முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெண்ணியமும் So called சராசரி பெண்களும்...



சுரேஷ் கண்ணன் அவர்களது முகநூலில் ஒரு ஸ்டேடசுக்கு எழுதிய பதில். படித்தால் அது ஏறக்குறைய நீயா நானா நிகழ்ச்சியை ஒட்டியே அமைந்திருந்தது. இங்கே சேமிக்க என்றெல்லாம் ஜல்லியடக்க மாட்டேன். பதிவாக போடவேண்டும் என ஆசை. அம்புட்டுத்தான். இது என் பார்வை மட்டுமே. அவர்பதில் கிடைத்தால் கோர்க்கிறேன்.


---------+++++----------







வண்ட்டேன்... இங்கே அனைத்து சேனல்களும் yupptv.comல் காசுகட்டி காணக்கிடைக்கின்றன. நான் பார்ப்பது என்னவோ இரண்டே நிகழ்சிகள் தான். நீயா நானா & கொஞ்சம் நடிங்க பாஸு :)






// அறியாமையே பேரின்பம் ரீதியில் சில பெண்கள் பேசினார்கள் //






எப்படிங்க இப்படியெல்லாம் தீர்மானிக்கறீங்க!? அறியாமைக்கும் தெரியாமைக்கும் நிறைய வேறுபாடு இருக்குங்க. பெண்ணிய இயங்கங்களும் இலக்கியங்களும் களப்பணியாளர்களும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். தெரியவேண்டிய அவசியத்துக்கான வாழ்க்கை முறையிலும் அவர்கள் இல்லை. அதனால் அது அறியாமை ஆயிருமா?






so called சராசரி பெண்கள் - இனி இவர்களை உங்கள் வார்த்தையிலேயா சராசரிகள் என குறிப்பிடுகிறேன். :(






ஒரு சமூகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை முறை இருக்கிறது. சிலர் குடும்ப அமைப்மை ஏற்றுக்கொண்டு புள்ள குட்டின்னு வாழ்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். சிலர் மற்றவர்களுக்காக ஏதாவது செய்யனும்னு பெண்ணியத்திற்கு போராடுபவர்களாகவும் களப்பணியாளர்களாகவும் ஆகிறார்கள். அதது அவங்கவங்க குடும்ப சூழ்நிலை மற்றும் சுயசிந்தனைல வர்ற தேர்வுகள். பெண்ணியவாதிகள் உரிமைகளுக்காக போராடட்டும். சமூக சட்டதிட்டங்களை மாற்றி அமைக்கட்டும். சமூக புரிதல்கள் மீதான சிந்தனைகளை புரட்டிப்போடட்டும். உரையாடல்களை தொடரட்டும். இந்த செய்கைகளினால் போராட்டங்களினால் வர்ற பலன்களை அந்த சராசரிகள் அனுபவித்துவிட்டு போகட்டுமே. தலைவர்கள் போராடிக்கொண்டுவரும் மாற்றத்தை சராசரிகள் அனுபவித்து முன்னேறி வருவது தானே உலகத்தில் நடப்பது? வாழ்க்கையில் ஒருத்திக்கு மற்றவர்களுக்காக போராட வேண்டும் என்கிற தேர்வு எப்படி உன்னதமானதோ அதற்கு சற்றும் குறையாதது ஒரு பெண்ணுக்கு குடும்ப வாழ்க்கையை தேர்ந்தெடுப்பது என்பது சரியில்லையா? குடும்பம் குட்டி என வாழ்ந்து ஒரு குடும்பத்தை உயர்த்துவது என்ற தேர்வு அவ்வளவு கேவலமானதா?! இருவருக்குமே அவரவர் அரசியல் எல்லைகள். சிறிதும் பெரிதுமாய். இதில் உயர்வென்ன? தாழ்வென்ன? சராசரிகளுக்கு தேவை பெண்ணியம் என்றால் என்ன என்பது பற்றிய விழிப்புணர்வே. இந்த விழிப்புணர்வுதான் மாற்றங்களை அவரவர் குடும்பத்தில் கொண்டுவருகிறது. சராசரிகள் அனைவரும் களத்தில் இறங்கிப்போராட வேண்டும் என்பதோ அவர்கள் இரண்டுபேர் இணைந்து வாழ முடிவெடுத்து குடும்ப அமைப்பை தேர்ந்தெடுத்து அமைக்கும் வீட்டுகுள்ளேயே புரட்சிகள் வெடிக்க வைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது சரியான எதிர்பார்ப்பா? 






