உங்களுக்கெல்லாம் அடக்கமுடியாத சிரிப்பு எப்பொழுதெல்லாம் வரும்? சும்மா கவுண்டமணியண்ணன் தமாசுக்கு சிரிக்கறதெல்லாம் சொல்லாதீங்க! அதுகூட ஒருவிதமா அண்ணன் சொல்லறதை யோசிச்சோ இல்லை அவரு சொன்னவிதத்தையும் உடம்பை திருப்பறதுலையும் வைத்தோ வருகிற சிரிப்பு! யாராவது கொய்யான் மாட்டுனா ஒரு சிரிப்பு வருமே அதுவான்னு கேக்கறீங்களா? இந்த வார குமுத்துல ஒரு மேட்டரு. ஒருத்தரு 10 ரூவா நோட்டுல ஒரு பக்கத்துல "திருப்பிப்பார்க்காதே"ன்னு எழுதியிருந்ததை படிச்சிட்டு படக்குன்னு திருப்பிப்பார்க்க அங்க "இப்பத்தாண்டா சொன்னேன் வெண்ண.."ன்னு எழுதிருந்ததாம். படிச்சிட்டு பகீர்னு சிரிச்சிட்டேன். இதுவும்கூட நான் சொல்லற ரகத்துல வராது. நான் சொல்லறது சும்மா கண்ணுல தண்ணிவர கழுத்து நரம்பெல்லாம் இழுக்க உடம்பெல்லாம் சிலிர்க்க சிரிக்கறது?! உருண்டு புரண்டு சிரிக்கமாட்டோம்! ஆனா அடக்கவே முடியதபடிக்கு ஒரு சிரிப்பு! ஏதாவது ஞாபகம் வருதா? எனக்கு இந்தமாதிரி சிரிப்பெல்லாம் ஏதாவது விபத்து நடந்துச்சுன்னா வருங்க!
சரியான சேடிஸ்ட்டுன்னு திட்டாதிங்க! எனக்கும் காரணம் தெரியலை! நாம கவுண்டமணி-செந்தில் அடிஉதைகளையும் டாம்&ஜெர்ரி துரத்தலையும்கூட இந்த மனோபாவம் இருக்கறதுனாலதான் ரசிக்கறமான்னும் தெரியலை! ஆனா கண்ணுக்குமுன்னால ஒரு விபத்து நடந்தா அடுத்த செகண்டு அதிர்ச்சிக்கு பதிலா எனக்கெல்லாம் சிரிப்புதான் பொத்துக்கிட்டு வருது!:( அதுக்கப்பறம்தான் அடிபட்டவங்களை தூக்கிவிடறதோ இல்லை வர்ற வாய்ச்சண்டையை வேடிக்கை பார்க்கறதோ சமாதானப்படுத்தறதோ. இப்படித்தான் பாருங்க நான் படிக்கற காலத்துல எங்க அப்பாரு புல்லட்டை சன்னமா அவருக்கிட்ட இருந்து பாடிக்கறந்து சும்மா டெர்மினேட்டர் கணக்கா ஹேண்டிலு சீட்டு எல்லாத்தையும் மாத்தி, சைலென்ஸருல ஓட்டையை போட்டுக்கிட்டு டமடமன்னு சுத்தின காலம் ஒன்று உண்டு! காலேஜு கேட்டுக்குள்ள நுழைஞ்சாலே சவுண்டு மொத்த காம்பவுண்டுக்கும் கேட்டும். அப்படியே பசங்க பொகைவிட பொண்னுங்க இவன் சைசுக்கு இதெல்லாம் தேவையான்னு ஒரு புரிஞ்சுக்க முடியாத பார்வையை வீச(அது என்னன்னு புரிஞ்சிக்க ஒரு தெரிஞ்ச பொண்ணுக்கிட்ட போய் என் புல்லட்டைப்பத்தி கேட்க அவ "நீ ஹெல்மெட்டை போட்டுக்கு ஓட்டும்போதுமட்டும் பார்க்க அழகா இருக்கு"ன்னு சொன்னது இங்க வேணாம்! ) அப்படியே போய் ஒட்கார்ந்துக்கிட்டே சைடு ஸ்டேண்டை போட்டுட்டு ஒருகாலை தூக்கி அரைவட்டம் போட்டு இறங்குனா மனசுக்குள்ள அப்படியே ஆர்னார்ல்டு சிவநேசனே இறங்கறாப்பல இருக்கும். ஆனா அன்னைக்கு நான் இருந்த 57கிலோ வெயிட்டுக்கு அந்தக்கோலத்தை பார்க்கறவங்களுக்குத்தான் என்ன கேவலமா இருந்துச்சோ தெரியலை! சரிவிடுங்க... இந்த மெதப்புக்கூட இல்லைன்னா அப்பறம் அன்னைக்கெல்லாம் நான் என்ன ஸ்டூடண்ட்டு நெ.1!?
