முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காமம் தெளிதல் 2 :- அகத்தூய்மை



”கொட்டற பனில இன்னும் என்னங்கடா வெட்டிப்பேச்சு? நாளைக்கு காலேஜ் போகவேண்டாமா? நெஞ்சுல சளி கட்டுனா மூனு நாளைக்காவது கஷ்டம்ல? ரவுண்ட்ஸ் எல்லாம் நான் பார்த்துக்கறேன். நேரமா போய் படுங்கப்பா…”


ஒரே நிமிடத்தில் இப்படி அன்பு, அக்கறை, கண்டிப்பு, தோழமை எல்லாம் கலந்து எங்களை திட்டமுடியும்னா அது கோபி அண்ணாவால் மட்டும்தான் முடியும். இதற்கு பதில் எங்களிடமிருந்து என்ன வரும் என்பதும் அவருக்கு தெரிந்தே இருக்கும். ஒரு மாதிரி கோரசாக “தோ.. அஞ்சு நிமிசம்ணே… போயிடுவோம்” என்று நாங்க சொல்லி முடிக்கறதுக்கும் அவர் “ம்ம் சீக்கிரம் போங்கடா.. வீட்டுல திட்டுவாங்கல்ல” என்று சொல்லியபடி திரும்பி ரோட்டை பார்த்தபடி அடுத்த ரவுண்ஸ் நடப்பதற்கும் சரியாக இருக்கும். அந்த அஞ்சு நிமிசங்கறது கூடக்குறைய ரெண்டுமணி நேரமாவது ஆகும். அது அடுத்து தொடர்ந்துவரும் அவரவர் வீட்டாரின் அன்பு மேலிடும் அழைப்புகளை பொறுத்தது.






நாங்க நெதமும் பொங்கல் போடுமிடம் ரொம்ப தூரமெல்லாம் இல்லைங்க. எங்க காலனியே நேர்கோடுகளாக நாலு தெருக்கள்தான். தெருவுக்கு ஒரு சைடுல 30 வீடாச்சும் தேறும். தெருக்கள் சேரும் ஒரு பக்கம் சின்ன மெயின் ரோட்டில் இணைந்து அது வடக்காக அவனாசி சாலையைத்தொடும். மறுமுனைகள் தொடும் இடம் நாலு ஏக்கராவுக்கு காலிநிலம். பெரும்பாலும் பார்த்தீனிய செடிகளால் நிறைந்திருக்கும். அதுக்கு ஆரம்பத்துல ஒரு சின்ன கால்வாய். அதைத்தாண்டுனா எங்க கிரிக்கெட் க்ரவுண்டு. அதன் கடைசில ஒரு ஃபவுண்டரிய ஓட்டிய சின்ன ஆஷ்பெட்டாஸ் ஷெட்டு. அதுதான் எங்களுக்கு கிரிக்கெட் காலரி, சட்டசபை, சங்க ஆபீஸ்னு எல்லாமே. காலனில ஏறக்குறைய என்வயசுல ஒரு டஜன் உருப்படிக தேறுவோம். அதை வைச்சே மெஜாரிட்டி போட்டு அந்த ஷெட்டை ஆக்கிரமித்திருந்தோம். எங்களைவிட சிறுசுங்க கிரிக்கெட்டு வெளையாடிட்டு போயிறனும். சங்க ஆபிஸ்குள்ள எல்லாம் வரப்படாது. எங்களை விட பெருசுங்க எப்பவேணா வந்துபோகலாம். ஆனா பட்டா போட்டுறப்படாது. பெரும்பாலும் பெருசுக திருட்டு தம்முக்கும் பீருக்கும் தான் வரும்க. கொஞ்ச நேரத்துலயே மேட்டரை முடிச்சுட்டு பொண்டாட்டி திட்டுவாங்கன்னு கெளம்பிருவாங்க. பெருசுகளும் தலைகாட்டறதால ஒருமாதிரி பொறுப்பாத்தான் ஓடுதுன்னு அப்பாம்மா யாரும் பெருசா கவலைப்படறதில்லை. நாங்களும் அ.கொ.தீ.க கழகம் அளவுக்கு இல்லைன்னாலும் ஏதோ சின்னச்சின்னதா தப்புக செஞ்சுக்கிட்டு வண்டி ஓட்டிக்கிட்டிருந்தோம். வண்டின்னா எல்லா வண்டியும்தான். சைக்கிள்ல ஆரம்பிச்சு, பைக்குகள்ல போய் அப்பறம் இப்பக்கூட மக்கா கார்களை நிறுத்தி அங்கன பொங்கல் போட்டுட்டுதான் இருக்காங்க. நாந்தான் வேலைதேடி ஊரைவிட்டு வந்ததுல டச்சுவிட்டு சிலகாலமாச்சு.



