முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரிசர்வேஷன்


காலங்கார்த்தால ஏழரை மணிக்கெல்லாம் இப்படி வந்து ரயில்வே ஸ்டேசன் க்யுல நிக்கனுங்கற தலைவிதியை நினைச்சாலே கடுப்பாத்தான் இருக்கு. 15 நாள் லீவுல ஊருக்கு வரலாம்னு ப்ளான் எல்லாம் பக்காவா ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சிருந்தேன். கடைசி நேரத்துல ஆபீஸ்ல பிராஜெக்ட் டெலிவரி டேட்ல வைச்ச ஆப்புல வாங்கி வைச்ச வரமான லீவு ஒரு வாரம் தள்ளிப் போனதுல எல்லா ப்ளானும் மொத்தமா ஊத்தி மூடிக்கிச்சு. வாங்கி வைச்ச உள்ளூரு ரயில் டிக்கெட்டுகளையெல்லாம் கேன்சல் செஞ்சிட்டு வேற டிக்கெட்டு எடுக்கலாம்னா எல்லா ட்ரெய்னும் ஒரு வாரத்துக்கு டிக்கெட்டு கெடையாதுன்னு துண்டை விரிச்சிட்டானுங்க. தட்கால் டிக்கெட்டுதான் இப்போதைக்கு ஒரே வழி. வந்து எறங்குன கையோட பொண்டாட்டி புள்ளைங்களை சென்னைல மாமியாரு வீட்டுல விட்டுட்டு அங்க ரெண்டு நாளு சொந்தக்காரங்க வீட்டுக்கு எல்லாம் தலையைக் காட்டிட்டு மொத்தமா சேல்ல வாங்கிட்டுப் போன ஃபோஸ்டர் சாக்லேட்டுகளை விநியோகம் செஞ்சுட்டு கோவைக்கு தனியாத்தான் வந்தேன். ஃபாரின் ரிட்டர்ன்னு தெரிஞ்சப்பறமும் இந்தியா எங்களை சும்மா விட்டுருமா என்ன? அதே தான். தண்ணி ஒத்துக்காம பொண்டாட்டி புள்ளைங்களுக்கு 4 நாளா காய்ச்சல். இதனாலயே வேண்டிக்கிட்டபடிக்கு திருப்பதிக்கும் போக முடியலை. நாக்கை அடக்க முடியாம அந்தக்கால நியாபகத்துல கிராஸ்கட் ரோட்டுல சேட்டுக் கடைல பானிபூரியை ஒன்னுக்கு ரெண்டா சாப்பிடப்போக அது ரெண்டுக்கே ஒன்னுக்குப் போற மாதிரி நிக்காம ரெண்டு நாளைக்கு கலக்கி அடிச்சிருச்சு. 7 நாளு ஓடிப்போச்சு. ஹிம். இப்ப எல்லாம் ரெண்டு வருசத்துக்கு ஒரு தடவை ஊருக்கு வர்றதே பெரும்பாடா இருக்கு.