மேட்டரு இது இல்லைங்க! மழை ஓய்ஞ்சு தூறலிடும் ஒரு தீபாவளி காலைல வழக்கம் போல எல்லா பிலிமும் காலனில காட்டிட்டு நம்ப வாகனத்தை எடுத்துக்கிட்டு நகர்வலம் வர்றதுக்காக பாப்பையா பட்டிமன்றம் ஆரம்பிச்ச உடனே(அன்னைக்கும் அவரேதாங்க..! ) என் ஃபிரண்டோட கெளம்புனேன்! புதுச்சட்டை முதுக்குக்கு பின்னால உப்பிக்கிட்டு நிக்க மழைசாரல் முகத்துல தெறிக்கக்கிடைக்கும் ஒரு சின்ன சிலிர்ப்புடன் வண்டி பாப்பநாயக்கன்பாளையம் வரைக்கும் நல்லாத்தாங்க போச்சு! மணிஸ்கூல் திருப்பத்துலதான் அதை நான் பார்த்தேன். நல்லா 4 கிலோக்கு நடுரோட்டுல மாட்டுச்சாணம்! அதுக்கு இதுதான் தீபாவளி கழிவுபோல. பார்த்துக்கிட்டே அதுமேல ஏத்தி வண்டிய ரைட்டுல திருப்புனேன்! அவ்வளவுதான் தெரியும். வண்டி எனக்கு முன்னால சறுக்கிக்கிட்டு போக அதன்பின்னால நான் வழுக்கிக்கிட்டே போக என் பின்னால என்னை நம்பி ஏறுன ஆருயிர் நண்பன் என்னன்னே புரியாம என்னை தொரத்திக்கிட்டு வர்றான்! மூணுபேரும் பஸ்ஸ்டாண்டு பொட்டிக்கடைக்கு முன்னால போய் ஹால்ட் ஆனோம். சுத்தி நிக்கறவங்க எல்லாம் பதறிப்போய் ஓடிவராங்க! புது சட்டையெல்லாம் சேறாகி பேண்ட்டு முட்டியெல்லாம் கிழிஞ்சு கையெல்லாம் சிராய்ப்பாக நான் ரோட்டுல குப்பற முதுகு குலுங்க படுத்துக்கிடக்கறேன்! ஓடிவந்து ரெண்டுபேரு கையப்புடிச்சு தூக்குனாங்க. என்ன செஞ்சுக்கிட்டு இருந்தேன்னு நினைக்கறீங்க?! சிரிப்புத்தான்!! கண்ணுல தண்ணி பொங்க குலுங்கிக்குலுங்கி சிரிக்கறேன்! என் கூட்டாளிக்கு கைமுட்டில சரியான அடி. கைய நீட்டி நீட்டி மடக்கறான். அதைப்பர்த்த உடனே இன்னும் தாங்க முடியாத சிரிப்பு! ரெண்டுபேரு என் வண்டிய தூக்கி நிறுத்த இன்னொருத்தர் கடைல சோடா வாங்கிக்கிட்டு வந்து அவனுக்கும் எனக்கும் கொடுக்க நான் ரெண்டு மடக்கு குடிச்சுட்டு மறுபடியும் பீரிடும் சிரிப்பு! சுத்தி நின்னவங்க மொதல்ல கொழம்பிட்டு அப்பறம் என்னை திட்டிட்டு அப்பறம் அவங்களும் சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. "சரியான லூசுப்பயகடா நீங்க"ன்னு ஒரு பெரியவரு ஆசீர்வாதம் அளிக்க நொண்டிக்கிட்டே வண்டிய தள்ளிக்கிட்டு போய் சரிசெய்து வீட்டுக்கு வந்து வழக்கத்தைவிட கொஞ்சம் கூடுதலா மண்டகப்படிய வாங்கிக்கட்டிக்கிட்டு சிராய்ப்புகள் எரிய தீவாளி கொண்டாடுனோம். அன்னைக்கு சிரிச்சதுக்கு நாங்க சாணில வழுக்கிக்கிட்டு போன அபூர்வக்காட்சிதான் காரணம்னு நினைக்கறேன்!
சரி இதை விடுங்க! இதாவது நான் விழுந்தது. மத்தவங்க விழுந்தாலும் இதேமாதிரி சிரிச்சா நீங்க என்ன சொல்லுவிங்க? அஞ்சு வருசத்துக்கு முன்னால நான் இதே பெங்களூருல ஆபீஸ்கோயரா( எங்கப்பாரு காலத்துல இந்த வார்த்தைக்கு ரொம்ப மதிப்பாமே? இப்பச்சொன்ன சிரிக்கறாங்க!!) இருந்தப்ப வழக்கம்போல காலைல லேட்டா கிட்ஸ்கெம்ப் சிக்னலைதாண்டி அல்சூர் சிக்னல்கிட்ட திரும்புனேன். என்னைத்தாண்டிக்கிட்டு ஒரு ஆட்டோ ரொம்ப வேகமா போச்சுங்க. ஒரே செகண்டுதான். டமால்னு ஒரு சவுண்டு! ஆட்டோக்கு எதுத்தாப்புல அதே ஸ்பீடுல வந்த ஒரு ஸ்கூட்டரு பேலன்ஸ் தவறி நேரா ஆட்டோவோட முன்சக்கரத்துலயே விட்டுட்டாப்புல. என்ன நடந்துச்சுங்கறீங்க?! சொன்னா நம்ப மாட்டீங்க! ஆட்டோ அப்படியே ஒரு டைவ்! கண்னுக்கு முன்னால ஒரு சுத்து சுத்தி டம்முன்னு பக்கவாடுல படுத்தாப்புல விழுந்துச்சு! இது போதாதா நான் சிரிக்க? சிரிச்சுக்கிட்டே ஆட்டோக்கிட்ட ஓடறேன்! அதுக்குள்ள ஆட்டோக்காரரு சாய்ஞ்ச வண்டில இருந்து வெளில வந்து ஸ்கூட்டர் பின்னால விழுந்து கிடந்த ஓட்டிக்கிக்கு வந்தவரை சட்டையைப்பிடுச்சுட்டாரு. ரெண்டு பேருக்கும் ஒரு அடியும் இல்லை! ஆட்டோவோட முன்னாடி சக்கரம் மட்டும் 90 டிகிரிக்கு வளைஞ்சு "ங்கே" பார்க்குது. விசயம் இதோட முடியலை. படுத்துக்கிடக்கற ஆட்டோக்குள்ளாற இருந்து சாண்டில்யனின் "மருண்ட விழி"களுடன் ஒரு பொண்ணு தலை மட்டும் எட்டிப்பார்த்தது பாருங்க! அப்பறம் தான் தெரிஞ்சது ஆட்டோக்குள்ளாற ஒரு பொண்ணு இருக்கறது!! அப்ப ஆரம்பிச்ச சிரிப்புத்தான். அந்த பொண்ணை ஆட்டோவிலயே சாஞ்சவாக்குல உட்காரச்சொல்லிட்டு ஆட்டோவை நிமிர்த்தி வெளில கொண்டு வரவரைக்கும் சிரிப்புத்தான். நல்ல வேளை! அந்த பொண்னு இருந்த மிரட்சியில நான் சிரிக்கறதே அதுக்கு தெரியலை! ஆட்டோக்காரருதான் சிரிக்கறதைப்பார்த்து திட்டிட்டாப்புல. இந்த சண்டையெல்லாம் முடிஞ்சு ஆபீசுக்கு போனப்புறமும் அந்த கவுந்த ஆட்டோவிலிருந்து எட்டிப்பார்த்த தலையை நினைச்சு நினைச்சு அன்னைக்கு முழுசும் சிரிச்சேன்.
ஆனா உயிரிழக்கும் அளவுக்கு நடக்கும் ஒரு விபத்துன்ன என்ன? அதோட விளைவுகளும் அந்த நேரத்தின் மனநிலைகளும் என்ன அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்கும் ஒரு நிகழ்வு நடந்துபோச்சுங்க! அஞ்சு வருசத்துக்கு முன்ன கோவையில இருந்து பெங்களூரு போகறதுக்காக ஒரு தனியார் வண்டில டிக்கெட்டை வாங்கிட்டு பத்தரைக்க கிளம்புனேன். அன்னைக்கின்னு பார்த்து நெப்போலியன் மீசைய முறுக்கிக்கிட்டு கைய நீட்டி நீட்டி யாரையோ திட்டிக்கிட்டு இருக்கற ஒரு டப்பா படத்தைப்போட வண்டி அவினாசிய தாண்டுனதுக்கப்பறம் லைட்டா தூங்க ஆரம்பிச்சுட்டேன். வண்டி பெருந்துறைய தாண்டலை! அதுக்கு முன்னாலயே எங்கயோ நடுவாந்திர காட்டுல போய்க்கிட்டு இருக்கும்போது "டப்" அப்படின்னு ஒரு சின்ன சத்தம்! வண்டி நின்னுருச்சு! வண்டிக்குள்ள சலசலன்னு பேச்சு! என்னடானு தூக்கம் கலைஞ்சு எட்டிப்பார்த்தா அங்கே அந்த கோரக்காட்சி! ஒரு மாருதி ஆம்னிவேன் வண்டி முன்னால மோதி டாப் எல்லாம் கழண்டு நொறுங்கிபோய் கிடக்கு! சன்னலைத்திறந்து பார்த்தா நாலுபேரு வேனுக்குள்ளயே கவுந்திருக்கறதும் ஒரு பையனோட அழுகுரழும் கேக்குது! பக்கத்துல யாருமே இல்லை! எங்க பஸ்ஸுக்குள்ள அவிங்கவிங்க அப்படியியே ஒக்கார்ந்துக்கிட்டு ஜன்னல் வழியா வேடிக்கை பார்க்கறாங்க! ரோட்டுல ஒரு ஆளுங்களும் இல்லை! டிரைவரும் க்ளினரும் அடிச்சவொடனேயே பக்கத்து ஊரு ஸ்டேசனுக்கு சரணடைய ஓடிட்டாங்க! இல்லைன்னா மக்கள் அடியப்போட்டுருவாங்களோன்னு பயம்! நான் இறங்கி ஓடிப்போய் பக்கத்துல பார்த்தா ரத்தச்சகதியா கிடக்குது! டாப்பே இல்லாம முன்னாடி நொருங்கிப்போன வேனுல டிரைவர் சீட்டுல அமர்ந்தபடி ஒரு பிணம். கழுத்துக்குமேல முட்டையா ஒரு கண்ணு மட்டும் இருக்கு. மூளை சிதறிப்போய் தனியா நடுரோட்டுல வெள்ளைக்கோட்டுமேல கிடக்கு. அதுக்குப்பக்கத்துல ஒரு பெண்மணியோட பிணம். மண்டைல மட்டும் இரத்தம். மற்றபடி தூங்கறமாதிரியே இருக்கு. பின்னாடிசீட்டுல இரண்டு பெண்கள். யாரு உயிரோட இருக்காங்கன்னே தெரியலை. கண்ணாடி ரோடெல்லாம் சிதறிக்கிடக்கு. அவசரத்துல செருப்பை தேடிப்போட்டுக்காம இறங்கிட்டேன். வண்டியோட கண்ணாடி சில்லுசில்லா நொறுங்குமே தவிர அவ்வளவு சீக்கிரம் காலைக் கிழிக்காது. பின்னாடி சீட்டுல ஒரு பையனோன தலையும் அழுகுரலும் மட்டும் கேக்குது. அவன்மேல விழுந்து கிடக்கறவங்களை நகர்த்திட்டு அவனை வெளியே இழுக்கப்பார்க்கிறேன்! முடியவேயில்லை. மத்தவங்க கைகாலெல்லாம் சிக்கிகிடக்கு. ரெண்டுநிமிசம் தனியா போராடியிருப்பேன்! அதுக்குள்ள பக்கத்துல ஒரு மளிகைசரக்கு ஏத்திக்கிட்டுபோற TVS50ங்க ரெண்டுவந்து நின்னது. அதுல இருந்து வந்த இரண்டு மலையாளிங்க உதவ மேல கிடந்த பிணத்தை விலக்கிட்டு அந்த பையனை இழுத்து வெளியே கொண்டுவந்தோம். ஏழெட்டு வயசுதான் இருக்கும் அவனுக்கு. ஒரு சிறுகீறல்கூட இல்லை. விக்கிவிக்கி அழுவறான். அப்பறம்தான் பார்த்தோம். நடுரோட்டுல ஒரு பெண்விழுந்து கிடக்கறது. கையை விரித்துக்கொண்டு மெல்லிய முனகலுடன் அவங்க கிடக்க மண்டையிலிருந்து ரத்தம் கோடுபோல ரோட்டின் விளிம்பைநோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. நாங்க பின்சீட்டுல விலக்கிய ஒரு பெண்ணுக்கும் இன்னும் உயிர் இருக்கு. மயக்கத்துல இருந்து தெளிய வலில கத்த ஆரம்பிக்க அப்பதான் தெரிஞ்சது அவங்க உயிரோட இருக்கறதே! எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. மெள்ள அவங்களை புரட்டிப்போட்டு ரோட்டின் இந்தபக்கமா கொண்டுவந்தோம். அதற்குள்ள என் பஸ்ஸுக்குள்ள இருந்து சிலபேர் இறங்கிவந்து சற்றுத்தள்ளி சுத்திநின்னு பார்க்கறாங்க. அந்த பையன் ரோட்டின் ஓரமா உட்காரவைச்சு தகவல்கேட்டா அவனுக்கு ஒன்னுமே தெரியலை.
ஆம்னி வண்டியோட ஒரு சைடு ஹெட்லைட்டைத்தவிர வேற வெளிச்சமே இல்லை! மெல்ல மெல்ல பஸ்ஸும் லாரியுமா அந்த இடத்தை தாண்டி போக ஆரம்பிச்சது. எங்களுக்கு என்ன செய்யறதுன்னு தெரியலை. டிரைவருங்க கிட்ட பக்கத்துல இருக்கற போலீஸ் ஸ்டேசனுக்கு தகவல் சொல்லச்சொல்லிக்கிட்டு இருக்கறோம். அந்த மலையாளிங்க அடிபட்டுக்கிடக்கற அந்த இரு பெண்களையும் வண்டில ஏத்தி பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிடலுக்கு கொண்டுபோகச்சொல்லி அந்த மலையாளிங்க சொல்லறாங்க. ஆனா தாண்டிப்போன வண்டிங்க தகவல் சொல்லறதா சொன்னாங்களே தவிர அடிபட்டவங்களை வண்டில ஏத்திக்கவே இல்லை. அந்த மலையாளிகளுக்கு கோவம் வந்துவிட்டது! எதிர்த்தாப்புல வந்த பஸ்ஸை குறுக்கிட்டு நிறுத்தி அந்த இரு பெண்களையும் ஏத்திக்க சொன்னாங்க. ஆனா டிரைவரும் கண்டக்டரும் ஏத்திக்கவே இல்லை. சண்டையே வந்திருச்சு! டிரைவரு தகவல் மட்டும் சொல்லறேன்னு வண்டிய கிளப்பிட்டாரு. பஸ்ஸுக்குள்ளாற இருக்கற எல்லோரும் எட்டிப்பார்த்தபடியே போக பஸ் இருட்டில் மறந்தது! பின்னாலயே ஒரு ஜீப் வந்தது. மலையாளிங்க அதையும் குறுக்க விழுந்து நிறுத்திட்டாங்க. அதுக்குள்ளார ஒரு நடுத்தர தம்பதி! ஓட்டிவந்தவர் மெதுவா அவர் மனைவியை பார்த்தார். அந்தம்மா இது என்னடா ரோதனைன்னு பார்த்தது. அவர் வண்டியை ஓரங்கட்டறேன்னு சொன்னவர் கொஞ்சம் முன்னால போய் வண்டியை ஒரே அழுத்தா அழுத்திக்கிட்டு போயிட்டார். அடிபட்ட அந்த பெண்மணியின் இரத்தச்சகதியின் மேல் டயர் தடம் பதிய வண்டிகள் தாண்டிச்சென்றுகொண்டே இருக்கின்றன. தாண்டிப்போன இருசக்கர வண்டிகள்மட்டும் சிலது நிற்க ஒரு 15 பேர் அங்க இருந்திருப்போம். அந்த மலையாளிகளுக்கு கோவம்னா கோவம்! அவினாசில மளிகைக்கடை வைச்சிருக்காங்களாம். எங்க ஊரா இருந்தா நடக்கறதே வேற. இப்படி ஒருத்தரு அடிபட்டு உயிருக்கு போராடும்போது இப்படி கண்டுக்காம தாண்டிப்போகவே முடியாதுங்கறாங்க. எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை.
அடித்த ஆம்னி வண்டில இருந்து அரிசி, பட்டுதுணிமணிகள், கல்யாணப்பத்திரிக்கைகள் என ரோடெல்லாம் பொருட்கள் சிதறிக்கிடக்கின்றன. அதிலிருந்து ஒரு பத்திரிக்கையை எடுத்து வெளிச்சத்துல பார்த்து அதிலிருந்த மணமகன் வீட்டாரின் போன் நம்பரை கண்டுபிடிச்சோம். அப்போதான் இங்க செல்போன் வந்த புதுசு. அவுட்கோயிங் 5ரூபாய் இருந்த சமயம். நான் சும்மா படத்துக்கு ஒரு ஃபிரிபேய்ட் போன் வைச்சிருந்தேன். 40ரூபாய் தான் பேலன்ஸ். அந்த நம்பருக்கு கூப்பிட்டு யாரோ ஒருத்தரு தூக்கக்கலக்கத்துல போனை எடுக்க அந்த டென்சன்ல நான் சொல்லறதே அவருக்கு புரியலை! அதுக்குள்ள என் போன் அவுட்டு. மத்தவங்க யாருக்கிட்டையாவது போன் இருக்கான்னு விசாரிச்சிக்கிட்டு இருக்கும்போது மணி பண்ணெண்டரை ஆயிருச்சி. என்ன செய்யறதுன்னு தெரியாம சிதறிக்கிடந்த பொருட்களையெல்லாம் ஓரமா எடுத்துவெச்சுக்கிட்டு இருந்தோம். வயித்துல பாலை வார்க்கறாப்புல போலீஸ் வந்து சேர்ந்தாங்க. கண்ணுல தூக்கம் கலையாம ஒரு சப்-இன்ஸ்பெக்டரும் மூணு போலீசும். அஞ்சே நிமிசத்துல ஏரியா க்ளியர் ஆயிருச்சு. அவருக்கிட்ட அந்த போன் நம்பரை கொடுக்க அவர் வயர்லெஸ் மூலம் உடனே அவனாசி ஸ்டேசனுக்கு சொல்லி வண்டி நம்பரோட தகவல் சொல்லச்சொன்னாங்க. அப்பறம் அந்த ரெண்டு பெண்களையும் ஜீப்புல ஏத்தறதுக்கு முயற்சிபண்ணோம். நாங்க ஓரமா நகர்த்திவைத்த அந்த பெண்ணை நானும் ஒரு போலீசும் தூக்கப்போனோம். நான் காலைப்பிடிக்கப்போக அவர் பார்த்தவுடனேயே சொல்லிட்டாரு. "கண்ணைப்பாருங்க தம்பி! சொருகிக்கெடக்கு. அவங்க போயிட்டாங்க"ன்னு. இதுபோல எத்தனை கேசுக பார்த்திருக்காரோ! அவங்களை விட்டுட்டு வலியில் அனத்திக்கொண்டு இருந்த மற்றொரு வயசான பெண்மணியை தூக்கினோம். நான் காலைப்பிடித்து தூக்க ஒரே அலறல்! கால் ஒடைஞ்சிருக்கு. அப்படியே எதிர்ப்பக்கமா 'ட' மாதிரி வளைஞ்சிருச்சு. மெதுவா இடுப்பையும் தோளையும் பிடிச்சு தூக்கி ஜீப்புல ஏத்திட்டு வண்டியை அவனாசி ஆஸ்பிடலுக்கு அனுப்பிட்டு மத்த வண்டி வர்றதுக்காக காத்திருக்க ஆரம்பிச்சாங்க போலீசார்.
அதுக்குமேல எனக்கும் அங்க என்ன செய்யறதுன்னு தெரியலை. என் பஸ்ஸுல ஏறி என் பையை எடுத்துக்கிட்டு யாரோ தண்ணிதர கையெல்லாம் இருந்த இரத்தக்கரைகளை கழுவிட்டு வேற ஒரு சட்டையை மாத்திக்கிட்டு ஈரோடு, சேலம், ஓசூர்ன்னு மாறிமாறி பெங்களூரு வந்து சேர்ந்தேன். வழியெல்லாம் ஒரே யோசனை இந்த மாதிரி ஒரு விபத்து நடந்தா என்ன செய்யனும், எப்படி நடந்துக்கனும்னு ஒன்னுமே தெரியலைன்னு. அதுக்கப்பறம் அடுத்தநாள் எங்கப்பாருக்கு போன் செய்து தகவலைச்சொல்ல அவர் இவங்க திருப்பூரில் இருக்கும் ஒரு மாப்பிள்ளையின் குடும்பம் எனவும் ஓட்டி வந்தவர் மாப்பிள்ளையின் அண்ணன்னும் கல்யாணத்துக்கு சேலத்துக்கு பத்திரிக்கை வைக்கப்போனவங்கன்னும் தெரிஞ்சது. பஸ்டிரைவர் மேல தப்பே இல்லை. அசதில தூக்கக்கலக்கத்துல நேரா பஸ்ஸுல கொண்டுவந்து விட்டிருக்காரு மனுசன். விபத்துக்கப்பறம் சரியான முறைல செயல்பட்டிருந்தா அந்த பெண்ணோட உயிரை காப்பாத்தியிருக்கலாமேன்னு ஒரே வருத்தம். அதுக்கப்பறம் நான் எந்த ஊருக்கு போனாலும் என்னோட ஏரியா காவல்நிலைய எண், மருத்துவமனை எண், ஆம்புலன்ஸ் எண், ப்ளூக்ராஸ் எண் இது நான்கையும் என் போன்ல பதிஞ்சுவைக்கறது வழக்கமாயிருச்சு.
இப்பவும் என் மனசைக்குடையற ஒரு கேள்வி! அந்த மணப்பெண்ணுக்கு அதன்பிறகு திருமணம் நடந்ததா இல்லை ராசி இல்லைன்னு முத்திரை குத்தி திருமணத்தை நிறுத்திட்டாங்களாங்கறதுதான்!
இளவஞ்சி,
பதிலளிநீக்குவிபத்துகள் மிக கொட்டூரமானவை. பலவற்றில் நானே சிக்கியிருந்ததாலும், பார்த்ததாலும் சொல்கிறேன்.
அதே சமயத்தில், விபத்துகளில் சிக்கியவர்களை உதவுவதில் மிகவும் கவனம் தேவை. பல சமயங்களில் நல்லெண்ணத்தில் செய்யும் உதவியே அவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும். நம்நாட்டில், மற்ற நாடுகளில் உள்ளது போல் Emergency Basics உம் அடிப்படை CPR போன்றவையும் பரவலாக மக்களை சென்றடையாதது வருத்தத்திற்குரியது.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குவிபத்து தடுப்பு, விபத்து நடந்தால் அதை தாங்கும் வண்ணம் வாகனத்தின் வடிவமைப்பு இருக்கிறதா என்பது பற்றியெல்லாம் நம் ஆட்கள் சிந்தித்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். இரண்டு சாதாரண விபத்துகளில் நான் சரியான அடி வாங்கியிருக்கிறேன். பேருந்து வடிவமைப்பு ஒரு குடிசைத் தொழில் போல இருக்கிறது. சின்ன அதிர்வுகளை கூட தாங்காது இந்த பேருந்துகளின் வடிவமைப்பு. கார் போன்ற வாகனங்களுக்கு இப்போதுதான் சில கட்டுப்பாடுகள் வந்திருக்கின்றன. மாருதி 800, ஓம்னி, டடா சுமோ போன்றவை அதிர்வுகளை சிறிதும் தாங்க மாட்டா.
பதிலளிநீக்குஅப்புறம் இராமனாதன் சொல்வது போல விபத்தின் போது என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படையும் பலருக்கு தெரியாது.. போலிஸ் தொல்லை என்ற பயம் வேறு..
ராம்ஸ், //அதே சமயத்தில், விபத்துகளில் சிக்கியவர்களை உதவுவதில் மிகவும் கவனம் தேவை// நீங்கள் சொல்வது சரியான கருத்துத்தான். அன்றைக்கும் இதேதான் நடந்தது. எந்த உதவியுமே இல்லாத ஒரு தருணத்தில் ஏதாவது செய்யவேண்டுமே என்ற பரிதவிப்பில்தான் நாங்கள் அனைவரும் இருந்தோம். சரியான அறிவூட்டலும் பயிற்சியும் இருந்திருந்தால் அன்றைக்கு ஒரு உயிர் போயிருக்காது.
பதிலளிநீக்குசுதர்சன், என்னைக்கேட்டால் இந்தியாவில் உள்ள வாகனங்களிலேயே மிக மோசமான வடிவமைப்பைக்கொண்டது மாருதி ஓம்னிதான். அடித்தவுடன் ஆள் காலி!
//விபத்தின் போது என்ன செய்ய வேண்டும் என்ற அடிப்படையும் பலருக்கு தெரியாது// எனக்கும்தான். இதன்பிறகுதான் முதலுதவி பற்றி படித்துத் தெரிந்துகொண்டேன். பள்ளிகளில் சாரண இயக்கம், NCCல் சொல்லிக்கொடுக்கிறார்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி!
இளவஞ்சி., இதை பத்தி நான் ஒரு பதிவு எழுதணும்னு நினைச்சிருந்தேன். நீங்க எழுதிட்டிங்க. ., தூங்கிகிட்டே ஓட்டி அவரோட சேர்த்து எத்தனை பேரு போய்ட்டாங்க பாருங்க., 1 நிமிட அலட்சியம். விபத்திற்கு என் மனதிற்கு மிக நெருக்கமாக இருந்த ஒரு அத்தை மகளைப் பறிகொடுத்திருக்கிறேன். இங்கு தன் மகளின் பிரசவத்திற்காய் வந்திருந்து எங்களுடன் ஆறு மாதம் மிக நெருக்கமாய் பழகிய ஒரு தோழியின் அம்மா., ஊருக்கு கிளம்பி சென்று., நன்றாக விமானத்திலிருந்து தரையிரங்கி., நாமக்கல்லிற்கு காரில் புறப்பட்டு, செல்கல்பட்டில் விபத்தால் உயிர் நீத்தார் (1 1/2வருடத்திற்கு முன்னால்). ஒரு மாதம் இங்கு எதைப்பார்த்தாலும் அவராகவே தெரிந்தது. என் பிறந்த நாளுக்கு அவர் அளித்த பரிசு., என் மகளிற்கு வாங்கிய தோடு (அவர் கடைசியாக வாங்கிய பொருள்!). இன்றும் அவர் நினைவுகளை கிளறிவிட்டு கண்ணீர் தரும். மனம் கனக்கச் செய்த பதிவு.
பதிலளிநீக்குஇளவஞ்சி.. இந்த பதிவ படிச்ச சில நாட்கள்ளயே, நானும் இது போன்ற ஒரு பதிவை பதிப்பேன்னு கொஞ்சமும் எதிர்பார்கலை.. என் நண்பனோட விபத்து பற்றி சொன்னேன்ல, அங்கே அவனுடன் இருந்த படித்த நண்பர்களுக்கே ஒன்னும் தெரியல என்ன பண்ணனும்னு.. 12 மணிநேரம் கழித்தே அறுவைசிகிச்சை நடந்தது.. :-(
பதிலளிநீக்குஇப்பத் தான் படிக்குறேன்.
பதிலளிநீக்குவழக்கம் போல சிரிக்க ஆரம்பிச்சு ,கடைசில மனச பிசையுற பதிவு..கடைசியில நீங்க சொன்ன குறிப்பை பின்பற்றுரது நல்லது.