கோபிண்ணா இந்த பெருசுக கூட்டத்துல என்னைக்குமே சேர்ந்ததில்லை. அவருக்கான வயலும் வாழ்வும் வேறு. எங்களை விட ஏழெட்டு வயசு அதிகம். நாங்க ஸ்கூல் முடிக்கறதுக்கு முன்னாடியே அவர் காலேஜெல்லாம் முடிச்சு வேலைக்கு போயிட்டாப்ல. வீட்டுக்கு ஒரே பையன். ஆறடி, தங்கநிறம், கருஞ்சுருட்டை முடி, சதுரமுகம், அதுல ஒரு பட்டைக்கண்ணாடி. சுருங்கச்சொன்னா மலையாளிக முகம். பின்ன அவங்கம்மா பாலக்காட்டு சைடுல்ல? இப்பக்கேட்டால் அவரு பார்க்கறதுக்கு உயரமாய் சிவப்பாய் மீசைவைச்சுக்காத ஆதவன் மாதிரி இருப்பாப்லன்னு பட்டுன்னு சொல்லிருவேன். அப்பக்கேட்டிருந்தா டி.ராஜேந்தர் படத்துல அவர் தங்கச்சிய காதல்செய்து ஏமாத்தி அப்பறம் சாவகாசமா அடிவாங்கி திருந்திக்கொள்ளும் மேன்லி ஸ்மார்ட் கேரக்டர்களுக்கான முகம். ஆனால் உண்மையில் கோபிண்ணா தப்பெல்லாம் செய்யமாட்டாரு. எங்களுக்கெல்லாம் ஒரு விதத்துல எதிரி. வீட்டுல எங்க யாருக்கு புத்தி சொல்லறதா இருந்தாலும் பெரும்பாலும் அவரு பேரை வைச்சுத்தான் பாட்டு ஆரம்பிக்கும். ஏனெனில் அவரது சொல்லும் செயலும் ஒழுக்கமும் அப்படி. கடமை கண்ணியம் கட்டுப்பாடுல எங்க காலனி தாய்மாரெல்லாம் அவரை உச்சிமுகர்ந்து கைவிரல்களால் கன்னத்துல சொடக்குப்போட்டு ஏறுகழிப்பாங்கன்னா பாருங்களேன்!







என்ன அவரது வீடு இந்தப்பக்கம் கடைசி வீடுங்கறதால அங்கிருந்து பார்த்தா சங்க ஆபீஸ் கத்திக்கூப்பிடும் தூரம் தான். வீட்டுக்கு முன்னால் ஒரு வேப்பமரம். அதனை ஒட்டியே தெருவிளக்கு. இரவுநேரங்களில் அந்த தனித்த மஞ்சள்விளக்கின் ஒளி அவரது வீட்டை முழுதாக போர்த்திவிட்டது போலிருக்கும். கோபிண்ணா கடைசியாக வீட்டுக்குள் செல்வதற்குமுன் சங்கத்துல ஏதாவது வண்டிக தென்பட்டால் எட்டிப்பார்த்து மேற்கண்டபடி எங்களுக்கு லைட்டா ஒரு எத்து விட்டுட்டு போவாப்ல. எங்க காலனில அனேகமாக எல்லா வீடுகளும் 9 மணிக்கெல்லாம் கடை சாத்திரும். இளந்தாரிங்க நாங்க இப்படி கொஞ்சம்பேர் மட்டுமே நடமாட்டம். இதுவும்போக எங்களை நைட்டு சாப்பாட்டுக்கு அப்பறமும் வெளில சுந்த அனுமதிச்சதுக்கு ஒரு காரணம் இருந்தது. காலனியில் முளைத்த திருடர் பயம்! கொஞ்சம் ரிமோட்டான ஏரியாங்கறதாலயும் காலனிய தாண்டித்தான் சில பவுண்ட்ரிகளும் லேத்துபட்டறைகளும் ஓடிக்கொண்டிருந்ததால் காலனிவழியா யாரு வரப்போக இருக்காங்கன்றது தெளிவில்லை. அப்பப்ப ஏதாச்சும் சில்லரைத் திருட்டுகளாக சைக்கிளை கெளப்பிக்கிட்டு போறது, வீட்டுக்கு முன்னாடி இருக்கும் ஏதாச்சும் காணாமப்போகத்தான் இருந்தது. ஒரு நாள் பூட்டிக்கிடந்த வீட்டுக்கு பின்னாடி கதவை பெயர்த்துப்புகுந்து 20 பவுன் நகை திருட்டுப்போனதுக்கு அப்பறம்தான் எல்லாரும் பீதியாகி உசாரானாங்க. காலனி மீட்டிங்கைப்போட்டு வீட்டுக்கு மாசம் இவ்வளவுன்னு வசூலிச்சு செக்கூரிட்டிங்க ரெண்டுபேரு நைட்டு ரோந்துக்கு அப்பாயிண்டடு. அதுவும் திருப்தி ஆகாததால இளந்தாரிக மிட்நைட்டு வரைக்கும் ரோந்துபோறோம்னு முறைபோட்டு சுத்திவருவாங்க. நாங்க ஒரு ரவுண்டுக்கப்பறம் சங்க ஆபீஸ்ல பொங்கலுக்கு அடைக்கலம் ஆயிருவோம். கோபியண்ணா மட்டும் முடிகிற நாளெல்லாம் விரைப்பாக செக்கூரிட்டிகளுக்கும் மேலாக ரவுண்ட்ஸ் சுத்திட்டு திருப்தியானதுக்கப்பறம் தான் படுக்கப்போவார்.









