தமிழ்ப்பதிவுகளில் எங்கேயோ எதனையோ மேய்ந்து கொண்டிருந்தபோது படிக்கக் கிடைத்தது இது!கடந்த ஒரு வருடமாக எனக்கு இந்த தமிழ்ப்பதிவுகளுடன் பரிச்சயம். வந்ததில் இருந்து இன்று வரை பலவகையான வாதங்களை படித்திருக்கிறேன். சிலவற்றில் பல விடயங்களை கற்றிருக்கிறேன். பலவற்றில் படித்துவிட்டு சலிப்புடன் நகர்ந்து சென்றிருக்கிறேன்! இணைய விவாதப் பதிவுகளைப் பொருத்தவகையில் நான் ஒரு வாசகன் மட்டுமே! விருப்பமில்லை என்பதைவிட எனக்கு அதில் சுத்தமாய் திறமையில்லை என்பதே முதற்காரணம்!
இங்கே அனைவரும் "எழுத்தாளர்கள்" என்றவகையில் ஒவ்வொரு வாதத்திற்கும் பின்னுள்ள நோக்கங்களையும் அதன்மூலம் நிறுவ முயலும் அவரவர் நம்பிக்கைகளையும் யாரும் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. இந்த நிலையில் எந்தவித வெறுப்பும், கருத்துக்களை திணிக்க முயலும் வேகமும், அடுத்தவர் உணர்வுகளை காயப்படுத்தும் வார்த்தைகளும் எதுவுமின்றி அடுத்தவர் வார்த்தைகளால் சீண்டப்பட்டாலும் அதனை தன்மையாய் எதிர்கொள்ளும் விவேகமும், அழுத்தந்திருத்தமாக சொல்லவந்த கருத்தை தெளிவாக எடுத்துவைக்கும் பாங்குமாக இப்படியும் ஒரு பின்னுட்டம் இடமுடியுமா என்ற ஆச்சரியக்குறி இன்னும் எனக்குள் இருக்கிறது! இங்கு சொல்லப்பட்ட கருத்துக்களில் மற்றவர்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கலாம்.. இருக்கும்!! நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புவது கருத்துக்கள் சொல்லப்பட்ட முறையைப் பற்றி மட்டுமே! இதே பதிவில் நானும் ரோசாவசந்த் அவர்களின் ஒரு வார்த்தையால் தூண்டப்பட்டு அதற்கு எதிவினையாகவும் எதிரொலியாகவும்தான் என் கருத்தை உள்ளிட்டிருக்கிறேனே தவிர அவருக்கு என் நிலையை கருத்துக்களை தெளிவாக சொல்லவேண்டுமென்ற குறிக்கோளோ அறிவுமுதிர்ச்சியோ இருக்கவில்லை! தங்கமணி அவர்களது பின்னூட்டம் இன்றைக்குத்தான் இது எனக்கு படிக்க கிடைத்திருக்கிறது! என் உணர்வை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இங்கே!
ம்ம்ம்.. வலைப்பதிவுகளின் மூலமாகவும் நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது! :)
ரோசாவசந்த் அவர்களின் சட்டி சுட்டதடா! (http://rozavasanth.blogspot.com/2005/12/blog-post.html) என்ற பதிவில் குழலி அவர்களது ஒரு முயற்சியைப் பற்றிய விவாதத்தில் தங்கமணி அவர்களது ஒரு பின்னூட்டம்!
"குழலியின் பதிவில் என்னுடைய பின்னூட்டம் குறித்து சில விளக்கங்களை அளிக்கவிரும்புகிறேன். முதலில் அப்படியொரு முயற்சியைக் குழலி செய்ய முனைவது எந்த வகையிலும் வரவேற்கத்தக்கது என்பதை நீங்களும் புரிந்துகொள்கிறீர்கள். பொதுவாக இராமதாஸ்-பாமக ஆகட்டும் திருமாவளவன் - விசி ஆகட்டும் ஒரு கேலிக்குரியதான பார்வையாலேயே மேட்டுக்குடி நடைமுறைகளை, பண்பாட்டை, விழுமியங்களை தங்கள் அடையாளங்களாகக் கொண்ட ஊடகங்களால் பார்க்கப்பட்டு வருகின்றன. அதற்கான காரணங்களாக இக்கட்சிகளின் போராட்ட முறைகள், தலைவர்களின் நிறம் தொடங்கி, அவர்களது மொழி, உடை, சாதி, பழக்கவழக்கங்கள் இவைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் காட்டப்படுகின்றன. இவ்வாறு ஒரு பொதுவான உருவத்தை வெகுஜன ஊடகங்கள் மிக நுட்பமாக உருவாக்கும் வேளையில், தீவிர அரசியல் நோக்கங்கள் கொண்ட மேட்டுக்குடி இன்னொரு வழியாக இவர்களின் அரசியல் பங்குபெறலை எதிர்கொள்கிறது. இவர்களிடம் இருக்கும் சில போலித்தனங்கள், பொது அரங்கில் பேசக்கூடாததாக சித்தரிக்கப்படும் மொழியை பேசுவது (politically incorrect useage of language), சுயமுரண்கள், இவைகளை இவர்களுக்கு எதிராக திறம்படத் திருப்புவது அதன்மூலம் இவர்களைப்பற்றிய தவறான மதிப்பீடுகளை உண்டாக்குவதும் ஒரு உத்தி. இதை நான் 'சோ' உத்தி என்றழைப்பேன். இதைப்பற்றிய விரிவாக எனது பொய்மை இகழ் (http://bhaarathi.net/ntmani/?p=91) என்ற பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த வகை நக்கலின் மூலம் இவர்களை எதிர்கொள்வதால் இன்னொரு நன்மையும் இருக்கிறது. மிக மோசமான இந்த இழிந்த கீழ்நிலைப்படுத்தும் விமர்சனத்தை நீங்கள் சட்ட ரீதியாகவோ, வன்முறையாலோ எதிர்கொள்ள முடியாது. ஏனெனில் அதன் மூலம் இந்த எதிர்ப்பு சக்திகள் மேலும் பலமும் பயனும் பெறவே அது உதவும். இவர்களை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள இவர்களுக்கு என்று எந்த அரசியல் தளமும் இல்லை. பொது நாகரீகம், பொது நன்மை, சாதியில்லாத நல்லிணக்கம், இன்றைய அமைப்பை காப்பாற்றும் தேசபக்தி (ஜெய்ஹிந்) போன்ற ஜென்டில்மேன் கற்பனைக் கருத்தியல்களைக்கொண்டும் நடைமுறை வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகளை, குரூரங்களை மூடிமறைத்து பொய்யான நம்பிக்கையை கடைபரப்புவதைத் தவிர வேறு அரசியல் தளமென்ற ஒன்று இல்லாதவர்கள். இவர்கள் இழப்பதற்கு என்று எதுவுமில்லாதவர்கள். அதாவது எதையும் இழக்காமலே இந்த சூதாட்டத்தை நகர்த்தி காய்களை வெட்டும் சகுனித்தனமான செயல்பாடுகொண்டவர்கள்.
சற்றே பின்னோக்கிப் பார்த்தால் தி.மு.க கூட இதே மாதிரியான எதிர்ப்புகளை, நவீன தீண்டாமையைக் கடந்து வந்ததுதான். இன்று மரம்வெட்டி கட்சி என்று பமக கேலி செய்யப்படுவதைப் போல திமுக கூத்தாடிகள் கட்சி என்றே நக்கலடிக்கப்பட்டது. கூத்தாடிகள் எந்த வகையில் குறைந்தவர்கள் என்பது ஒருபுறமிருக்க, கூத்தாடிகளை முதலில் அரசியலுக்கு பயன்படுத்தியது காங்கிரஸ் இயக்கம் தான். தியாகி விஸ்வநாத தாஸ் தொடங்கி எம்.எஸ் வரை காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டது. பி.கே.சுந்தராம்பாள் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் காங்கிரஸ் இந்த வகையான கேலியைச் சந்திக்காமல் திமுக சந்திப்பது எந்தவகை அளவு கோலால் எனபது நீங்கள் அறிந்ததுதான். அப்படியே தலைவெட்டிக்கட்சிகளும் தலைப்பாகை தலை வெட்டிக்கட்சிகளும், கற்பழிப்பு சேனைகளும், கருக்குழந்தை கொல்லும் தளங்களும் அவ்வாறு விமர்சிக்கப்படாமல் மரம்வெட்டிக்கட்சி உருவாவது வேடிக்கையும் விபரீதமுமல்லவா?
இப்படியான ஒரு 'சோ' தனமான அணுகுமுறையே வலைபதிவிலும் பமக-விசி குறித்து வைக்கப்பட்டது. இந்த அணுகுமுறையை எதிர்கொள்ளும் சில நபர்களும் அந்த சக்திகளை இன்னும் வலுப்படுத்தியும், இன்னும் சில இடங்களில் அவ்வணுகுமுறை இருத்தலுக்கான ஒரே சக்தியாகவும் மாறிப்போயினர். இந்த நையாண்டிக்காரர்களின் பலமே அதை எதிர்த்து வாதிடுபவர்களிடமிருந்துதான் பிறக்கிறது. இவர்களோடு வாதிடுவதன் மூலம் அவர்களுக்கென்று ஒரு தரப்பும் (நியாயமும்) இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை பெறுவதில் அவர்கள் வெற்றி பெறுகின்றனர். இந்த ஒரு விஷச்சுழலில் சிக்கி சுழன்றுகொண்டிருந்தவர்களில் குழலியும் ஒருவர் என்று நான் நினைத்தேன். அவரது அரசியல் கருத்துக்களில் ஒரு சாய்வு, சார்பு இருக்கலாம்; ஆனால் அதன் நோக்கம் ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்டவர்களது முன்னேற்றத்தைப் பற்றியது. அது கண்டிப்பாக விமர்சனத்துக்கு உரியதாய் இருக்கலாம். ஆனால் அது எந்த மக்களின் நலனையும் கருத்தில் கொள்ளாத, அடக்குமுறை அமைப்பை காப்பாற்ற கேளிக்கை சாமரம் வீசுவோரின் போலியான நச்சு விமர்சனத்தின் பக்கம் பக்கமாக வைத்து பார்க்கமுடியாதது. குழலி போன்றவர்களின் அரசியல் நிலைப்பாடுகளில் உள்ள குறைகள், போதாமைகள், சார்புகள் அவர்களையும் விட வெகுமக்கள் அரசியலை முன்னெடுப்பவர்களாலேயே விமர்சிக்கப்படவேண்டும். ஏனெனில் அப்போது அதன் நோக்கம் இவ்வகையான அடித்தட்டு மக்களின் அரசியல்பார்வையைக் கூர்மைப்படுத்துவதாகவும், கோதுகளை அகற்றுவதாகவும் இருக்குமே அன்றி வெறும் காற்றில் கத்திவீசச்செய்து களைத்து ஓயவைப்பதாக இருக்காது.
இந்நிலையில் குழலி அம்மக்களைப் பற்றி எழுத முனைந்தது இந்த விஷச்சுழலில் இருந்து வெளியேறி வந்த ஒரு பெரிய நிகழ்வாகவே நான் பார்க்கிறேன். அவர் எழுதப்போவதை எப்படி விமர்சனத்துடன் வரவேற்கமுடியும்? அவர் எதையாவது எழுதட்டும்! அது சார்புடையதாகவே இருக்கட்டும். அது நியாயக்குறைவானதாக இருந்தால் அதன்மூலம் மக்களை நெருங்கமுடியாது என்பதை அவர் அறிவார். எச்சரிக்கைகளுடன் அவரை வரவேற்க என்ன அவசியம் இருக்கிறது! அவர் எழுதுவதை நிபந்தனையின்றி வரவேற்பது என்பது அவர் சொல்வதனைத்தையும் நிபந்தனையின்றி ஒத்துக்கொள்வதாகாது. இப்படியான வெறும் காற்றில் கத்தி வீசச்செய்யும் தூண்டுதல்களில் இருந்து தப்பி வந்ததே மிகவும் அபாயம் விளைவிப்பதாகும். ஏனெனில் அதன் மூலம் அவர் நக்கல் சக்திகளுக்கு இரையளிப்பதை நிறுத்தியிருக்கிறார். இதுவே நான் அவரை எழுதுமாறு வரவேற்றதின் பின்னுள்ள காரணமாகும். இதை விமர்சனத்தோடு செய்யவேண்டும் என்பதில் எதுவும் அர்த்தமிருப்பதாக் எனக்குத்தெரியவில்லை. "
இளவஞ்சி,
பதிலளிநீக்குஇந்த பின்னூட்டத்தை நான் அப்போதே பார்த்து வியந்தேன்.பொதுவாகவே தங்கமணி கலக்குவார்.இப்போது நானும் இந்த சூழலில் சிக்கி காயப்படாமல் கரையேற முயற்சி செய்துகொண்டிருக்கும் சூழ்நிலையில் உங்களின் இந்த பதிவு
(பின்னூட்டத்தை முன்னூட்டமாக போட்டது)எனக்கு ஆசுவாசம் அளிக்கிறது.
உங்கள் அனுமதியுடன்..
//பொது நாகரீகம், பொது நன்மை, சாதியில்லாத நல்லிணக்கம், இன்றைய அமைப்பை காப்பாற்றும் தேசபக்தி (ஜெய்ஹிந்) போன்ற ஜென்டில்மேன் கற்பனைக் கருத்தியல்களைக்கொண்டும் நடைமுறை வாழ்வியல் ஏற்றத்தாழ்வுகளை, குரூரங்களை மூடிமறைத்து பொய்யான நம்பிக்கையை கடைபரப்புவதைத் தவிர வேறு அரசியல் தளமென்ற ஒன்று இல்லாதவர்கள். இவர்கள் இழப்பதற்கு என்று எதுவுமில்லாதவர்கள். அதாவது எதையும் இழக்காமலே இந்த சூதாட்டத்தை நகர்த்தி காய்களை வெட்டும் சகுனித்தனமான செயல்பாடுகொண்டவர்கள்.//
என்னமோ போங்க...
முத்து,
பதிலளிநீக்குதங்கமணியின் கருத்துக்கள் உங்களுடைய தற்போதய சூழலுக்கு ஆசுவாசமாக இருப்பின் உங்களது நன்றிகள் அவருக்கே!
//உங்கள் அனுமதியுடன்..// நீங்க வேற! நானே அவரது அனுமதியில்லாமல்தான் இதை இங்கே இட்டிருக்கிறேன்! :)