பெண்ணியம் என்றால் என்ன கேள்விக்கே நீங்க குறிப்பிடும் so called சராசரி பெண்கள் தெரிஞ்சதை மனப்பாடம் செஞ்சு சொல்லறாப்டி இருந்தாலும் குழப்பமே இல்லாம பட்டுன்னு சொன்னாங்க. அதுக்கு பெண்ணியவாதிகள் மத்தில ஒரு அலட்டலான சிரிப்பு. அய்யோ பாவம் இதுகளுக்கு ஒன்னுமே தெரியலையேன்னு. பெண்ணியம் பத்தி உரையாடலாம் அப்படிங்கற எண்ணம் இல்லாம யாராவது நாலுபேரு மாட்டுவாய்ங்க அவங்களுக்கு பெண்ணியத்தை கழுவி கழுவி ஊத்துவோம்னு நினைப்புல பேச்சை ஆரம்பிச்ச புத்திகேர்ல்ஸ் பாதிப்பேரு “பெண்ணியம்னா என்னன்னு ஒரு வரையறைக்குள்ள சொல்லமுடியாது.. ட்பைன் பண்ணமுடியாது..”ன்னு திக்கித்தெணறி முடிக்கறதுக்குள்ள நமக்கே வேர்க்குதுன்னா பாவம் நீங்க சொல்லற சராசரிகளுக்கு எப்படி இருந்திருக்கும்?! இதுல வெண்ணிலா நடுவால ஒரு சவால்வேறு.. சரியா பதில் சொல்லிட்டன்னா இப்பவே ஷோவை முடிச்சுக்கலாம்னு. என்னக் கொடுமை அய்யா. இதில் யாருக்கு சொல்லித்தருவதில் அறியாமை இங்கே அதிகம்? 






நல்லா படிச்சு வேலைவாங்கி மிலிட்டரிக்கு போகும் ஒருபெண். குடும்ப அமைப்பை ஏற்று கணவருடன் அன்யோனியமாக குடும்பம் நடத்தும் ஒரு பெண். தன் தந்தையும் நானும் எப்படி நட்பாக இருக்கிறோம்னு ஒரு பெண். இதையெல்லாம் அவர்கள் வெளிப்படையாக சொல்ல இந்த சைடுல இருந்து சரமாரியா கவுண்ட்டர் அட்டாக்ஸ்.. ”உங்க வீட்டுல மட்டும் இருந்துட்டா போதுமா? நீ மட்டும் உங்க வீட்டுல கன்வின்ஸ் பண்ணிட்டா போதுமா?” முடியல! “உனக்கு கிடைத்த பலன் மற்றவர்களுக்கும் கிடைக்கனும்...அந்த விழிப்புணர்வைத்தான் நாங்க ஏற்படுத்த போராடறோம்.. அதுக்கு உங்க உதவியும் தேவை.. வாங்க இங்க என்ன நடக்குதுன்னு சேர்ந்தே புரிஞ்சுக்கலாம்..”னு அக்கறையா இந்த கேள்விகள் வெளிப்பட்டிருந்தா எவ்வளவு சிறப்பா இருந்திருக்கும்?! கேட்டதெல்லாம்.. ”அடியே மக்கு... மக்கு... தெரிஞ்ச பெரிய நம்பர் என்னன்னு 100ன்னு சொல்லறையே மக்கு... 1000 100000 எல்லாம் உனக்கெங்க தெரியப்போது?”ங்கற தொணி! 






உண்மையில் இந்த சராசரிகள் எல்லாம் பெண்ணியவாதிகள் சொன்ன மாதிரி இவ்வளவுகாலம் பெண்ணியம் கண்ட போராட்டங்களுக்கு கிடைத்த பலன்கள். ”பெண்ணியம் ஒன்றும் வெட்டிப்பேச்சில்லை. மாற்றம் நடந்தே தீரும். இது நடந்திருக்கிறது பாருங்க..”ன்னு சபையிலேயே கட்டியணைச்சு உச்சிமுகர்ந்திருக்க வேண்டிய முன்மாதிரிகள். பெண்ணியவாதிகள் இவர்களை அரவணைத்து அக்கறையோடு பெண்ணியத்தின் செயல்பாடுகள் என்னென்ன என விளக்க அமைந்த அற்புதமாக அமைந்த வாய்ப்பு அது. ”அடடா,,, நீங்க எல்லாம் இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... இந்த நல்ல வாழ்க்கையிலும் உங்களுக்கு ஏதாவது சிக்கல் வந்தா இப்ப இருக்கற பெண்ணிய செயல்பாடுகள்ல இன்னின்ன நல்ல வழிகள் இருக்கு... இதையெல்லாம் தெரிஞ்சுக்கங்க... நாம எல்லாரும் இன்னும் உயரலாம்...” அப்படின்னு அழகா மாறி இருக்க வேண்டிய உரையாடல் இது. ஆனால் இந்த சராசரிகள் நம்மில் ஒருத்தருங்கற அக்கறை இல்லாததால... நாம் பெண்ணியத்திற்காக போரடறோம், சராசரிகளுக்கு களம் காண்கிறோம்கற ”ஒரு படி மேல” சிந்தனைதான் பேசுன பெண்ணியவாதிகளுக்கு இருந்ததே தவிர அவர்களும் நம்மில் ஒருத்தர் அவர்களுக்கு தெரியாததை கனிவுடன் அறியச் செய்வோம்ங்கறது சுத்தமா இல்லை. ஒருவரை ஒருவர் பார்த்து நக்கலாக சிரிச்சுகிட்டதுதான் இதற்கு சாட்சி. 