நாங்களும் பலநேரம் பேசித்தீர்த்ததுண்டு. எப்படி கோபிண்ணா மட்டும் இப்படி நல்லபுள்ளையா இருக்காருன்னு. அதுக்கு காரணம் அவங்கப்பாதான் அப்படின்னு நாந்தான் அடிச்சுப்பேசுவேன். கோபியே இப்படின்னா அவங்கப்பா எப்படியாப்பட்ட கனவானாக இருக்கனும்தானே நினைக்கறீங்க? அப்படியே தலைகீழ். பயங்கர காசுபொழங்கற கவருமெண்டு துறைல கேடர் அதிகாரி. யாருக்கும் தேவைக்கு அதிகமாக இருக்கும் பணமெல்லாம் சேமிப்புதான். உழைத்து வராமல் கிடைச்சால்கூட லாட்டரி. ஆனால் கடமையை செய்ய மறுத்தோ அல்லது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியோ வாங்கும் லஞ்சப்பணம் என்பது பாவப்பணம். பாவம் செய்ய தூண்டுவதால். காலைல இருந்து ஏய்ச்சதுக்கு மாலைல கையில சிலபல ஆயிரங்கள் சுளையாக கிடைத்தால் அதை சேமிக்கத்தோணாது. சொத்து வாங்கி கணக்கு காட்ட முடியாது. பாக்கெட்டுலயும் ரொக்கமாவே வைச்சுக்கமுடியாது. மிகக்குறைந்த அளவுக்கு மான அவமான உணர்ச்சி இருந்தாலும்கூட அது குற்ற உணர்ச்சியாக உருவெடுத்து தலையை தின்னுரும். ஒரே வழி அன்னைக்கு நைட்டே அதை ஆட்டம்போட்டு அழிச்சிறதுதான். குடி குட்டி கும்மாளம். காலைல ட்ரிம்மா சபாரி சூட்ல கிளம்புனார்னா சாயந்திரம் வண்டி அப்படியே ஆபீசர்ஸ் க்ளப், க்ளவுட் 9 பார் இப்படி எல்லா இடமும் குடிச்சு முடிச்சு வீடு வந்துசேர 11 ஆகிரும். வண்டில இருந்து யாரையாவது திட்டியபடிக்கு உளரிக்கொண்டே இறங்கி உள்ள போவார்.



60வதுல அவர் ரிடையர் ஆனதுக்கு பிறகும் இது தொடர்ந்தது. முழுநாள் வேலையாக. காலைல 11 மணிக்கே டிரைவர் போட்ட அம்பாசிடரை எடுத்துக்கொண்டு சீட்டாட கெளம்பிருவாப்ல. இதையெல்லாம் சின்ன வயசுல இருந்து பார்த்துப்பார்த்து வெறுத்துப்போய்தான் கோபிண்ணா மனசை ஒருமுகப்படுத்தி கட்டுக்கோப்பாய் மாற்றியிருக்க வேண்டும். மிக இயல்பான காட்சி அது. எல்லா ஞாயிறுகளிலும் கோபிண்ணா வீடுமொத்தமும் சுத்தம் செஞ்சுக்கிட்டிருப்பார். போர்டிகோ கழுவுவார். ஜன்னல் கம்பிகளையெல்லாம் துடைச்சுக்கிட்டிருப்பார். பூச்செடிகள் அனைத்துக்கும் தண்ணி ஊத்திக்கிட்டிருப்பார். அம்பாசிடரை தூசிதும்பில்லாம அலசியெடுப்பார். அவங்கப்பா கையில்லாத பனியன் போட்டுக்கிட்டு நெஞ்சுக்கு கீழ தொப்பைக்கு மேல கட்டுன சிங்கப்பூர் லுங்கியோடு அவரது ஆறாவது விரலான சார்மினார் சிகரெட்டு புகைய தேமேன்னு ஈசிசேர்ல சாய்திருப்பார். ஒரு நாளைக்கு பத்து பாக்கெட்டு நிச்சயம் ஓடும். அப்பாருக்கு சிற்றின்பம். மகனுக்கும் ஒழுக்கம். அவங்கமாவுக்கு கோயில் கோயிலாக பக்திதேடல்னு அவங்க குடும்பமே ஏதாவது ஒன்றுக்கு அடிமைப்பட்டு கிடந்த காலம் அது.