வந்து இறங்குனதுல இருந்து ஆரம்பிச்ச இம்சைக இன்னும் கொறைய மாட்டேங்குது. கஸ்டம்ஸ்லயே மொத இடி. "என்னா சார்? டாலர்ல சம்பாதிக்கறீங்க...எங்களையும் கொஞ்சம் கவனிச்சிட்டு போங்க சார்... இல்லைன்னா ஆபீசர் புல் அமவுண்ட்டு கட்டச் சொல்லுவாரு"ன்னு கூசாம கேக்கறானுங்க. நாசமாப் போறவனுங்க. கஷ்டப்பட்டு நாம சம்பாதிக்கறதுக்கு இவனுங்களுக்கு அழனுமாம். கேட்ட பத்தாயிரத்துக்கு பேரம் பேசி அஞ்சாயிரம் அழுது வெளிய வர்றதுக்குள்ளயே டென்சன் பீக்குல ஏறிக்கிச்சு. என்ன சிஸ்டம் வைச்சிருக்கானுங்களோ? ச்சே... கஸ்டம்ஸே இப்படி இருந்தா நாடு உருப்படுமா? இவனுங்க இப்படி கொள்ளையடிக்கறதாலதான் இண்டியா இன்னும் இப்படியே இருக்கு. நல்ல ரோடு இருக்கா? படிப்பு வசதி இருக்கா? ஒன்னுத்துலயும் முன்னேறாம அப்படியே சாணி பிடிச்சு வைச்சா மாதிரி இருக்கு. இவ்வளவு கொள்ளையடிக்கறாங்களே? ஏர்போர்ட்டாவது நல்லா இருக்கா? இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டாம். சந்தக்கடை மாதிரி இருக்கு! வர்ற பாரீனர்ஸ் நம்ப கண்ட்ரிய பத்தி என்ன நினைப்பாங்க? ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷனே இப்படி இருந்தா அப்பறம் நாடு எப்படி உருப்படும்?


இப்ப எல்லாம் ஏண்டா இப்படி கஷ்டப்பட்டு ஊருக்கு வரணும்னு இருக்கு. மொத தடவை திரும்ப வந்தப்ப இருந்த சந்தோசத்துல துளிகூட இப்பவெல்லாம் இருக்க மாட்டேங்குது. பழைய பாரின் ரிட்டர்ன்னு கெத்தெல்லாம் இப்போ வேலைக்கே ஆவாது போல. வீட்டுக்கு ஒரு மரம் நடறாங்களோ இல்லையோ வீட்டுக்கு ஒரு பையனோ பொண்னோ தனது பாஸ்டன் வீட்டையோ டெக்சாஸ் ஆபீஸ் பில்டிங்கையோ கூகிள் மேப்புல தெளிவா காட்டி வைச்சிருக்காங்க. இண்டியன் வெஜிடபிள்ஸ்சை எப்படி தேடி வாங்கறோங்கறதையும், தீவாளி கொண்டாட்டக் கதைகளையும் கேக்க யாருக்குமே இன்ரஸ்ட்டு வர்றதில்லை. அவங்களைச் சொல்லி என்ன? எங்க வீட்டுலயே அதே கதைதான். வத்தக்கொழம்பை தீச்சதுல இருந்து பொண்ணை ஸ்கூல்ல சேர்த்துனது வரைக்கும் போன்ல கதையா சொல்லி முடிச்சாச்சு. இப்போ வீட்டுக்கு வந்தப்பறம் அப்பாம்மா கிட்டயே ஒரு மணி நேரத்துக்கு மேல பேச விசயம் இருக்க மாட்டேங்குது. ஒரு நாளைக்கு வர்றப்போற நாலு பேரு கிட்டயாவது "சவுக்கியமா இருக்கீங்களா?, அண்ணன் பையன் என்ன படிக்கறான்? உங்க கொழந்தையா இது? இப்படி வளந்துட்டா!" ன்னு பல்லை இளிச்சிக்கிட்டு செயற்கையா பேசற கொடுமை இருக்கே... Such a Bullshit!

ஒரு காலத்துல ஜமா போட்டு திரிஞ்ச பசங்களைக்கூட இப்பவெல்லாம் பார்த்துப்பழக முடியறதில்லை. அவனவனுக்கு அவனவன் வேலையாம்! ரெண்டு வருசம் கழிச்சு வர்றமே வந்து பார்க்கலாம்னு இல்லை. "மாமே! சவுக்கியமா.. எப்படி இருக்க? வேல ஜாஸ்திடா.. வேணா வீக்கெண்டு ல பார்க்கலாம்'னு தண்ணிப் பார்ட்டிக்கு மட்டும் தெளிவா அடியப் போடறனுங்க. வாங்கிட்டு வர்ற பாடிஸ்ப்ரேக்கு இது பேசறதே அதிகம்னு நினைப்பு போல! எப்படியும் ஊருக்கு வந்தா இவனுங்க கூட ஒரு தடவை தண்ணியடிக்கனும். ரெசிடென்சிக்கு போனா ரெண்டு ரூவாய்க்கு குறையாம பழுத்துரும். 50 டாலரு! போதாதா என்ன? வேற என்னத்த செய்ய முடியும்?

