என்னது? ஓடிப் போலாமாங்கறதை மாத்தி தப்பா பாடறனா? கட்டிக்கிட்டதுக்கு அப்பறம் எங்கங்க ஓடறது? சம்சார சாகரத்தில் கெடந்துழல வேண்டியதுதான்! கட்டுனவ கிட்ட இருந்து ஓடிப்போயிடலாமாங்கற எண்ணம்கூட சிலநாள் வர வாய்ப்புண்டு! ஆனா கட்டுனவ கூட ஓடிப்போயிடலாம்னு ஒரு நாளும் நினைக்கத் தோணாது! ஆகவே, சிறப்பான இந்த பொருட்குற்றத்தோடு இன்னைக்கு பொங்கலை ஆரம்பிக்கலாம்.
கல்யாணங்கறது நெசமாவே ஒரு திருவிழாதாங்க! பார்க்கப்போனா நம்மை மையப்படுத்திதான் எல்லாமே நடக்கற மாதிரி ஒரு தோரணை இருக்கும்! ஆனா, நம்ம பேரை வைச்சு மக்கா கொண்டாடிருவாக! அய்யனாரு கோயில் திருவிழா என்னவோ அய்யனாரு பேருலதான் நடக்கும். ஆனா மொடமொடன்னு புதுத்துணி போட்டுக்கறது, சிறுசுக சேமியா ஐஸ், கடிகார ஜவ்வுமுட்டாய், கலர்கண்ணாடின்னு ஜமாய்க்கறது, வயசுப்பயக தோதான புள்ளைங்ககூட கண்ஜாடைலயே காவியம் படிக்கறது, பொம்பளையாளுக ஒத்துமையா ஒன்னுமண்ணா பொங்க வைக்கறது, ஆம்பளையாளுக மரத்துக்கு பின்னாடி கமுக்கமா பட்டைய ஊத்திக்கறது, கறிசோறு வேகறவரைக்கும் சீட்டுக்கட்டுல காச விடறது, பங்காளிககூட நின்னு போன பேச்சுவார்த்தைகளை புதுப்பிச்சுக்கறது, இல்லைனா புதுசா பஞ்சாயத்து ஆரம்பிக்கறதுன்னு பட்டரைய போட்டு கொண்டாடிருவாக! ஆனா அய்யனாருக்கு ஒரு புது துண்டும், ஒரு இலை படையலும், ஒரு பாட்டிலு சரக்கும் பீடிக்கட்டும் தான் மிச்சம்! ஆகவே மக்களே! கல்யாணத்தன்னிக்கு நீங்க ஹீரோ மாதிரி! ஹீரோ இல்லை!
எதெல்லாம் செய்தால் அன்றைய நாள் மறக்க முடியாததாக ( முக்கியமாக நமக்கு )இருக்குமோ அந்தமாதிரி திட்டமிட்டு இதனை செய்யலாம்! நம் சொந்தங்க எல்லாரும் சந்தோசப்படறமாதிரி செய்யனும்னு ஆசைப்பட்டா அது நடக்கற காரியமில்லை! எல்லாருக்கும் நல்லவங்கற கதையாகிரும். உங்கள் இருவீட்டாரது விருப்பமே முக்கியமாக இருக்கட்டும். சுத்தியுள்ள சொந்தங்க நம் ஆசைப்படி நடக்கும் கல்யாணத்துக்கு வந்து வாழ்த்தவேண்டும் என்பது பிரதாணமாக இருக்கவேண்டுமே தவிர, மத்தவங்க ஆசைப்படி திட்டமிட்டா நம்ம சந்தோசம் பறிபோயிருமப்பு! என்னது கொழப்பறனா? பொண்ணு வீட்டுலயும் நம்ம வீட்டுலையும் நமக்கு வசதியா மண்டபமோ, கோவிலோ பார்த்து கல்யாணம் வைக்கலான்னு ஒரு ஐடியா வைச்சிருப்போம்! இதைப்போய் உங்க ஜனங்க 50 பேர்த்தக்கூட்டி என்ன செய்யலாம்னு கேட்டுப்பாருங்க! சட்டசபை தோத்துரும்! "நம்ம குல வழக்கப்படி..", "நம்ம கொள்ளுத்தாத்தா காலத்துல இருந்து..." "இப்படிதான் நம்ப ஒன்னுவிட்ட சித்தப்பாவோட ரெண்டுவிட்ட சித்திபையன் செய்யபோக..." எடுத்து விட்டுக்கிட்டே இருப்பாங்க! நம்மாளுக விருப்பமெல்லாம் பொண்ணு வீட்டாரு ஒத்துக மாட்டாக! அவிங்க சொல்லறதெல்லாம் "அதென்ன நாம கேக்கறது?!"ன்னு கெத்து காட்டற மேட்டரா மாறிடும்! எனவே மக்களே! முடிவுகளை இருவீட்டாரும் எடுங்கள். எடுத்த முடிவுகளை சுற்றத்துக்கு அறிவியுங்கள்! முடிவெடுப்பதை பரவலாக்காதீர்கள்.
என்னைக்கு கல்யாணத்துக்கு மனதளவில் தயாரானமோ அன்னைக்கு இருந்து சக்திக்கேத்தமாதிரி சேர்த்த ஆரம்பிச்சோமில்ல? அது இப்போதைக்கு ஒரு பெரிய ஒன்னோ ரெண்டோ ஆகியிருந்தா சந்தோசம்! கல்யாணம்னா எல்லாம் பொண்ணு வீட்டுலயே செய்வாக.. நாமபோய் தாலி கட்டுனா போதுங்கற காலமெல்லாம் போயிருச்சப்பு! இன்னைக்கெல்லாம் செலவுகளை கணக்கெழுதி சரிபாதியா பிரிச்சுக்கற காலம்! என்னதான் உங்களுக்கு எல்லாம் செய்யற மாமனாரு கெடைச்சாலும், பத்திரிக்கை, துணிமணி, வரப்போறவளுக்கு போடற நகை அப்படி இப்படின்னு ஒரு பெரிய ரூவாய்க்கு கொறையாம பழுத்துரும்! கல்யாணம் செஞ்சுக்கற வயசாகியும் இதை நம்ம பெத்தவுக கிட்ட இருந்து வாங்குனா நாமெல்லாம் சுயமா நிக்கறதுக்கு அர்த்தமில்லாம போயிரும்! நம் கல்யாணச்செலவுக மொத்தமும் நாம் சுயமாய் சம்பாதித்ததில் செய்வதில் இருக்கிறது சுகமும், பெத்தவுகளின் சந்தோசமும், நம் குடும்ப கவுரவமும்!
நிதிமந்திரி மாதிரி பைசா சுத்தமா திட்டம் போட்டெல்லாம் கல்யாணம் நடத்துனா வேலைக்காவாது! தொட்டதுக்கெல்லாம் காசு பறக்கற நேரமது! அதுக்காக திட்டமிடாமலும் இருக்கக்கூடாது! உங்க திட்டத்துல 60% அதுபடி நடந்தாவே ப்ராஜெட்டு சக்சஸ்தான்! இந்த பொம்பளையாளுக செய்யற செலவையெல்லாம் கணக்குல எடுத்துக்கனுமே தவிர கணக்கு கேக்கப்படாது! அதெல்லாம் உணர்வுகள் வகைப்படும்! நமது பகுத்தறிவை காட்டறதா நெனைச்சுக்கிட்டு "ஒரே ஒரு நாளு கட்டிக்கறதுக்கு 20 ஆயிர ரூவா பட்டுப்புடவையா?!" "ஒரு நெக்லெஸ் வாங்கறதுக்கு 20 பேர்த்த கூட்டிக்கிட்டு ஏழெட்டு கடை ஏறியிறங்கனுமா?"ங்கற உங்க சலிப்பையெல்லாம் அறிவுக்கணைகளாக மாத்தி தொடுத்துக்கிட்டே இருந்தீங்கன்னா அதால அப்போதைக்கு ஒரு பயனும் இருக்காது! "ஆம்பளைகளுக்கு என்னைக்கு இதெல்லாம் வெளங்கியிருக்கு!"ங்கற மொனகலோடு கூட முடியாது! நாளப்பின்ன அந்த பொடவைல ஒரு சின்ன காபிக்கறை பட்டாக்கூட "அன்னைக்கே உங்க நொள்ளைக்கண்ணு பட்டதாலதான் இப்படி"ன்னு கொமட்டுல குத்தறதுல போய் முடியக்கூடும்!
ஆமாங்க! கல்யாணங்கறது ஒரு நாள் கூத்துதான்! ஆனா கெடைச்ச இந்த ஒரு சான்சுலையாவது ஒழுங்கா கூத்து கட்டனுமில்ல? ஆகவே, எல்லா விதத்திலும் ஜமாய்ச்சிருங்க! 10000 கலர் புடவையா? டிசைனர் ஷெர்வானியா? மத்தியானத்துக்கு ரெண்டு ஸ்வீட்டா? சாயந்தரம் ஆர்கெஸ்ட்ராவா? வந்தவுகளுக்கெல்லாம் தாம்பூலப்பையோட திருக்குறள் புத்தகமா? எதுவாக இருந்தாலும் உங்கள் சக்திக்கும் கொள்கைளுக்கும் உட்பட்ட உச்ச அளவெனில் அனைவருக்குமே ஆனந்தம் தான்! தயவு செய்து கல்யாணத்துக்கு வந்தவர்கள் அனைவருக்கும் ஒரேமாதிரி செய்யுங்கள்! சிலரை மற்றும் தேர்ந்தெடுத்து தனியா ஜாக்கெட் பிட்டோ இல்லைனா குங்குமச்சிமிழோ கொடுக்காதீர்கள்! பந்தில பணக்கார பிரபலங்களை பட்டும் விழுந்து விழுந்து கவனிக்காதீர்கள்! நம் அழைப்பை ஏற்றுவரும் அனைவருமே ஒரே தரம்தான். அப்படி கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயமெனில் தயவு செய்து இந்த இடத்தை தவிருங்கள்! எல்லாருமே மனுசங்கதான்! சிலர் மட்டும் மற்றவர்களை விட உசத்தி எனக்காட்டும் இந்த செய்கை உங்களுக்கு கிடைத்த வாழ்த்துக்களை விட காழ்ப்புணர்ச்சியை அதிகம் பெற்றுத் தரக்கூடும்!
ரெண்டுநாள் கல்யாணம், மூணுவேளை விருந்து என இருக்கப்போகிற இந்த நேரத்தில் முடிஞ்சா சில நல்ல காரியங்களும் செய்யுங்க! மண்டபத்திற்கு பக்கத்துல இருக்கற ஒரு முதியோர் இல்லமோ அல்லது குழந்தைகள் காப்பகமோ கண்டுபிடித்து அவர்களுக்கும் அதே விருந்து போடுங்க! மொதபந்தி ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அவங்களுக்கு அனுப்பி வைச்சிருங்க! சொந்தபந்தங்களின் ஆயிரத்தெட்டு விருப்பு வெறுப்புகளுடன் நடக்கும் கல்யாணத்தில் முகம் தெரியாத அந்த மனுசங்களுக்கு வயிறார சாப்பிடும் அந்த உணவு கொடுக்கும் சந்தோசம், நமக்கு கிடைக்கும் வாழ்த்துக்களை விட எந்த விதத்திலும் குறைந்ததல்ல! ஒரு 100 டிபன், சாப்பாடு எந்த விதத்திலும் நமக்கு அதிக செலவை வைத்துவிடப்போவதில்லை! இது சமூகசேவை இல்லைங்க! நாலுபேரு அந்த சாப்பாடுனால சந்தோசப்பட்ட அது நமக்கு நன்மையா முடியுங்கற சுயநலமாவும் கூட இருக்கலாம்னு எடுத்துக்கங்க.
இந்த ஒரு நாள் கூத்தை கடைசிவரைக்கும் நினைவுல வைச்சிருந்து சந்தோசப்படவோ, மனசுக்குள்ள ஏக்கப்படவோ வைக்கப்போறது நல்ல வீடியோகாரரோட கைங்கர்யம்தான்! அதுவும் தாலிகட்டறதுக்கு முந்தினநாள் பொண்ணுமாப்ளைக்கு மட்டும் நலங்கோ, ரிசப்சனோ முடிஞ்ச அன்னைக்கு நைட்டு ஒரு போட்டோசெஷன் வைப்பாங்க! இது ஆரம்பிக்கறதுக்கே நைட்டு 12 மணிக்கு மேல ஆகிறும்! மண்டபத்தை சுத்தி செடிகொடி இருக்கற எடமாப்பார்த்து கூட்டிக்கிட்டு போய் லைட்டைபோட்டு நிக்கவைச்சி, ஒக்காரவைச்சி, பக்கம்பக்கமா ஒட்டிக்கிட்டு இருக்கறமாதிரி சிரிக்கவைச்சி, ஸ்லோமோசன்ல நடக்கவைச்சி... சும்மா சிவாஜி ஷூட்டிங் தோக்கற அளவுக்கு நம்மை வைச்சி சுட்டுத்தள்ளுவாங்க! அதையெல்லாம் க்ராபிக்ஸ் வேற சேர்த்து, ஸ்விட்சர்லாந்து புல்வெளில ஒக்கார்ந்துகிட்டு இருக்கறமாதிரியோ இல்லைனா நைனிடால் ஏரில கையில ரோசாப்பூவோட ஒரு மெதப்புல மெதக்கறமாதிரியோ விதவிதமா மாத்தி கலக்குவாங்க! அவங்க சொல்லற மாதிரியெல்லாம் வெக்கப்படாம போஸ் கொடுங்க! நமக்கெல்லாம் இந்த ஷீட்டிங்ல நடிச்சாத்தான் உண்டு! ஒரு வேலையை தொழில்னு நினைச்சு செய்யறதுக்கும் மனசுக்குப்பிடிச்ச கலை அப்படின்னு நினைச்சி செய்யறதுக்கும் நிறைய வேறுபாடு உண்டு! நீங்க நல்லா உற்சாகமா இருந்து ஒத்துழைச்சு விதவிதமா போஸ் கொடுக்க ஒத்துழைச்சாத்தான் போட்டோ புடிக்கறவரும் உற்சாகமாகி அம்சமா படமெடுத்துக் கொடுப்பாரு! ஆல்பம் பார்க்கறப்ப நமக்கும் அதே சந்தோசம் மறுபடியும் தொத்திக்கும்! நினைச்சுப்பாருங்க! அரைத்தூக்க கலக்கத்துல உர்ர்ருன்னு மூஞ்சை வைச்சுக்கிட்டு இருந்தா நாளப்பின்ன அதை நமக்கே பார்க்கதோணுமா என்ன? இன்னொன்னும் மனசுல வைச்சுக்கங்க! நம் காதலியுடன் காதலுடன் இருக்கும் கடைசிக்கட்ட தருணங்களின் எவிடெண்சு இது! ஆகவே...
கல்யாணத்துக்கு வரப்போகிற கூட்டாளிக தங்கி கூடிக்கும்மியடிக்க ரூம் போடறதுல இருந்து அவங்களுக்கு சரக்கு தேத்தறதுவரை உங்களுக்கெல்லாம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை! பேட்சுலர் பார்ட்டியெல்லாம் இன்னனக்கு நேத்தா போறீங்க?! அதைத்தானே அஞ்சாரு வருசமா எவன் கல்யாணம்னாலும் செஞ்சுக்கிட்டு இருக்கோம்! ஆனா அந்த கும்பல ஒரே ஒரு பொறுப்பான ஆளை மட்டும் கண்டு வைச்சுக்கங்க! முகூர்த்ததுக்கு முன்னாடி அத்தனை பேரையும் எழுப்பி மப்பு தெளியவைச்சி, மேலுக்காவது குளிக்கவைச்சி, ஒரு மார்க்கமா தேத்தி, லாட்ஜ் கணக்கு முடிச்சு, தூக்கம் சொருகும் கண்களோட மண்டபத்துல கொண்டுவந்து டெலிவரி செய்யறதுக்கு உதவுவாப்புல! எல்லா கேங்க்லையும் ராஜான்னு ஒருத்தன் இருப்பாங்கற மாதிரி தண்ணிபோடாம, தம்மடிக்காம, ஊத்திக்கொடுத்து , ஸ்நாக்ஸ் வாங்கிவந்து, வாந்திய கழுவி, படுக்கவைக்கறதுக்குன்னே ஒரு பழ ஃப்ரண்டு இருப்பாப்புல! ஆகவே இதுக்கும் நமக்கு பிரச்சனையிருக்காது! இந்த விசயத்தை ஒரு கல்யாணத்துல கோட்டைவிட மக்கா எல்லாரும் விடியவிடிய ஆட்டங்கட்டி 7 மணி முகூர்தத்துக்கு மத்தியானம் 1 மணிக்கு எழுந்து அப்படியே ஊருக்கு போயிட்டானுவ!
கெட்டிமேளம் கொட்ட, தாலிய எப்படி எப்ப கையில எடுத்தோங்கறது வெளங்காம, நாலாப்பக்கமும் இருந்து அரிசிக தலைலையும் கண்ணுலையும் விழ, எப்படி அந்த மூணு முடிச்சை போட்டோம்கறது புரியாம தாலி கட்டீட்டிங்களா? கலக்கீட்டிங்க! அம்புட்டுத்தேன்! "WELCOME TO THE REAL WORLD!" என்னது? இது "The Matrix"ல Morpheus, Neoக்கு சொன்னதா? இதெல்லாம் ஆண்டாண்டு காலமா நம்ப பெருசுங்க சொல்லிக்கிட்டு வர்றதுங்க!!! ஆண்கள் உலகம் என்ற ஒரு மாயை உலகிலிருந்து இருபாலர் உலகம் என்ற நிதர்சன உலகத்திற்கு உங்களை வரவேற்கிறோம்! :))) இனிமேல் உங்களது இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, இலட்சியம், சாதனை, சோதனை, கொள்கை, புண்ணாக்கு, வாழைமட்டை என எதுவுமே உங்களுடையது மட்டுமல்ல! உங்களது வாழ்க்கையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவுமே உங்களது முடிவுகளுக்கு மட்டுமே உட்பட்டதல்ல! உங்களுடைய Personal Area என்பது உங்களுக்கானது மட்டுமல்ல! உங்களுடைய நடை, உடை, பாவனை, பழக்கவழக்கம், ரசனைகள், புரிதல்கள் என அனைத்திலும் மாறுபட்ட ஒரு ஜீவனுடன் ஆரம்பிக்கிறது உங்கள் வாழ்க்கைப்பயணம்! உங்களுடைய வாழ்க்கை, அனுபவம், சகிப்புத்தன்மை, காதல், பொறுமை, நட்பு, விட்டுக்கொடுத்தல், பரஸ்பர நேர்மை, பெண்ணீயம் போன்ற அத்தனை நம்பிக்கைகளும் எந்த அளவுக்கு உண்மை என்பதை உங்களுக்கே தெரியாத உங்களை உங்களுக்கு எடுத்துக்காட்டுவதன் மூலம் புரியவைக்கப்போகும் பிரிக்கமுடியாத பிணைப்பில் விரும்பி கைநாட்டு வைத்த உங்கள் தில்லுக்கு முன்னால் பேச்சுலர் வாழ்க்கையில் கிடைத்த சிற்றின்பங்கள் என்பது ஒன்றுமேயில்லை!
கல்யாணம் முடிஞ்ச உடன மாப்ளை அப்படியே பூரிப்புடன் மண்டபத்துல வளைய வருவதும், பொண்ணு சொந்தங்களை பிரியறனேன்னு அவங்களை தனித்தனியா பார்த்து கண்ணை கசக்கறதும் இயல்பான நிகழ்வு! இருவருக்குமே இதுதான் இந்த செயலை செய்வதற்கான கடைசி சந்தர்ப்பம் என்பதால் அனுபவித்து செய்யுங்கள்! :) நாமெல்லாம் அவதி அவதியா 15நாள் லீவுல கல்யாணத்துக்குன்னு நம்ப வீட்டுக்கு வந்திருப்போம்! அவுக எல்லாம் வீட்டிலிருந்து நம்பிக்கட்டியவனுடன் விடுதலை என கெளம்பி வர்றவுக! நமக்கு வீட்டுலையே நிம்மதியா இருக்கனும்னு தோணும். அவங்களுக்கு புது இடம்கறதால வெளில காதலுடன் சிறகடிக்கத்தோணும்! ஆகவே மக்களே! இந்த தேனிலவு என்பதை தாலி கட்டிய 10 நாட்களுக்குள் நிறைவேற்றிவிடுங்கள்! அது கொடையோ, கோவாவோ இல்லை மொரீசியஸோ மறக்காம கொஞ்சம் சிரமம் பார்க்காம போயிருங்க! இதுல தவற விட்டீங்கன்னா, இந்த சான்சு நார்மல் குடும்பம் குட்டின்னு வந்தப்பறம் என்னென்னைக்கும் கிடைக்காது! கெடைச்சாலும் முக்கியமா அந்த காதல்மயக்கமும் கெரக்கமும் கண்டிப்பா இருக்காது! "வீட்டுல கேஸ் மூடிவைச்சமா?", "ஆபீசுல லேட்டஸ்ட் பாலிடிக்ஸ் நெலவரம் என்ன?" ங்கற நெனப்புதான் மனசுல இருக்குமே ஒழிய இயற்கை அழகையும், இறைவன் நமக்காக எனவே அளித்த பரிசின் அழகையும் ரசிக்கற மனநிலை இருக்காதப்போவ்! தேனிலவு என்பது நமக்கு இல்லறத்தின் ஆரம்ப எஞ்ஜாய்மெண்டு... அவிங்களுக்கு ஒருபக்க விடுதலையின் அறிவிப்பு சாசனத்தின் முதல்பத்தி... சுருக்கமா சொன்னா தேனிலவை தவற விட்டவன் வாழ்க்கை, சொர்க்கத்தை பைபாசுல தாண்டி வண்டிய நரகத்தில் ஹால்ட் அடிச்சதுக்கு சமம்!
ஆகக்கூடி, நடந்துக்கறமோ இல்லையோ, அய்யன் சொன்ன இந்த குறளை மனசுல ஒரு ஓரமா பதியம் போடுங்க! அது செடியா மரமா நாம நடந்துக்கறதை பொறுத்து அதுவாகவே வளர்ந்துரும்...
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது"
என்னது?! உங்க அய்யன் இதெல்லாம் சொன்னதில்லையா? இது அய்யன் வள்ளுவரப்பு! என்னது? வள்ளுவர் யாரா? ம்ஹீம்! இதெல்லாம் ஆவறதில்லப்பா! (என்னதான் இன்னைக்கு வைகைப்புயல் வந்துட்டாலும் நமக்கு அய்யன் என்னைக்குமே கவுண்டபெல்தான்! :) )
--------
1. கல்யாணமாம் கல்யாணம்! - ஒரு முன்னுரை!
2. மக்கா! நீ மனசளவிலும் தயாரா?
3. தேவையான சில மாற்றங்கள்
4. புள்ள புடிக்கலாம் வாங்கப்பு
5. காதலிக்க நேரமுண்டு காத்திருக்க இருவர் உண்டு