ஆனால் காலனி பெருசுகளுக்கு அவங்கப்பா மேல ஒரு வயித்தெரிச்சல் எப்பவும் இருந்தது. எல்லோரது வீட்டுலயும் ஒருத்தருக்காவது கொழுப்பு, இரத்த அழுத்தம், நீரிழிவுன்னு கவுரவமாக சொல்லிக்க ஒரு வியாதி இருந்தது. அது சந்திச்சு பேசும்பொழுது ஆளாளுக்கு காலைல வாக்கிங் போறதையும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்ததை சொல்லி பெருமையடிச்சுக்கவும் உதவிக்கொண்டிருந்தது. ஆனால் கோபியண்ணா அப்பாக்கு உடம்புல எந்த பிரச்சனையும் இல்லை. சும்மா ஒழுக்கமா அடங்கிக்கிடக்கற உடம்புங்க எல்லாம் சீக்கிரமே உழுத்துப்போக ஆட்டமாய் ஆடிக்கொண்டிருக்கும் இந்தாளுக்கு மட்டும் ஒன்னுமே வரலையான்னு ஆளாளுக்கு அங்கலாய்சுக்குவாங்க. அது நீருபூத்த நெருப்பாக மேலாக்க சாம்பல் தட்டிய பொறாமையாக உருவெடுத்திருந்தது ஒரு தருணத்தில் வெளிப்பட்டது.






ஒரு நாள் மத்தியானநேரத்தில் காசைக்காட்டி ஏதோவொரு வேலையாளு பொம்பளைய ஏற்பாடு செய்து முக்கால்வாசி கட்டி முடிக்கப்பட்ட காலியாருக்கற வீட்டுல கோபிங்கப்பா காமத்தில் திளைத்துக்கொண்டிருந்த பொழுது யாரோ வயித்தெரிச்சல்ல அந்த அறைக்கு வெளில நல்ல பெரிய பூட்டு போட்டுக்கு போயிட்டாங்க. வெளில வரமுடியாம அவர் கத்த அந்த பொம்பளை மூலைல குறுகிக்கிட்டு கதற விசயம் மெல்லப்பரவி அத்தனை காலனி பெருசுகளும் அந்த பில்டிங்குல ஆஜர். ஆளாளுக்கு அறிஞ்ச தெரிஞ்ச புத்திமதியா அள்ளிவிடறாங்க. யாருக்கும் பூட்டை உடைக்க தோன்றவில்லை. ஆடின ஆட்டத்துக்கு அந்தாளு எவ்வளவு நேரம் உள்ள இருக்காப்லயோ அந்தளவுக்கு அசிங்கப்படனும்னு அல்ப ஆசை. கோபிண்ணாவுக்கு விசயம்போய் களத்துக்கு வந்து சேர்ந்தார். முகம் எந்த உணர்ச்சியும் இல்லாம இருகிப்போய் கிடந்தது. ரெண்டு நிமிசத்துல நிலைமைய புரிஞ்சுக்கிட்டு தலைய குனிஞ்சபடிக்கே “பூட்டை உடைச்சுக்கறேன்.…” என்று மட்டும் சொன்னார். அவர் சில நொடிகள் தாமத்தித்தது சபையோரின் அனுமதிக்கு காத்திருந்தது போலவே இருந்தது. ஆனால் சடக்குன்னு எங்கிருந்தோ ஒரு பெரிய இரும்பு ராடு கொண்டுவந்து ஒரே நெம்பு. பூட்டை தாழ்ப்பாளோட பெயர்த்து எடுத்துட்டு கதவை திறந்தார். தலைகுத்துனவாகுலயே அப்பாவை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கு விறுவிறுன்னு போயிட்டார். வயசாளிகளுக்கு எப்படியோ இளவட்டங்க எங்களுக்கெல்லாம் முதல்ல சிரிப்பா இருந்தாலும் கடைசில கோபிண்ணா மேல பாவமா வந்துச்சு. இப்படியும் ஒரு ஆளா? அந்தாளுக்கு இப்படியும் ஒரு புள்ளையான்னு.



கோபிண்ணா செஞ்சுக்கிட்டது லேட் மேரேஜ்னு சொல்லமுடியாது. ஆனா அவங்கப்பா எல்லாம் ரிடையர் ஆகி சுமாரா முப்பது ஆரம்பத்துல செஞ்சுக்கிட்டாரு. எங்க எப்படி பொண்ணெடுத்தாங்கனு யாருக்கும் தெரியாது. பாலக்காட்டுல கல்யாணம். கோவைல ரிஷெப்சன். அவர்மேல இருந்த மரியாதைக்கு மட்டுமே காலனில எல்லாரும் போயிருந்தோம். அண்ணி அப்படி ஒரு அழகு. ஆனால் கோபிண்ணாவை விட நிறம் கொஞ்சம் கம்மிதான். கேரளத்தின் வட்டமுகம். பெரிய கண்கள். பூரித்த உடல்வாகு. வாய்கொள்ளாச்சிரிப்பு. மலையாளமும் தமிழும் கலந்த பேச்சு. ரிஷப்சன் மேடைல அவங்க ஒவ்வொருவருக்கும் கைக்கூப்பி சிரிக்க அவங்க கண்களும் சேர்ந்து சிரித்தன. சற்றே தலைசாய்த்த சிரிப்பு. ஒவ்வொரு தலைசாய்ப்புக்கும் அவங்க காதில் இருந்த சின்னச்சின்ன சிவப்பு கற்கள் பதித்த டாலடிக்கும் ஜிமிக்கி எத்தனைமுறை ஆடுகிறதுன்னு கணக்கு வைச்சபடியே கீழிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். அன்றைக்கு எங்க எல்லோருக்குமே சாப்பாட்டுடன் சக்கப்பிரதமன் ரெண்டு ரவுண்டு வாங்கி குடிச்சதவிட கடைசில கோபிண்ணாக்கு நல்ல அழகான மனைவி அமைச்சது பொறாமையை மிஞ்சிய இனிப்பான நிகழ்வாக இருந்தது. நல்ல பையனா இருந்தா அதுவா அமையும்னுகூட எங்கம்மாவும் நானும் பேசிக்கொண்டோம்.