நான் உணர்ந்த வரையில் ஓவியா ஒருவரின் பேச்சில் தான் இந்த கனிவையும் ஆதூரத்தையும் அக்கறையையும் காண முடிந்தது. 






இதையெல்லாம் விட ஒரு வலிகூட்டும் சொல்லை கேட்கமுடிந்தது. சராசரிகளை நீங்க எப்படி இப்ப பார்க்கறீங்கன்னு கேட்டபோது பரிதாபப்படுகிறேன் அப்படின்னு ஒரு பெண்ணியவாதி சொன்னார். அவர் யாருன்னா உங்க பெண்ணிய விடுதலையை எப்படி உணர்கிறீர்கள் எனக்கேட்டதுக்கு என்ன சொல்லறதுன்னு தெரியாம ”வார்த்தையே இல்ல சொல்ல முடியல...”ன்னு முடிச்ச குட்டிரேவதி. அவர் யாரைப்பார்த்து பரிதாபப்படுகிறார் என்றால் எப்படி கணவனும் மனைவியுமா இயந்து காதல் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்னு உணர்வுபூர்வமாக எவ்வித தடங்கல்களும் இன்றி உணர்ந்ததை வார்த்தைகளில் கோலம்போட்டுக் காட்டிய (நாடக பாவங்களாம்!! ) பெண்களையும் , எப்படி பல தலைமுறையாக பெண்கள் எங்க வீட்டுல லீடரா இருக்காங்கன்னு சொன்ன பெண்களையும், ராணுவ சீருடை அணிந்து உற்சாகமாக பணிக்கு கிளம்பும் பெண்களையும், அயர்ன் செய்துகொடுத்த அப்பாவின் சட்டைக்கு கிடைக்கும் ஆதுரத்துடன் கூடிய சிரிப்பை பரிசாகப்பெருன் பெண்களையும் பார்த்து!!! :( மகா கொடுமை அய்யா இது. இவங்க எல்லாம் அப்ப யாருக்காக எந்த வாழ்க்கைக்காக போராடறாங்க அப்படிங்கறதே ஒரு நிமிடம் மறந்துருச்சு! இதை விட கொடுமை பெண்ணியவாதிகள் பலபேரு பலதடவை எங்களுக்கும் ஆண் உறவுகள் இருக்கு... ஆண் நண்பர்கள் இருக்காங்கன்னு திரும்ப திரும்ப சொன்னாங்களே தவிர ஒருத்தராவது ஒரு பெண்ணியவாதியாக நான் இப்படி என் ஆண் உறவுகளை பேணுகிறேன்னு ஒரு வரி கூட சொல்லவில்லை! அப்படி என்னங்க அவங்களை சபைல இயல்பா பேசறதை தடுக்குது?! இந்த “ஒரு படி மேல” எண்ணம் தான் போல! சொல்லிட்டா அப்பறம் அடடா இவங்களும் சராசரிதானானு சராசரிகள் கண்டுபுடிச்சுட்டா?!






சல்மாவின் கூற்று... ”சமையல் நல்லா இருக்கு.. நீ நல்லா இருக்க... வீட்டை அருமையா வைச்சிருக்க...” அப்படிங்கற பாராட்டுகள் எதையும் ஏத்துக்க கூடாதாம்! அதெல்லாம் பின்னால பெண்களுக்கெ கெடுதல்ல முடியுமாம்! இதையெல்லாம் எங்க போய் சொல்ல?! உனக்கும் எனக்கும் குடும்ப அமைப்பு எனும் வாழ்க்கைமுறை சரின்னு நினைத்து திருமணம் செய்து கொள்கிறோம்... அதில் வரும் சிக்கல்களை பேசித்தீர்த்து விட்டுக்கொடுத்து வாழ்வோம்... என்ற எண்ணத்தில் இணையும் இருவர் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ளக்கூடாது. அப்படி செய்தால் அடிமையாயிருவாய்! :( இன்னொருத்தரு சொல்றாங்க ஒருத்தர்க்கொருத்தர் தியாகம் செய்யக்கூடாது! :( இவர்கள் சொல்வது அனைத்தும் திருமணமே ஒரு அடிமைசாசனம் அப்படின்னு படிச்சு வந்த தெளிவு. ஆனா திருமணமே ஒரு அடிமைத்தன விலங்கு... குழந்தை பெறுதல் ஆணாதிக்கத்தின் அழுத்தம்னு ஒருத்தருகூட தெளிவா ஒருவரி சொல்லல. பூசிப்பூசி மெழுகறாங்க... பாவம் பேசவந்த பெண்ணியவாதிகள்ல எத்தனை பேர் திருமணமானவங்களோ!! எளிமை மட்டும் இயல்பு என்பது ஒரு படி மேல போயிட்டா அவ்வளவு சிரமமான குணாதியங்களா மாறிடுமா என்ன? இத்தனைக்கும் இவங்களையெல்லாம் சிறப்புநடுவர்களா கூப்பிடலை. ஒரு சைடுல உட்கார்ந்து சரிக்கு சமமா கலந்துரையாட அழைக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் தான், சராசரிகளை போலவே!






நான் கவனித்த வரையில் பெண்ணியவாதிகள் அனைவரும் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணிந்துவந்திருந்தனர். குட்டிரேவதியின் நிறத்துக்கு அவர் அணிந்திருந்த உடையும் அவர் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த கம்பீரமும் அருமையாக இருந்தது. சல்மாவின் வெள்ளை உடைகூட பார்க்க சிறப்பு. கவிதா அவரின் கழுத்து டகோடாக்களை தேடித்தான் மேட்சிங்காக அணிந்து வந்திருக்க வேண்டும். இவ்வளவு ஏன்? ஓவியாவே மடிப்பு கலையாத கஞ்சிபோட்ட காட்டன் புடவையில் பாந்தமாகத்தார் இருந்தார். ”சராசரிகளே.. ஆண்பெண் சமத்துவம் கொண்டுவரத்தான் போராடுகிறோம்.. ஆனால் ஒருவருக்கொருவர் பாராட்டிவிடக்கூடாது” எனச்சொல்லும் இவர்களிடம் போய் “சல்மா.. இந்த வெள்ளை உடையில் நீங்கள் இருக்கும் சூழலே அழகாகத்தெரிகிறது... ரேவதி...உங்கள் பேச்சில் வெளிப்படும் கம்பீரம் அழகு... கவிதா உங்கள் காதணிகள் உங்கள் உடைக்கு சரியா மேட்சாகுது” அப்படினெல்லாம் பாராட்டினா என்னென்ன வார்த்தைகளில் திட்டுவாங்களோன்னு பயம்மா இருக்கு!!! “ஆணாதிக்கம் கொண்ட காமகொடூரா..”ன்னு தட்டையா மட்டும் திட்டமாட்டங்கன்னு நம்பறேன்! :) அவரே பார்த்துப்பார்த்து தேடித்தேடி வாங்கி அவரவரே அணிந்து அவரவரே மகிழ்ச்சி அடையவா உடை? மற்றவர் முன்னால் ஒரு தோற்றப்பொழிவோடு இருக்கவேண்டும் என்ற அடிப்படை அவாவின் வெளிப்பாடு அல்லவா அன்றைக்கு அனைவரிடமும் இருந்திருக்கும்.






இத்தனைக்கு பிறகும் ஒரு விசயம் சொல்லனும்னா குடும்ப அமைப்பில் இருக்கும் சராசரி பெண்கள் தான் தங்கள் எண்ண ஓட்டங்களை தங்குதடையின்றி பேசுனாங்க... தனக்கு தெரியாத சில விசயங்களை உடனே தலையாட்டி ஒத்துக்கிட்டாங்க... உண்மையில் உணர்ந்ததையும் வாழ்க்கையில் செயல்படுத்தறதையும் மட்டுமே சொன்னாங்க... சொல்லிக்கொடுக்க வந்தவங்க இதுல எல்லாம் இதுல ஏதாவது ஒன்னு கத்துக்கிட்டும் போயிருந்தா மகிழ்ச்சியே! :)






இதுபோக ஆண்டனியை பாராட்டியே ஆகவேண்டும்! தப்பித்தவறியும் ஒரு ஆண் பங்கேற்பாளர் இல்லாமல் நடத்தியதற்கு. இல்லையெனில் சராசரிகளின் தெளிவும் உணர்வுகளும் அறிவுபூர்வமான வாதங்களால் சிதறடிக்கப்பட்டிருக்கும்!


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு