நமக்கு நேரமே சரியில்லைங்க! எந்த நேரத்துல பயத்தை பத்தி எழுதுனனோ தெரியலை வாழ்க்கைல எல்லாமே ஒரு மார்க்கமாவே நடக்குது! சொந்தக்கார பயக ஊருல இருந்து வந்திருக்காங்களே.. அவிங்களை பேங்களூரு சுத்திக்காட்டலாம்னு ஒரு நல்லெண்ணம் இருந்திருந்தா ஒழுங்கா MG Roadக்கு கூட்டிட்டுபோயி வண்ணக்கோலங்கள் காட்டிட்டு(இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேற! ) அப்படியே ஒரு அஞ்சுநக்கி( அதாங்க 5 ரூபா கோன்ஐஸ்...) வாங்கிக்குடுத்து அப்படியே பஸ் ஏத்தி அனுப்பியிருக்கலாம்! அதை விட்டுட்டு புதுசா ஒரு கடைவீதி ஒன்னுல நிறைய தியேட்டரு எல்லாம் இருக்கு வாங்கப்பு காட்டறேன்னு PVRக்கு கூட்டிக்கிட்டு போனனுங்க. அங்க போயி வழக்கம் போல வாசப்படில கொஞ்சநேரம் ஒக்கார்ந்து தரிசனம் பார்தோமுங்களா( என்னண்ணே இது? எல்லா புள்ளைங்களும் பத்தாத துணியே போட்டிருக்காளுங்க..! ) அப்பறம் வழக்கம் போல BOSEக்கு போயி ஹோம்தியேட்டரு டெமோ பார்த்தோமுங்களா.. அதுக்கப்பறம் அப்பிடியே திரும்பாம இன்னும் ஒரு ஃப்ளோரு மேல போனதுதாங்க தப்பு! "அண்ணே கடையெல்லாம் நல்லாத்தான் இருக்கு! அப்பிடியே ஏதாவது படமும் பார்த்திறலாம்!"னானுவ! சிவகாசி இல்லை(எல்லாம் விதியப்போவ்!) ..மஜா இல்லை! சரி வந்தது வந்தோம்.. வாங்கப்பு.. புதுசா ஒரு இங்கிலீசு படம் வந்திருக்கு... போலாம்னேன்! அப்பவே ஒரு மாதிரிதான் பார்த்தானுவ!
வெள்ளிக்கிழமைன்னா ஒரு டிக்கெட்டு 150தாம்! நாலு பேருக்கு 600! எங்க ஊரு மஞ்சுநாதால எங்க பரம்பரையே இடைவேளை கடலை, பொவண்டோவோட சேர்த்து ஒருவாரம் வாத்தியாரு படமும் ஜகன்மோகினியுமா பார்த்துத்தள்ளியிருக்கலாம்! உள்ளார போறப்ப பாஜாஜ் பைக்க ஓட்டிக்கினு ஒருத்தரு உலகத்துல இருக்கற எல்லாத்தையும் மன்னிச்சுகினு இருந்தாரு! அப்படா! படம் ஆரம்பிக்கலை.. மொதல்ல இருந்து பார்த்தா கண்டிப்பா புரியும்னு நெனைச்சித்தான் பார்க்க ஆரம்பிச்சோம்! வார்னரு பிரதர்ஸ்சு புரடக்ஸனாம்! என் கண்ணே பட்டுடும் போல! எத்தனை காலமா அண்ணன் தம்பிங்க ஒத்துமையா படம் எடுக்கறாங்க...( இங்க AVMமே புட்டுக்கிச்சு! ) இதுவரைக்கும் கரைட்டா போச்சுங்க..
அப்பறம் அனாந்தரத்துல இருக்கற ஒரு வீட்டுல லைட்டு எரியிதுன்னு ஒரு வாச்சுமேனுதாத்தா பாக்க போறாருங்கலா.. அங்க கெட்டவங்க 3 பேரு தாத்தாவ போட்டுத்தள்ளற மாதிரி சீனு. என்னன்னு பார்த்தா அது பாட்டரோட கனவு! அப்பறம் பாட்டரு படிக்கற பள்ளிக்கூடத்துல ஒரு மாயமந்திர போட்டி வைக்கறாங்களா... அதுல கலந்துக்க பறக்கற ஜட்கா வண்டிலையும், நீர்மூழ்கி பாய்மரக்கப்பல்லையும் பக்கத்து பள்ளிக்கோடத்து பயபுள்ளைங்க வராங்களா! அவிங்கள்ள 4 பேர்த்த போட்டிக்கு தயாரு பண்ணறாங்களா! அதுல ஒருத்தனா பாட்டரை கெட்டவன் ஒருத்தன் கோல்மாலு செஞ்சி சேர்த்துவிட்டறானுங்களா... அப்பறம் மொத போட்டில பாட்டரு வெளக்குமாத்துமேல மிக்29 கணக்கா பறந்துகவுந்து ஒரு தங்கமுட்டைய புடிக்கறாருங்களா..அதுக்கப்பறம் ரொம்பப்பேரு பேசிக்கினே இருந்தாங்களா... அதுக்கப்பறம் ரெண்டாவது போட்டில தண்ணிக்குள்ளாற தம்கட்டி கூட்டளிங்களை காப்பாத்துறானா.. அப்பறம் சின்னப்புள்ளைங்க ஜோடி சேர்ந்து டான்சு கட்டறாங்களா! ( பாட்டாளிகளுக்கும் சிறுத்தைகளுக்கும் அடுத்தவேளை ரெடி! இந்த சீனுல பாட்டரும் அவன் கூட்டாளியும் இந்தியப்பெண்டுககூட டான்சு ஆடாம வேணும்னே உதாசீனப்படுத்தீருவாய்ங்க! ஜடை, தாவணியெல்லாம் போட்டு தமிழ்ப்பொண்டுக மாதிரியே இருப்பாங்க! என்னே நம் பெண்களுக்கு வந்த சோதனை...! ) அப்பறம் உள்ளுக்குள்ள 40 வாட்ஸ் பல்புபோட்ட ஒரு கண்ணாடிகோப்பைதான் பிரைசுன்னு காட்டறாங்களா... அப்பறம் ஒரு மாயப்பூங்கால உள்ளபூந்து வெளிய வரசொல்லறாங்களா.. அப்பறம் பாட்டரும் அவன் புதுக்கூட்டாளியும் வெளியவரச்சொல்ல கெட்டவங்க இருக்கற எடத்துல போயிமாட்டிக்கினு புதுக்கூட்டாளி வாயப்பொளந்துற்றானா.. அப்பறம் பாட்டரும் மெயினு கெட்டவனும் தீபாளி சாட்டைவெடி மாதிரி கையில வைச்சிக்கினு கொஞ்சநேரம் வெளிச்சம் காட்டறாங்களா.. அப்பறம் கெட்டவனை சாவடிக்காமயே பாட்டரு தப்பிச்சு வந்துடறானா...அப்பறம் பள்ளிக்கோடத்துல கூட இருந்த ஒத்தைக்கண்ணு வாத்தியாருக்குள்ள இருக்கறவன்தான் கெட்டவன்னு அவனை தலைமைவாத்தியரு கண்டுபுடிக்கறாரா.. அடடா.. எங்கப்பு ஓடறீங்க? சரி விடுங்க.. கழுதைக்கு தெரியுமா...? எனக்கு தெரிஞ்ச இங்கிலீசுக்கு இவ்வளவுதான் புரிஞ்சது!
படத்துக்கு குடும்பத்தோட வராங்க.. பேரு போடும்போது கைதட்டறாங்க.. பாட்டரு பறந்தா விசிலு அடிக்கறாங்க.. திடீர் திடீர்னு சிரிக்கறாங்க...! எல்லாம் சரிதான்... நாம சின்னவயசுல படிச்ச ஆறுகடல் ஏழுமலை தாண்டி ஒரு சின்ன குருவிக்குள்ள இருக்கற மந்திரவாதி கதைகள் இதைவிட எந்தவிதத்துலயும் கொறைஞ்சது இல்லைங்கறது என்னோட தாழ்மையான கருத்து! சரி விடுங்க.. ரெண்டுமே செருப்பு செய்யற கம்பெனினாலும் நாம அடிடாஸ் பனியன போடுவோம்! அது நாகரீகம்... ஆனா 500 ரூவா குடுத்தாலும் பாட்டா படம் போட்ட பனியன போடுவமா? அதுமாதிரிதான் இதுவும்னு எடுத்துக்க வேண்டியதுதான்!
இன்னொன்னும் பார்க்கனுங்க.... இந்தக்காலத்து குஞ்சுகுளுவனுக்களுக்கு பாட்டியா கூட இருக்கறாங்க இப்படி கதை சொல்லிவளர்த்தறதுக்கு? எப்படியோ பாட்டி மூலமா இல்லைன்னாலும் பாட்டரு மூலமாவது கற்பனைத்திறம் வளர்ந்தா சரி! என்ன நான் சொல்லறது?
நிற்க: ஏற்கனவே மீனாக்ஸு விமரிசம் படிச்சு புல்லரிச்சு நான் போய் மாட்டுனது சிவகாசி! இப்போ அவரும் ரெண்டாவது ஆட்டம் பாட்டரு வந்திருக்காரு போல! கண்ணுல பட்டிருந்தா 200ரூவா சிவகாசிக்கு நஷ்டஈடு கேட்டிருக்கலாம்! தப்பிச்சிட்டாரு! சரி விடுங்க... 'ஆதி'ல பார்த்துக்கலாம்!
மறுபடியும் நிற்க: சொந்தக்கர பயலுவ இதோ இப்ப வரைக்கும் எங்கூட சரியாப்பேசாம அந்தப்பக்கமா திருப்பிப்படுத்திருக்கனுவ!
"டவுனுக்குப்போயி நல்ல படம் காட்டுனானப்பா அண்ணன்"ன்னு டங்குவாரு டணால் ஆகப்போதுங்கறது உறுதி!
மறுபடியும் மறுபடியும் நிற்க: மூனு 'உம்' விகுதியெல்லாம் போட்டு தலைப்பு வைச்சிருக்கறதால ஏதோ அதிபயங்கர விமரிசனம்னு நினைச்சுடாதிங்க.. வழக்கம்போல நம்ப பொலம்பலு.. அவ்வளவே!
//எங்க ஊரு மஞ்சுநாதால எங்க பரம்பரையே இடைவேளை கடலை, பொவண்டோவோட சேர்த்து ஒருவாரம் வாத்தியாரு படமும் ஜகன்மோகினியுமா பார்த்துத்தள்ளியிருக்கலாம்!//
பதிலளிநீக்கு//வார்னரு பிரதர்ஸ்சு புரடக்ஸனாம்! என் கண்ணே பட்டுடும் போல! //
:))))
//வெளக்குமாத்துமேல மிக்29 கணக்கா பறந்துகவுந்து //
இது என் காப்பி ரைட்டு!!! :(
மருத்துவர்கள் பத்தி சொல்லாதததுக்கு கேஸ் போடலாமுன்னு நினச்சுகிட்டுருக்கேன்.. அப்படியே மென்பொருளாளர்கள் குறித்தும் (நன்றி: கோ.கணேஷ்) நல்லது சொல்லாததுக்கு கேஸ் போடலாமுன்னு யோசிங்க.
//ஒரு நல்லெண்ணம் இருந்திருந்தா ஒழுங்கா MG Roadக்கு கூட்டிட்டுபோயி வண்ணக்கோலங்கள் காட்டிட்டு(இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேற! //)
பதிலளிநீக்குநல்லாயிருக்கிற பிள்ளைகள கொடுக்கிறதே., இந்த ரிட்டையர் (வண்ணக் கோலங்கள் பார்க்குறதுல இருந்து) கேஸூங்கதாம்ப்பா.
நான் இரண்டாம் ஆட்டம் பார்த்தது MG ரோடில் உள்ள Symphony திரையரங்கில். நல்ல வேளை நீங்கள் அங்கே பார்க்கவில்லை. இந்த அளவுக்கும் கூட உங்களுக்குப் புரிந்திருக்காது. திரை முழுக்க ஒரே இருட்டாக இருந்தது.
பதிலளிநீக்குஇராமநாதன், சரி விடுங்க. மிக்29ன்னாலே அது இனி உங்களதுதான்!
பதிலளிநீக்குஅப்டிபோடு! NASA, Undergroundனு PUBக்கு போக இருந்தவனுங்களை நல்லப்புள்ளைத்தனமா படம் பாக்க கூட்டிக்கினுப்போனதுக்கு எனக்கு இந்த நல்லபேரா?!
மீனாக்ஸ், இங்கனையும் கொஞ்சம் இருட்டாத்தான் தெரிஞ்சது. //இந்த அளவுக்கும் கூட உங்களுக்குப் புரிந்திருக்காது// அதுசரி.. அப்போ நான் சொன்ன கதை சரிதானா?
இளவஞ்சி, நம்ம ஆளுங்க சைக்காலஜி தெரியாம இருக்கீங்களே ;-) ஊருக்கு போனதும் கதையே மாறிடும். "சூப்பர் படம், டிக்கிட்டு வெல என்ன தெரியுமா? நம்ம ஆளுங்களும் எடுக்குறாங்களே... (கெட்ட வார்த்தை)" என்று வெள்ளைகார துரையின் பெருமையல்லாவா பேசப்படும்? சிவகாசி, மஜா புகழ் பாட வந்தவர்கள் நாணி தலையை குனிய செய்யும் அளவு ஆலிவுட்
பதிலளிநீக்குடெக்னிகல் சமாசாரங்கள் எடுத்து விடப்படும் :-)))
உஷா! இதுல இப்படி ஒரு மேட்டரு வேற இருக்கா? :)
பதிலளிநீக்குகேபிள் புண்ணியத்துல HBO, Star எல்லாம் எங்க ஊரு வரைக்கும் போயிருச்சுங்க.. சில படங்க கதையெல்லாம் அவிங்க சொல்லித்தான் எனக்கே தெரியுது! இன்னும் ஆர்னார்ல்ட் சிவநேசனுக்கு மன்றம்தான் ஆரம்பிக்கலை! ஆனா PVR பத்தி பயங்கரமா பீத்திக்குவாங்கன்னு நினைக்கறேன்! :)
ஐயகோ இளவஞ்சி...........இப்படிப் பண்ணீட்டீங்களே..........ஹாரி பாட்டர் படத்தை எதுத்து பதிவு போட்டுட்டீங்களே..........இது நாயமா? நீதியா? தருமமா? சரி. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு டேஸ்ட். (நீங்க புத்தகத்தைப் படிக்கலைன்னு நெனைக்கிறேன்.)
பதிலளிநீக்குஇருந்தாலும் ஹாரி பாட்டர் படத்தை எதுத்து பதிவு போட்டதால, இன்னோவேடிவ் மல்டிபிளக்சில் வெள்ளி இரவே படம் பார்த்த இராகவன் -ve ஓட்டு போடுறான்.
// ஆனா PVR பத்தி பயங்கரமா பீத்திக்குவாங்கன்னு நினைக்கறேன்! :) //
பதிலளிநீக்குPVR-ல பாத்தீங்களா! நாங்கூட INOXல பாத்தீங்களோன்னு நெனச்சேன். புதுசா வந்திருக்குற மால் கருடா-தானே.
ராகவன்! பாட்டரை எதுத்தெல்லாம் எழுதலைங்க! இந்த கதைக்குபோய் எப்படி ஒலகம்பூரா இப்படி ஒரு இதுன்னு புரியாம இப்படி... ஹிஹி.. மறுபடியும் ஒன்னு குத்தீறாதீக!
பதிலளிநீக்கு//நீங்க புத்தகத்தைப் படிக்கலைன்னு நெனைக்கிறேன்// படிக்கத்தெரிஞ்சா படிக்கமாட்டமா?! இப்படி சபைல வைச்சு மானத்தை வாங்காதீகப்பு! :)
INOX இன்னும் போகலைங்க... ஏதானா நல்லபடம் வந்தா சொல்லுங்க.. போயிருவோம்!
ஐயா சாமி, இங்கிலீசு புரியாது, புரியாதுனு சொல்லிகிட்டு, இப்படி, முழு கதையும் சொல்லிட்டீரு. நல்லது, எனக்கு ஒரு £5 மிச்சம் ஆச்சு :)
பதிலளிநீக்கு//ரெண்டுமே செருப்பு செய்யற கம்பெனினாலும் நாம அடிடாஸ் பனியன போடுவோம்! அது நாகரீகம்... ஆனா 500 ரூவா குடுத்தாலும் பாட்டா படம் போட்ட பனியன போடுவமா? அதுமாதிரிதான் இதுவும்னு எடுத்துக்க வேண்டியதுதான்!
பதிலளிநீக்கு// பன்ச் லைன் அபாரம்
//ராகவன்! பாட்டரை எதுத்தெல்லாம் எழுதலைங்க! இந்த கதைக்குபோய் எப்படி ஒலகம்பூரா இப்படி ஒரு இதுன்னு புரியாம இப்படி... ஹிஹி.. மறுபடியும் ஒன்னு குத்தீறாதீக!//
பதிலளிநீக்குஏம்பா இளவஞ்சி,
இதையே சிவாஜிக்கும் பொருத்திப் பாக்கிறது?
லூசுப்பய சச்சின் எழுதிய நீங்கள் அதைவிட மட்டமான (ரசினியச் சொல்லலீங்கோ, கதையச் சொன்னேன்.) சிவாஜி பற்றி எழுதியதைப் படித்தபோதே யோசித்தேன், எங்காவது திரும்பவும் இடறி வருவீர்களென்று.
vathilai murali,
பதிலளிநீக்குநன்றி,
அனானி,
"எல்லா விமரிசனங்களலும் சார்புத் தன்மையுடையவை. உள்நோக்கங்கள் கொண்டவை. என்னைப் பொருத்தவரை நல்ல விமரிசனம் என்பது என்னைப் பாராட்டும் விமரிசனங்கள்தான்" - மனுஷ்ய புத்திரன்.
மேலே உள்ளதை நினைவில் இருந்து எழுதியிருப்பதால் வார்த்தைகள் சில மாறியிருக்கலாம்.
இந்த உண்மையை உணர்ந்திருப்பதால் தான் நான் விமரிசனங்கள் என்ற பெயரில் எழுதுவதில்லை. இதனால் தான் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக "திரைப்புலம்பல்கள்" என லேபில் கட்டியிருக்கிறேன்! :)
முதலில் ஒரு விசயம் சொல்லிவிடுகிறேன்! நான் நல்ல மசாலா படங்களுக்கு ரசிகன். பலதரப்பட்ட கலைப்படங்களையும் சீரியஸ் படங்களையும் பார்த்து ரசித்தாலும் நல்ல மசாலா படங்கள் பார்க்கும்போது எனக்கு கிடைக்கும் மகிழ்ச்சியே அலாதி! கலை என்பதனையே இயல்பினை ஏற்றிக்கூறும் ஒருவகையான உயர்வுநவிற்சி அணியான கிரியேட்டிவிட்டி என நான் நம்புவதால் படு இயல்பாக எடுக்கப்படும் படங்களை விட எனக்கு மசாலா படங்கள் பிடிக்கின்றன. உன்னதமான படங்களை பார்க்கையில் கிடைக்கும் உணர்வுபூர்வமான நெகிழ்வுக்கு இந்த மகிழ்ச்சி எள்ளளவும் குறைந்ததல்ல! இந்த வகையில் நான் விஜய்க்கும் ரசிகன் தான்! சச்சின் படம் ஆர்ட் ஃப்லிமல்ல. சாதாரண மசாலா கலவைதான். கில்லி போன்ற படங்களை கொடுத்துவிட்டு இதனை சரியாக கலக்காமல் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் சொதப்பலாக இருந்த விடயங்களை ஒரு அங்கலாய்ப்பாக சுட்டிக்காட்டியதுதான் "லூசுப்பய சச்சின்!" இதெல்லாம் விமரிசமில்லைங்க! ரசிக மனப்பாண்மையோடு எழுதப்படும் படத்தினைப் பற்றிய சிலாகிப்புகள்! மக்களோடு படம் பார்த்துட்டு வெளிலவந்து டீக்கடைல ஒரு டீயைப்போட்டுக்கிட்டு "சூப்பருடா மாப்ள!" "சொதப்பிட்டாண்டா மாப்ள" ன்னு பொங்கல் போடுவோம்ல! அதுல கிடைக்கற மகிழ்ச்சி!
நீங்களாவது சிவாஜி திரைக்கதை சச்சினை விடக்கேவலம் என்று சொல்கிறீர்கள்! நான் கதையே இல்லை என்றல்லவா சொன்னேன்! :)))
மசாலா கலவையை சரியான விகிதத்தில் கலந்து தருவதும் அது பெரும்பாண்மையாக ரசிக்கப்பட்டு வெற்றியடைவதும் அவ்வளவு எளிதல்லை! பார்முலா கொஞ்சமா குறைஞ்சாலும், இந்த செயற்க்கையான பார்முலாவையே இயற்க்கையாக இல்லாமல் படுசெயற்க்கையாக திணிப்பாக இருந்தாகும் மாக்கா படத்தை கவுத்துருவாய்ங்க! இப்பவும் சொல்லறேன். சிவாஜி படம் ஓடுவது ரஜினி என்ற நடிகருக்காக மட்டுமே! கதையாவது ஒன்னாவது! :)
சங்கரின் பிரம்மாண்டத்தையும்,ஸ்ரேயாவின் அழகையும், ஆனந்தின் காமிரா அசத்தல்களையும், விவேக்கின் காமெடியையும் மீறி ரஜினியின் இளமையான தோற்றமும் அவரது நடிப்பும் ஸ்டைலும் மட்டுமே பெரும்பாண்மையாக ரசிக்கப்படுகிறது. சிலாகிக்கப்படுகிறது! இப்படி ரசிக்கறது ஒரு கீழ்த்தரமான கேவலமான விசலடிச்சான்குஞ்சு மனப்பாண்மையையே காட்டுகிறது என்றால் நான் என்ன சொல்வது? பிடிச்சிருக்கு ரசிக்கறோம் அப்படின்னு போய்க்கிட்டே இருக்கறதுதான். நான் ஹாரிபாட்டருக்கு சொன்ன மாதிரி "இதையெல்லாம் எப்படியா ரசிக்கறிங்க?"ன்னு கேக்கறாங்களா? அது அவர்களது ரசனைன்னு ஒத்துக்கறதுதான்! இதுபோக "இந்த கேவலத்தை எல்லாம் எப்படியா ரசிக்கறிங்க?" என்பதாக என் பின்னூட்டத்தின் தொணி வந்திருக்குமானால் நான் இடறியது உண்மைதான். அப்படி சொன்னது தவறுதான். ஒத்துக்கொள்கிறேன்!
கொசுரு: எனக்குப் பிடித்த வகையில் அண்ணாமலைக்கு பிறகு மிகச்சிறப்பாக அமைந்த மசாலா கலவை சாமி! அதுக்கப்பறம் வேறொரு படம் வரலை! வராமலா போயிரும்?! :)
ஆங்கிலத்தில் இப்படி ஒரு பக்கா மசாலா 5ஸ்டார் படம் வந்திருக்கிறது Die Hard 4! நேரம் கிடைச்சால் பாருங்க! :))
சிவாஜி புண்ணியத்தால் இந்த விமர்சனத்தை இப்பொழுது படிக்க முடிந்தது. முன்னாடி தவற விட்டுவிட்டேன் :-).
பதிலளிநீக்குஅருமையான நடையில் கதையை எழுதியிருக்கிறீர்கள். மிகவும் ரசித்தேன்.
உங்கள் பதிவையும் பின்னூட்டத்தையும் பார்த்தவுடன் தோன்றிய இரண்டு விஷய்ங்கள்.
1 - நம்ம அம்புலிமாமா கதைக்கும் ஹாரி போட்டர் கதைக்கும் என்ன வித்தியாசம்? கொஞ்சம் இந்த பக்கத்தை போய் பாருங்க. ஒரு புதிய உலகத்தை சிருஷ்டித்து அதில் ஏழு வருடங்களாக தொடர்ந்து நிகழும் நிகழ்ச்சிகளை துளி கூட பிசிறடிக்காமல் எழுதுவது என்பது சாமான்யமான விஷயம் இல்லை. மாயாஜால கதைகளின் சாபமே அவைகளில் லாஜிக் நிறைய பார்க்க முடியாதது. பொயடிக் லைசன்ஸ் மாதிரி அடித்து ஆட வேண்டிதான். ஆனால் அதையே ஏழு படங்களுக்கு செய்வது என்பது நினைத்து கூட பார்க்க முடியாதது.
கன்னித் தீவு சிந்துபாத் போல கட்டற்று போவதற்கான சாத்தியங்கள் மிக அதிகம்.
ஹாரி போர்ட்டர் ஏழு புத்தகங்களாக வந்து, அதில் ஐந்து திரைப்படங்களாக வந்து பெரும் வெற்றி பெற்றிருக்கிறது. ரௌலிங் பல விதிகளை கட்டமைத்து அந்த விதிகளின்படியே கதைகளை நகர்த்தி சென்றதுதான் மிகப் பெரிய வெற்றி. அதற்கு சாட்சியாக இருக்கும் எண்ணற்ற ஹாரி போர்டர் குழுமங்கள் மற்றும் குவிஸ் நிகழ்ச்சிகள் :-).
இதோ பீனிக்ஸ் கட்டளை படமாக வெளிவந்து சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. சாவு புனிதத்தல் (deadly hallows) பல கோடி புத்தகங்கள் முன்பதிவு செய்யப்பட்டாகிவிட்டது. :-)
2. உங்கள் பின்னூட்டத்தில் டை ஹார்ட் 4-ம் அண்ணாமலையும் சிறந்த மசாலாப் படங்கள் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதைப் படித்தவுடன் எனக்குத் தோன்றிய ஒரு தொடர்பை எழுதத் தோண்றியது.
டை ஹார்ட் 1-ல் ஒரு காட்சியில் புரூஸ் வில்லிஸ் ஷூக்கள் இல்லாமல் பதுங்கி செல்லும்போது, வில்லன்கள் சுற்றி இருக்கும் கண்ணாடிகளை சுட்டு தூள் தூளாக்குவார்கள். அந்த கண்ணாடி தூள்களுக்கு மத்தியில் நடந்து சென்று, பிறகு ஊர்ந்து சென்று, பிறகு பாதங்களுக்கு சிகிச்சையளித்தபடியே அவருடைய போலிஸ் நண்பரோடு பேசுவார். அந்த காட்சியின் தாக்கம் மிகவும் அதிகம்.
அண்ணாமலைக்கும் பாவம் அதே நிலை. ஷூ இல்லாமல் இருக்கும்பொழுது வில்லனின் அடியாட்கள் கண்ணாடிகளை தூள்தூளாக்குவார்கள். அண்ணாமலை சமாளித்து எல்லாரையும் துவம்சம் பண்ணுவார். அடுத்த நிமிடங்களிலேயே அவர் தொடர்ந்து ஓடி, அசோக் இருக்கும் காரை கண்டுபிடித்து காப்பாற்றி, 'ஐயம் எ பேட்மேன்' என்று வில்லனின் காரை கொளுத்தி விடுவார். என்னவென்று சொல்வது? பறந்து பறந்து சண்டை போடுவது எல்லாம் அவருடைய ஒரிஜினாலிட்டி என்று நாம் ரசித்துக் கொண்டிருக்க, இந்த லோகலைசேஷன் கொஞ்சம் கஷ்டமாகத்தானிருந்தது ஜீரனிக்க :-)). அதுதான் சொல்ல வந்தேன்.
'சற்றுமுன்னில்' சன்னாசியின் விவாத்தை படித்தீர்களா? இங்கே படிக்கலாம்.
ஏழாவது புத்தகம் வந்துருச்சுங்கோவ்....அதையும் ஒரு நாள் + ஒரு பகல்ல படிச்சி முடிச்சாச்சூங்கோவ். சீக்கிரமே விமர்சனம் வருதுங்கோவ். :)
பதிலளிநீக்குSridhar Venkat,
பதிலளிநீக்குஉங்களது விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி!
சன்னாசி-செல்வன் விவாதம் தொடர்சியாக படித்திருக்கிறேன். அதன் பிறகும் நான் ரஜினி ரசிகன் என்பதில் எனக்கு எந்தவித மாற்றமோ கேவலமோ இல்லை! :)
கடைசியாக அதிலிருந்து பெற்ற சாரம் இதுதான்
1. எந்த படைப்பும் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டதல்ல.
2. எந்தவித ரசனையும் கேவலமானதும் அல்ல
ஓட்டைகள் குறைகள் எங்குதான் இல்லை? Die Hard 4 ஐயே எடுத்துக்கொள்ளுங்களேன்! அருமையான ஆக்ஷன் மூவி. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் கம்பியூட்டரில் வைரஸ் போடுவதை ஸ்டேடஸ் பார் வைத்து 1% முதல் 100% வரை ட்ருருர்ர்ர்ர்ரெண்னு ஓடுவதாகத்தான் காட்டுகிறார்கள். எந்தக்கம்ப்பியூட்டரில் இந்த மாதிரி வைரஸ் பரவுகிறது? படம் பார்க்கும் கடைக்கோடி ரசிகனுக்கும் புரியனும் என்பதற்க்காக இந்தமாதிரியான அசட்டுத்தனங்களை அவர்களே இன்னும் கைவிடவில்லை! இதில் நாமெல்லாம் எப்படி? :) இதுபோக, இந்த ஒரு குறை இருப்பதால் படமே குப்பையாகி விடுமா என்ன? மீதியுள்ள நல்லவற்றை இந்த குறைகளின் மேல் பூசி 100% சந்தோசமா ரசிச்சிட்டுத்தான் வெளில வர்றோம்! அதுபோலத்தான். அண்ணாமலையில் நீங்க சொல்லும் சீன் குறைதான். ஆனால் அதுமட்டுமே படமல்ல. கதை, திரைக்கதை, பாடல்கள், வசனம் என எல்லாமாகத்தான் சேர்ந்து படம் வெற்றியடைகிறது. அது அண்ணாமலையாகட்டும், டை ஹார்ட் ஆகட்டும்! :)
யோவ் ஜீரா,
உம்ம பீத்தலுக்கு அளவே இல்லாம போச்சு! நடுராத்திரி க்யூல நின்னு புத்தகம் வாங்குனீரா? :) நீராவது புரியற மாதிரி கதைய சொல்லுய்யா!
//ஏழாவது புத்தகம் வந்துருச்சுங்கோவ்....அதையும் ஒரு நாள் + ஒரு பகல்ல படிச்சி முடிச்சாச்சூங்கோவ். சீக்கிரமே விமர்சனம் வருதுங்கோவ். :)//
பதிலளிநீக்குவிமரிசனம் வந்துடுச்சுங்கோவ். பார்க்க: http://dondu.blogspot.com/2007/07/harry-potter-and-deathly-hollws.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
பதிலளிநீக்குசுட்டிக்கு நன்றி! ஜீராவும் ஜோரா பதிவை போட்டுடாப்புல. நீங்க கதை சொல்லலை! அவரு சொல்லிட்டாரு! :)))