கோபிண்ணா நடையிலயும் ஒரு ஜோரு வந்திருந்தது. சிரிச்சமேனிக்கு வேலைக்கு போய்வந்துகொண்டிருந்தார். வாரயிறுதியில் வண்டியெடுத்துட்டு பாலக்காட்டுக்கு மாமனார் வீட்டுக்கு பயணம். ஞாயிறு சாயந்தரம் திரும்பி வந்தவுடனே சிலமணிநேரம் வீடு பராமரிப்பு. மாமிகூட ஆண்டவன்கிட்ட அழுகறதுக்கு மட்டுமே கோயிலுக்கு வந்துக்கிட்டு இருந்தவங்க இப்பவெல்லாம் சந்தோசமாகத்தான் வழில பாக்கறவங்ககூட பேசிக்கிட்டிருப்பாங்க. வீட்டுக்கு மருமகளே வந்தாச்சுன்னு அடங்குனாரா இல்லை வீட்டாரால் அடக்கிவைக்கப்பட்டாரான்னு தெரியாது. கோபிங்கப்பா அதுக்கப்பறம் எந்த வில்லங்கத்துலயும் மாட்டலை. சிகரெட்டு மட்டும் அதே அளவுல ஓடிக்கிட்டிருந்தது. சிலசமயம் சிகரெட்டு தீர்ந்துட்டா என்னைப்பிடிச்சு கடைக்கு ஓடச்சொல்லுவார். நானும் சைக்கிளை அழுத்திக்கிட்டு போய் சடுதில ஒரு கட்டு சார்மினாரோட வரணும். தொலையுது பெருசுன்னு அப்பப்ப செய்யறதுதான். சார்மினார் குடுக்கற சாக்குல அண்ணி கண்ணுல பட்டா அகலச்சிரிப்போட ”நல்ல படிக்குன்னா?”னு கேட்கக்கிடைச்சால் ஒரு கூடுதல் சந்தோஷம்தான். அரியர் கோஷ்டியான எனக்கெல்லாம் யாராவது படிப்பைப்பத்தி பேசுனாங்கன்னாவே குபீர்னு கிளம்பும். ஆனால் நான் மிகமகிழ்ச்சியாக பதில்சொல்லும் ஒரே தருணம் அதுதான்.








சிலருக்கு சிலதுபடி வாழ்க்கை எழுதப்பட்டிருக்கும்போல. வாஸ்து, பில்லிசூனியம், விதி, கெட்டநேரம் என அவரவர் நம்பிக்கைபடி என்னவேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் சிலரது வாழ்வில் சில நிகழ்வுகள் அவர்களை எங்கேயும் எப்பொழுதும் மேலே வரவிடாமல் அழுத்திப்போட்டுருது. கோபிண்ணாவும் அண்ணியும் எங்களுக்கு தெரிஞ்சு ஒருவருசத்துக்கு நல்லா இருந்தாங்க. கொஞ்சம் கொஞ்சமாக அண்ணி நடவடிக்கைகள்ல மாற்றங்கள். காலனில அரளிபுரளியான பேச்சுக்கள். அவங்களுக்கு கட்டுக்கடங்காத கோவம் வருது. வழில பாக்கறவங்களை மொறைச்சபடிக்கு மலையாளத்துல திட்டறாங்கன்னு. ஒருமுறை பால்காரர்மேல பாலோட பாத்திரத்தை தூக்கி எறிஞ்சுட்டாங்கன்னு பஞ்சாயத்து. நாளாக ஆக நைட்டானாவே கத்த ஆரம்பிச்சாங்க. வார்த்தைகளால் அல்ல. ஏதோவொரு கேவல் மாதிரி. தொண்டையை கிழித்துக்கொண்டு கிளம்பும் அலறல்கள். கத்திக்கத்தி ஓய்ந்து மெல்ல அழுகற சத்தமா மாறும். கொஞ்சம் தெம்பு வந்தவுடன் திரும்பவும் அந்த உச்சஸ்தாயில கேவல்.


மொதல்ல கொஞ்சநாளைக்கு பக்கத்து வீட்டுக்காராங்க எல்லாரும் ஏதோ குடும்ப பிரச்சனைன்னுதான் நினைச்சாங்க. ஆனால் அந்த கதறல் சகிக்கமுடியாத அளவுக்கு போனபொழுது என்ன செய்ய இயலும்? கோபிண்ணாவை கூப்பிட்டு சொல்லிவைக்க ஆரம்பிச்சாங்க. உண்மையில் அவரைப்பார்க்கவும் திகைப்பும் என்னஏதென்று புரியாத குழப்பமும் நிரம்பிய முகமுமாகத்தான் தெரிந்தார். பல மருத்துவர்கள், பல ஊர்கள் பல ஆஸ்பிடல்னு சுத்திச்சுத்தி வைத்தியம் பார்த்தார். கொஞ்சகாலம் பாலக்காட்டுல அவங்கப்பாம்மா வீட்டுல விட்டுட்டு வருவார். எல்லாம் தற்காலிக நிவாரணம்தான். போய்விட்டு வந்த சிலநாட்களுக்கு நல்லா இருப்பாங்க. ஆனால் கொஞ்சநாள்லயே அந்த ராத்திரி கேவல்கள் பீரிட்டுக்கிளம்பும். கையறுநிலையில்தான் கோபிண்ணா. இரண்டு வருசம்கூட அவர் நிம்மதியாக வாழ்ந்தமாதிரி எங்களுக்கு தெரியலை. பாலக்காட்டுலயும் எப்பவும் கொண்டு விடமுடியாத நிலமை. அண்ணிக்கு அடுத்து ஒரு தங்கை. எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்து அண்ணியை கேரளால ஒரு ஹொம்ல கொண்டுவிட்டுட்டு வந்தாங்க. ஒரு வாரம்கூட முடியலை. மனைவியை இந்த நிலைமையில் விட்டுட்டு வாழத்தாங்காத கோபிண்ணா அவங்களை நானே பார்த்துக்குவேன்னு வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டாப்ல. எங்கம்மா ஒருமுறைபோய் துக்கம் கேட்டதுல “விடுங்கம்மா… நம்பி வந்துட்டா… எத்தனை கஷ்டம்னாலும் நானே பார்த்துக்கறேன்…”னு சின்னச்சலனம்கூட இல்லாமல் சொன்னதை கண்ணுகலங்கியபடி வந்து சொன்னாங்க. எங்க பொங்கல்ல இதை கொஞ்சகாலத்துக்கு சொல்லிச்சொல்லி மாய்ஞ்சோம்.






வீடுகளுக்கு சுற்றுச்சுவர்கள் இருக்கின்றன அந்நியர் பிரவேசத்தை தடுக்க. கதவுகள் இருக்கின்றன பாதுகாப்புக்கு. சன்னல்கள் இருக்கின்றன காற்றோட்டத்துக்கும் வெளிச்சத்துக்கும். உண்மையில் கதவுகளும் சன்னல்களும் வீட்டின் ரகசியங்களை பொத்திப்பொத்தி பாதுகாக்கவே பயன்படுகின்றன. ஒவ்வொரு வீட்டினுள்ளும் சிலப்பல பகிரப்படாத சொல்லமுடியாத ரகசியங்கள். சில வீட்டோடு வீட்டாகவே புதைந்துபோகின்றன. சில மெள்ளக்கசிந்து திரிந்து பக்கத்துவீடுகளின் புறம்பேசலாக மாறுகின்றன. உண்மையில் குடும்ப ரகசியங்கள் குடும்பத்தில் உள்ளோருக்கே தெரிவதில்லை. தாளிட்ட வீட்டுக்குள் குடும்பரகசியம். அதனுள் கதவை ஒட்டிச்சாத்திய அறைக்குள் அவரவர் ரகசியம். இருகமூடிய மனசுக்குள் நமக்கே நமக்கான ரகசியங்கள். கோபியண்ணாவின் வீட்டில் அண்ணியின் அறைக்கதவுகள் எப்பொழுதுமே தாளிடப்பட்டிருந்தன. சன்னல்கள் திறக்கப்படவே இல்லை. ஐந்தாறு நைட்டிகள் மட்டுமே உடைகளாயிற்று. தலைமுடியை தானே பிடித்து இழுத்தபடிக்கு சுவரில் மோதிக்கொள்கிறார்கள் என்று கோபியண்ணாவே மாதமொருமுறை கத்தரியால் முடியை வெட்டிவிடுவார்.


நான்கைந்து வருடங்களில் ஒரு பெண்ணால் ஐம்பது வயதின் முதிர்ச்சியை எட்டமுடியுமென்பது எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. கந்தலாக வெட்டிய கிராப்போடு ஒட்டிப்போன உடலுடன் விலா எலும்புகள் துருத்திய அண்ணியை சிலமுறை உக்கிரம் குறைந்த பொழுதுகளில் கோபிண்ணா வாசலில் அமர்த்திவைத்தபடி பேசிக்கொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். அவரும் எல்லா வகையான மருத்துவங்களும் மாந்திரீகங்களும் விடாமல் முயற்சித்துக்கொண்டே இருந்தார். என்றாவது எப்படியாவது சரியாகிவிடாதா என்ற நம்பிக்கை. அவரவருக்கு அவரவர் வேலைகள் கவலைகள் தேடல்கள் மற்றும் ஓட்டங்கள். காலனி மக்களுக்கு பின்னிரவில் ஊளையிடும் நாய்களின் சப்தமும் ரவுண்ட்ஸ் வரும் செக்கூரிட்டியின் விசிலும் அண்ணியின் விட்டுவிட்டு கேட்கும் கேவல்களும் இரவுக்கென்ற ஒலிக்கூறுகளாக இயல்பாகிப்போனது. வேலைநேரத்தையும் வெளியுலக வாழ்க்கையையும் சுருக்கிக்கொண்ட கோபிண்ணாவிடம் ஒரே ஒரு மாற்றம்தான் தெரிந்தது. சன்னல்கள் பூட்டிக்கிடந்த வீட்டினை அடிக்கடிக்கு வெறித்தனமாக கழுவிமெழுகி சுத்தப்படுத்தியபடிக்கு இருப்பார். மொட்டைமாடி முழுவதும் நீர்விட்டு அடித்துக்கழுவுவார். இரும்பு கேட்டின் ஒவ்வொரு கம்பியையும் எண்ணைவிட்டு துணிசுற்றி துருபோக இழுத்தபடிக்கு இருப்பார். வீட்டைச்சுற்றிலும் உள்ள தென்னைமரங்களின் விழுந்த ஓலைகளையும் குப்பைகளையும் அள்ளி தெருமுனை குப்பைத்தொட்டியில் நிறைத்து அதில் தீவைத்து எரிவதை பின்னால் கைகட்டி வேடிக்கை பார்த்தபடி இருப்பார்.






காலத்தின் ஓட்டத்தில் எங்கள் சங்கத்தில் ஆளாளுக்கு ஒருபுறம் சிதறிப்போயிருந்தோம். நல்லா படிச்சவன் படிக்காதவன் அனைவருக்கும் ஒரேஅழுத்தம்தான். எதையாவது செய்து சம்பாதிக்கனும். எனக்கான ஓட்டத்தில் சென்னையில் வந்து விழுந்திருந்தேன். அல்ட்ராசவுண்டு ஸ்கேனிங் மெசின்ஸ் சேல்ஸ் அண்டு சர்வீஸ் இஞ்சினியர். தமிழ்நாடு ஆந்திரா கேரளான்னு மூன்று மாநிலங்களுக்கும் ஊடாக மருத்துவமனைக்கிடையே ஓட்டமாக ஓடிக்கொண்டிருந்தேன். சம்பளத்தைவிட பயணப்படி மிக அதிகம். ஓரளவுக்கு தாராள காசுப்புழக்கம். மாதத்தின் பல இரவுகள் ரயில்களிலும் KPN பஸ்களிலும் கழியும். தூங்கப்பிடிக்காத வராதா பயண இரவுகள். நிலவொளியும் சாலைவிளக்குகளும் மாற்றிமாற்றி காலியான நெடுஞ்சாலைகளையும், வெறிச்சோடிய ஊரின் வீதிகளையும் இரவுநேர உலகத்தின் சலனங்களை சித்திரங்களாகவும் கதைகளாகவும் கண்கட்டு வித்தைகளாகவும் காட்டும் சன்னலோர பயணங்கள். கோவையின் வழியாக ஏதேனும் சேல்ஸ் விசிட் அமையும்போது மட்டுமே ஊருக்கு வந்துபோகும் வாழ்க்கை. அதை சாக்காக கொண்டே காலனில மீதம்கிடக்கிற நண்பர்களை சந்திக்கற நிலைமை. நானாவது பரவாயில்லை. தக்கிமுக்கி படிச்சதுக்கு கையில சில்லரையாவது புரண்டது. அஞ்சரை வருசமா தலையணை சைசுக்கு புத்தகங்களா படிச்சு மெடிக்கல் முடிச்ச முரளிக்கும் வெங்கிக்கும் ஒரு தனியார் மருத்துவமனைல அப்ரசண்டி டாக்டர் வேலைதான். அவங்களும் வெறும் MBBS போர்டுவைச்சா காலாம்பூராவும் 50ரூவாபீசு எண்ணியே ஓய்ஞ்சிருவோம்ற பயத்துல கிடைச்ச அப்ரசண்டி வேலைய மாசச்செலவுக்காச்சுன்னு ஒட்டிக்கொண்டு மருத்துவ மேல்படிப்புக்கான தகுதிப்பரிச்சைக்கு மாசக்கணக்கா படிச்சுக்கிட்டிருந்தானுங்க.


சென்னையில் இருந்து கொச்சினுக்கு வேலையாக சென்றுகொண்டிருந்த நான் மக்களைப்பார்த்து நாளாச்சு என்று கோவையில் இறங்கிவிட்டேன். ராத்திரி ஒன்பது மணிக்கும் மேலாகத்தான் முரளியும் வெங்கியும் டூட்டி முடிச்சுட்டு வந்தானுங்க. வீட்டில் சாப்பிடவேணாம்னு ஹோப்ஸ் SKP மெஸ்சுல முட்டைபரோட்டா அடிச்சோம். அங்கனயே நான் ஒரு வாழைப்பழமும் கிங்ஸ்சும். அது சேல்ஸ்மேன்களின் இரவுச்சாப்பாட்டு முடிவுரை. பேசிக்கொண்டே வண்டிய எடுத்துக்கிட்டு வீட்டுக்குப்போக பிடிக்காம சங்க ஆபீஸ்ல பொங்கல் போடலாம்னு ஆஜர். போனவந்த கதைகளையும் போனவ வந்தவ சேதிகளையும் மாறிமாறி பேசிக்கொண்டிருந்தபொழுது அருகாமையில் கோபிண்ணாவின் குரல் கேட்டது.


“என்னடா இன்னேரத்துல அங்க செய்யறீங்க?”


“ஒன்னுமில்லண்ணே... ரொம்ப நாளாச்சு பேசிக்கிட்டிருக்கோம்”


கால்வாயைத்தாண்டி வண்டிகளின் தடத்தில் மட்டுமே உருவான ஒத்தப்பாதையில் பார்த்தீனியச்செடிகளின் ஊடாக அண்ணன் நடந்து அருகில் வந்தார்.


“நீ எங்கடா இங்க? சென்னைல இருக்கறதா சொன்னாங்க?



“ஆமாண்ணே. சும்மா இன்னிக்கு ஊருக்கு வந்தேன்”


“நீங்க என்னடா.. டாக்டருக்கு முடிச்சு ___ ஆஸ்பிடலுக்கு வேலைக்கு போறிங்களாம்?”


”ஆமாண்ணே… இப்பத்தான் டூட்டிமுடிச்சு வந்தோம்”



இதன்பிறகு என்னாச்சோ கோபிண்ணாவே வெடுக்கு வெடுக்குன்னு பேசிக்கிட்டே போனாப்ல



“என்னடா உங்க ஆஸ்பிடல்ல ஒரே வகைவகையா கேரளா குட்டிங்கதான் நர்சுங்களாம்?”



“எல்லாத்துக்கும் பெரிய பெரிய காய்ங்களாம்ல? கின்னுகின்னுன்னு இருப்பாளுங்களாம்ல? வேலை பாக்கறப்பவே தனியா தள்ளிட்டுப்போயி நல்லா மேல பெனைஞ்சுவிட்டாலும் ஒன்னுமே சொல்லமாட்டாங்களாம்ல?!”



”ஈசியா செட் பண்ணி போட்றலாமாம்… நீங்களே அங்கன வைச்சே ஏகமா போடுவீங்கலாம்ல?”


எல்லாம் ஒரே நிமிடம்தான். மங்கிய நிலவொளியின் வெளிச்சத்திலோ அல்லது சற்றுத்தள்ளி எரியும் ஃபவுண்டரி நேம்போர்டின் டியூப்லைட் வெளிச்சத்திலோ கோபிண்ணாவுக்கு எங்களின் அந்தக்காலத்திய கிரிக்கெட்டு விளையாடித்திரிந்த சிரார் முகங்கள் தெரிந்திருக்கக்கூடும். அந்த ஒரு கணத்தில்தான் நாங்களும் அவரது உள்ளுலகத்தில் இருந்து தவறி வெளிவிழுந்த ஒரு ரகசிய முகத்தினை கண்டிருக்கக்கூடும்.


சட்டென்று பேச்சை முடித்த கோபிண்ணா “நேரமாவுது… சீக்கிரம் போய்ப்படுங்கடா… வீட்டுல திட்டப்போறாங்க...” என்று சொல்லியபடியே திரும்பி விருவிருன்னு நடந்து வீட்டை அடைந்து கேட்டைத்திறந்து உள்ளேபோய் மறைந்தார்.



நாங்கள் மேற்கொண்டு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நிலவொளியில் வேப்பமரத்தின் நிழல் பிசிறுபிசிறாக விழுந்த தெருவிளக்கின் மஞ்சள் ஒளிபோர்த்திய சன்னல்கள் சாத்தப்பட்ட அவரது வீட்டையே பார்த்தபடி நின்றிருந்தோம்.

கருத்துகள்

  1. i know your blogs from Tamilmanam long before, but you are not in tm recently. Is there any reason? Anyway continue !!!!

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப நாள் கழிச்சி ஒரு வித்தியாசமான பதிவை படிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு