்க முடியாது. சந்தோசமா கண்களைத் துடைத்துக்கொண்டேன்.

சந்தோசம் எதுக்கா? இத்தனை களேபரங்களுக்கு அப்பறமும் நான் மாறிவிடவில்லை. மனதில் ஒரு குழப்பமும் இல்லை. இன்னமும் நான் ரஜினி ரசிகன் தான். நெஞ்சு நிமிர்த்தி சொல்லறேன்.

இதுக்கு மேலும் நான் ரஜினி ரசிகன் தான்! :)

*****

சில காலங்களாக மறுபடியும் என் அலும்பு ஆரம்பித்திருந்தது. எலக்கியத்தை கலையை பரிச்சயம் செய்துக்கொண்டு சாரசரி உலகைப்பார்ப்பதில் நாம் ஒருபடி மேலே இருப்பதாக நெனைப்பு வருவது உவப்பாக இருப்பதால் அதில் இனிமேலும் கொஞ்சமாவது அறிவை வளர்த்துக்கலாம்னு கஜினிமுகம்மது கணக்காக மீண்டும் முடிவெடுத்து, ஹிக்கின் புக் லேண்ட் எல்லாம் போய் புத்தகங்களாக அள்ளிட்டு வந்தும், பாரிஸ் கார்னரில் இத்துபோன திருட்டு டிவிடிக்களாக வாங்கிக்குவித்தும் ஒரே அலப்பரை. நைட்டானா... லீசுநாளானா போதும்... மெத்தைலை சாஞ்சுக்கினே நொறுக்ஸ்சோடு புத்தகத்துக்கு 10 பக்கங்களாக மாத்திமாத்தி படிப்பதென்ன? ஹெட்போனை மாட்டிக்கிட்டு லேப்டப்புல அவார்டு படமா பார்த்து தள்ளறதென்ன?

டெய்லர் கடை வரைக்கும் போகனும்? போலாமாங்க?

சாரிடா.. ஐயாம் டேக்கிங் சிவியர் ரெஸ்ட் அண்ட் பிஜி இன் ரீடிங்....

யப்பா.. க்ரையான்சுக்கு ஏம்பா க்ரையான்சுன்னு பேரு?

போய் அந்தண்ட வெள்ளாடு பாப்பா... அப்பா ஆபிஸ் வேலையா படம் பார்த்துக்கிட்டு இருக்கறேன்...

கதிர் வெளையாடறான் பாருங்க. கொஞ்ச நேரம் கூட இருங்க..

அடடா.. ரெண்டு நாளு எனக்குப்பிடிச்சதை செய்ய விடறயா? எப்பப்பாரு டிஸ்டர்ப் செஞ்சுக்கிட்டு..

அப்படியா சேதி? அப்ப அய்யா எப்ப ஃப்ரி ஆவிங்க?

ம்? கதவுல எழுதிப்போடறேன். தெரிஞ்சுக்கினு உள்ள வாங்க...

கவலையே படாதீங்க.. அதை நானே செஞ்சுடறேன்.

எங்கூட்டம்மாவும் எம்புள்ளையும் என்ன செஞ்சாங்களா? இதைத்தான்!



நல்லவேளை! மண்டைல இடம் இல்லாததால “மொட்டை”க்கு இடம் இல்லை. ”பாஸ் இன்” கூட ஓகே! ஆனா ”பாஸ் அவுட்” கீழாக இருக்கற சிரிப்பல்லுகளை பார்த்தாத்தான் கிலி கெளம்புது.

ராசா வேசம் கலையறதுக்குள்ள கலைச்சிற வேண்டியது தான்....

*****

மனசுக்கு நேர்மையாய் கூரான் செத்துப்போய் சில மாதங்களாகிறது. மற்றவர் வடிவமைத்ததே வாழ்க்கையென வாழ்ந்துகொண்டிருக்கும் எம்போன்றவர் மத்தியில் உனக்கு பிடித்தபடி நினைத்தபடி சில தினங்களேனும் நீ வாழ்ந்திருக்கக்கூடும். எங்களுக்குக் கிடைக்காத அந்த திருப்தியோடு... போய் வா நண்பா! :)

சறுக்குமிடம் காமம் எனில் நண்பன் சிறைக்காலம் முடிந்து விடுதலையாகி சில மாதங்களாகிறது. 5 வருட சிறை அனுபவத்தில் அவன் பெற்றது பல புதிய ஆய்வுக்கட்டுரைகளும் மேலும் சில புதிய கண்டுபிடிப்புகளுக்கான காப்பீட்டு உரிமைகளும் என கேள்விப்பட்டேன். வாழ்வில் சில கறைகள் அழிவதில்லை என்றாலும் வாழ்வையே அழித்து விடுவதில்லை போல. வளமாய் வாழ வாழ்த்துக்கள் நண்பா! :)

*****

விகடன் விமர்சனம், குமுதம் பேட்டி, வலைப்பதிவுகள்னு சரமாரியாக நடிகர் ஜே.கே. ரித்தீஸ் அவர்களைத் தூக்கி வைத்து கொண்டாடும் அவலநிலையை நாம் இப்போதெல்லாம் காணவேண்டியிருக்கிறது. ஆனால் பாட்டு, நடனம், வசனம்னு அனைத்து துறைகளிலும் அவரை களத்தில் வீழ்த்திய சாம் ஆண்டர்சன் அவர்களது “யாருக்கு யாரோ?” (Step Nee) என்ற திரைக்காவியத்தினைப்பற்றி எந்தவொரு விமர்சனமும், பேட்டிகளும் வராத நிலையை அண்ணன் சாம் அவர்களை இருட்டடிப்பு செய்யும் ஒரு தீய முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது. இருந்தாலும் இதனை எனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகக் கருதி சாம் அவர்களது திறமைகளை எடுத்தியம்புவதை ஒரு கடமையாகவே கொள்கிறேன்.

மொக்கைப்பட போட்டியில் குசேலனையே விஞ்சி நிற்கும் யாருக்கு யாரோ என்ற படத்தின் ஆங்கில காப்ஷனான STEP NEE என்பதன் அர்த்தத்தை கீழ்கானும் படத்துண்டில் கிளைமேக்ஸ் காட்சியாக அவர் வைத்திருந்ததைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை.



எதையும் தாங்கும் இதயம் இருந்தால் அவருடைய மற்ற திறமைகளையும் இங்கே கண்டு களிக்கலாம். அதனையும் மீறி முழுப்படமும் வேண்டுவோருக்கு தேடினாலும் கிடைக்காத திருட்டு விசிடியாக என்னிடமிருந்து பெறலாம். அண்ணன் சாம் அடுத்தப்படத்தினை முழுநீள ஆக்‌ஷன் படமாக எடுத்து அந்தத்திறனிலும் JKR அவர்களை களத்தில் வீழ்த்த ஆண்டவனை வேண்டுகிறேன். (கோடம்பக்க அண்டங்காக்காவின் அதிரடி கிசுகிசு: அண்ணன் சாம் ஆண்டர்சன் இந்த பெயரை வைத்துக் கொண்டுள்ளதே நாளப்பின்ன ஆஸ்கர் அவார்டு வாங்கும்பொழுது அவர்களுக்கு பெயரைச்சொல்லி கூப்பிட சிரமமில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்! )

*****

விடுதலையான டேவிட் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்? செத்துப்போன நாவரசுசின் வீட்டினர் இப்பொழுது எப்படி இருக்கின்றனர்?

மூன்று பிள்ளைகள் பொண்டாட்டியோடு தற்கொலை செய்துகொண்ட ஸ்டாலினின் சென்னை நண்பரது வழக்கு என்ன ஆனது?

சங்கராச்சாரியுடன் வழக்கில் மாட்டிய அப்பு எங்கே என்ன செய்துகொண்டிருக்கிறார்?

சிலுக்கின் தாடிக்கார நண்பர் இப்பொழுது எப்படி இருக்கிறார்?

கும்பகோணம் தீவிபத்து பள்ளியின் தாளாளர் தற்போது வருமானத்துக்கு என்ன செய்கிறார்?

பணமுடையில் பாதியில் நின்ற கோழிகூவுது விஜியின் தந்தை கட்டிக்கொண்டிருந்த கல்யாண மண்டபம் கட்டிமுடிந்து விட்டதா?

அயோத்திகுப்பம் வீரமணியின் இரு மனைவிகளுக்கு இடையே இருந்த சொத்துப்பிரச்சனை தீர்ந்து விட்டதா?

நாட்டு ரகசியங்களை ஜெராக்ஸ் போட்டு விற்ற திடீரென காணாமல் போன ரா உயரதிகாரி உயிருடன் இருக்கிறாரா? கொல்லப்பட்டு விட்டாரா?

ரபி பெர்னார்டு இப்பொழுது எங்கே இருக்கிறார்?

'ஙே' ராஜேந்திரக்குமார் என்ன ஆனார்?

லட்சுமியின் மகள் ஐஸ்வர்யாவின் முன்னாள் முதல் கணவர் போதையின் பிடியில் இருந்து மீண்டுவிட்டாரா?

சீவலப்பேரி பாண்டியை சுட்ட போலிஸ் அதிகாரி இன்னும் இருக்கின்றாரா?

உதவி இயக்குனரான நாகேஷின் மகன் ஆனந்த்பாபு மீண்டும் ஏன் லைம்லைட்டில் காணவில்லை?

மீனா தன் முதல் ஜோடியான மனோரமாவின் மகனிடம் நட்பு முறையிலாவது பேசுவார்களா?

தமிழ்க்குடிமகனின் அன்றாட அலுவல்கள் என்னென்ன?

பிரிந்து சென்ற கலைஞரின் முன்னாள் கார் டிரைவர் இப்பொழுது எப்படி இருக்கிறார்?

ஆட்டோ சங்கர் வழக்கில் அப்ரூவர் ஆனவர் இப்பொழுது பிழைப்புக்கு என்ன செய்கிறார்?


ஜீவி, ரிப்போர்ட்டர், நக்கீரன் வாங்குவதை நிறுத்திவிடலாம் தான்! அப்பறம் இந்த கேள்விகளுக்கெல்லாம் எனக்கு யார் பதில் சொல்லுவது?!


*****

பாவிகளே... உங்கள் பயத்தினின்று விடுதலை அடைய உங்களை.. உங்களை மட்டுமே நம்புங்கள்! - சரி ஆண்டவரே! நான் எங்கே இருக்கிறேன்? - வேறெங்கே? இருட்டினில்தான்! ஹாஹ்ஹா...

I am a man who walks alone
And when Im walking a dark road
At night or strolling through the park
....
....
....
....
Fear of the dark, fear of the dark
I have a constant fear that someones always near
Fear of the dark, fear of the dark
I have a phobia that someones allways there



- Iron Maiden - Fear Of The Dark

எனக்கான வாடகையை என் சமூகமே செலுத்தும்படி நான் பெரிய மனது கொண்டு அனுமதித்திருக்கிறேன்... நீங்கள்?

You dress me up, I'm your puppet
You buy me things, I love it
You bring me food, I need it
You give me love, I feed it

And look at the two of us in sympathy
With everything we see
I never want anything, it's easy
You buy whatever I need

But look at my hopes, look at my dreams
The currency we've spent
(Ooooh) I love you, oh, you pay my rent



- Pet Shop Boys - RENT

*****

ஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும் பொழுது மந்தையை விட்டு விலகுவதில்லை. மாறாக ஆடுகளுக்குரிய வாழ்க்கையை எவ்வித குற்ற உணர்வுமின்றி சந்தோசமாக வாழத் துவங்குகின்றன.