நேத்து நைட்டு அவனுங்களோடதான் பார்ட்டி. அதே கும்பல். அதே ரெசிடென்சி. பழைய காலத்து பிகருங்க கதையெல்லாம் பேசி சிரிச்சு, வீட்டு கஷ்ட நஷ்டங்களை மேலாக்க அக்கறையுடன் கேட்டுக்கிட்டு, நடுநடுவுல புதுசா வந்த சினிமாக்களை தொட்டுக்கிட்டு பேச்சு 12 மணி வரைக்கும் போனது. சேட்டுக்கடை பேதி மேட்டரை சொன்னா சிரிக்கறானுங்க.

"மாப்ள... இதே பீளமேட்டு முக்குல வாரத்துக்கு ரெண்டு தடவ முட்டை போண்டாவும் மொளகா பஜ்ஜியும் தின்னவன் நீ! இப்ப என்னா பாரீனர் மாதிரி படம் போடறே?"ங்கறானுங்க. நான்சென்ஸ். அந்தக் காலத்துல அப்படி இருந்தா இப்பவும் அப்படியே இருக்கனுமா என்ன? முன்னேறாத நாட்டுல இருந்துக்கிட்டு நார்மல் ஆவரேஜ் லைப்னா என்னன்னு கூட இவனுங்களுக்கு தெரியலை. இதே என்னோட ஊரா இருந்தா இன்னேரம் கடைய மூடி ஸீல் வைச்சிருப்பானுங்க. ஜனங்க ஹெல்த் மேல கூட கொஞ்சமாவது அக்கறை இல்லாத நாடாத்தான் இன்னும் இருக்கு! ஒரு சிஸ்டம்? ஏதாவது ஒரே ஒரு சிஸ்டம் ஒழுங்கா ஒர்க்காவுதா? எல்லாத்துலயும் பிராடுத்தனம். ப்ரைபரி. ஒருத்தனுக்கும் பேட்ரியாட்டிசமே இல்லை. இருந்தா இந்த நாடு இப்படி இருக்குமா? ஒரு 15 நாளு சந்தோசமா வந்து போக முடியலை! இதெல்லாம் ஒரு என்னைக்கு உருப்பட்டு என்னத்த செய்ய?

வீட்டம்மாவும் புள்ளைங்களும் இன்னைக்கு காத்தால இங்க வர்றாங்க. சேரனும் கிடைக்கலை. நீல்கிரீஸ்லயும் டிக்கெட்டு இல்லை. வேற ஏதோ ஒரு வண்டி. 9 மணிக்கு வந்து சேரும்போல. நான் அதுக்குள்ள ரெண்டு நாள் கழிச்சி திரும்ப போறதுக்கு சேரன்ல தட்கால்ல டிக்கெட் எடுக்கலாம்னு இப்ப இங்க வெயிட்டிங். 8 மணிக்கு கவுண்ட்டரு திறந்து அஞ்சே நிமிசத்துல எல்லா டிக்கெட்டும் முடிஞ்சிருமாம். ஏழுமணிக்கு மப்பு இன்னும் முழுசா தெளியாம தலைவலியோட வந்தா திறக்கவே ஆரம்பிக்காத கவுண்ட்டருக்கு க்யு கட்டி நிக்கறானுங்க. 7.50க்கு டோக்கன் குடுப்பாங்களாம். அந்த நம்பரை வாங்கிக்கிட்டு நின்னா 8.05க்குள்ள டிக்கெட்டு கெடைச்சா உண்டு. இல்லைன்னா, KPNக்குதான் போகனும். புள்ளைங்களை வைச்சுக்கிட்டு பஸ்ல சென்னை வரைக்கும் போறத நினைச்சாலே இன்னும் எரிச்சலா இருக்கு. எப்படியாவது இந்த டிக்கெட்டை வாங்கிட்டம்னா ஒரு தலைவலி மிச்சம்.

காருக்கு 5 ரூவா பார்க்கிங் டிக்கெட்டாம். பழைய டோக்கனை வைச்சுக்கங்கன்னு ஏற்கனவே குடுத்து வாங்குனதுல பழைய வண்டி நம்பரை அடிச்சுட்டு என்னுதை எழுதிக்கிட்டு 3 ரூவா மட்டும் வாங்கிக்கிட்டான். என்ன பிராடுத்தனம் பாருங்க. காலங்கார்தாலயே ஆரம்பிச்சிட்டானுங்க. ஒரு சிஸ்டம் கூட இங்க ஃபூல்ப்ரூப் இல்லை. மிச்சமான ரெண்டு ரூபாய்க்கு பிளாட்பாரம் டிக்கெட்டை வாங்கிக்கிட்டு ஏழரைதானே ஆகுது. எவன் இருக்க்கப் போறான்னு நினைச்சுக்கிட்டு ரிசர்வேவன் செய்யற இடத்துக்கு வந்தா எனக்கு முன்னாடியே மக்கா வந்துட்டானுங்க.

எரிச்சலோடு முன்னாடி எத்தனை பேரு இருக்கானுங்கன்னு எட்டிப் பார்த்தேன். சரியா 12 பேரு! போச்சுடா! நான் 13வது ஆளா? இன்னைக்கு வெளங்குனாப்புலத்தான். வந்து வரிசைல நிக்கறதே மறுபடியும் எரியுது. இம்மாம் பெரீயா ரயில்வேஸ்னு சொல்லிக்கறானுங்க. Demand Vs supply யக் கூடவா சரியா மேனேஜ் பண்ண மாட்டானுங்க? அதுசரி! லல்லு மாதிரி காட்டானுங்களையெல்லாம் மினிஸ்டரா போட்டா அப்பறம் இந்த லச்சணத்துல இருக்காம வேற எப்படி இருக்கும்? ஒலகத்துல அங்கங்க 500KM வேகத்துல ரயில் ஓடுது. இங்க ரயில்வே ஆரம்பிச்சு 100 வருவம் ஆச்சு. 50KMக்கு ஓட்டறதுக்கு கூட துப்பில்லை. என்னத்த டெவலப் ஆகி என்னத்த உருப்பட்டு?

வரிசைல ஒருத்தன் நாலாவதா காக்கி பேண்ட்டு போட்டுக்கிட்டு சாயம்போன பனியனோட கையில நாலு பார்ம் வைச்சுக்கிட்டு நிக்கறான். ஒரு ஆளுக்கு ஒரு பார்ம்தான் அலவ்டு. இவன் மட்டும் எப்படி நாலு பாரம் வைச்சிருக்கறான்னு தெரியலை. ஆளைப் பார்த்தா சென்னைக்கு வித்தவுட்ல போற மாதிரி இருக்கறான். இவனா இத்தன டிக்கெட்டு வாங்கப் போறான்? எனக்குள்ள இருந்த அன்னியன் சிலிர்த்துக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான்.

"ஹலோ! ஒரு ஆளுக்கு ஒரு பார்ம்தான். நீயே நாலு வைச்சிருந்தா எங்களுக்கெல்லாம் டிக்கெட்டு கிடைக்கறதா.. வேண்டாமா?" சரியான நியாயத்துடன் தான் கேட்டேன். அவன் சொன்னதை கேக்காத மாதிரி அந்தப் பக்கம் திரும்பிக்கிட்டான்.

"எல்லாம் டிராவலர்ஸ் ஏஜண்டுங்க குடுக்கறது சார். வரிசைல நிக்கறதுக்காக இந்த மாதிரி ஆளுங்களை ஏற்பாடு செஞ்சி நிக்க வைச்சிருப்பானுங்க. டிக்கெட்டுக்கு அஞ்சோ பத்தோ கெடைக்கும் போல... அவசரமா டிக்கெட்டு வாங்கறதுக்குத்தான் தட்கால் ஆரம்பிச்சாங்க... இவனுங்க அதுலயும் சம்பாதிங்கறானுங்க" ன்னாரு எனக்கு முன்னாடி நின்ன ஆளு.

"அதெப்படி சார். கவுண்ட்டர்ல கேக்க மாட்டாங்களா?"

"நீங்க வேற... உள்ள இருக்கறவங்களுக்கும் காசு போனாலும் போகும். இவனே இங்க எதானா வேல செய்யற ஆளாத்தான் இருப்பான். எல்லாம் உள்ளுக்குள்ள டீலிங்கா இருக்கும் பார்த்துக்கிடுங்க..."

எனக்கு திரும்பவும் டென்சனாக ஆரம்பித்தது.

'யோவ். இத்தனை பேரு நிக்கறமில்லை. நீ மட்டும் நாலு பார்ம் வைச்சிருக்கற?"

"சாரே! எல்லா ஃபாரத்துக்கும் ஆளுங்க வருது. நானும் ஒனுக்கு மின்னாடியே வந்து வரிசைல தானே நிக்கறேன். அப்பறம் என்னாத்துக்கு சவுண்டு விடற?" ன்னான் என்னை திரும்பிப் பார்த்து.

"சும்மா சொல்லறானுங்க சார். கடைசி வரைக்கும் இவனேதான் நின்னு டிக்கெட்டு வாங்குவான் பாருங்க..." இது முன்னாடி நின்னவரு.

இது போதாதா எனக்கு? "யோவ். மரியாதையா பின்னாடி போய் நில்லு.. நீயே அத்தன டிக்கெட்டு வாங்குனா நாங்க என்ன இளிச்ச வாயங்களா?"ன்னு ஒரு கொரலு விட்டேன். "அதானே! போய் பின்னாடி நில்லப்பா..."ன்னு என்கூட இன்னும் ரெண்டுபேரு சேர்ந்துக்கிட்டாங்க.

அதுக்குள்ள ஒருத்தன் வந்து எல்லோரும் பார்க்கவே இன்னொரு ஃபார்மை அவன்கிட்ட குடுத்துட்டு போனான். எனக்கு கோவம் தலைக்கு ஏறிடுச்சு.

"டேய்... என்ன வெளையாடறயா? இப்ப இன்னொருன்னு வேற வாங்கி வைச்சிருக்கற? ஒழுங்கா பின்னாடி போய் நில்லு.. இல்லைன்னா ரயில்வே போலீசை கூப்பிடுவேன்"

"உன் வேலையப்பாருங்க சாரே! நானும் லைனுல தானே நின்னு வாங்கறேன். அப்பறது என்னாத்துக்கு கூவற? நான் வாங்குறதுல உனக்கு என்னாத்துக்கு எரியுது?"ன்னான்.

இது போதாதா எனக்கு? கண்ணுக்கு முன்னாடி எனக்கு கிடைக்கப்போற டிக்கெட்டை ஒருத்தன் சிஸ்டத்தை ஏமாத்தி வாங்கப் பார்க்கறான். பார்த்துக்கிட்டு சும்மா இருக்கனுமா? இதுக்குள்ள என்னோட இன்னும் நாலு பேரு சேர்ந்துக்கிட்டாங்க. அவங்களுக்கு அவங்க டிக்கெட்டு கெடைக்காதோன்னு எரிச்சல்.

"போடா.. போய் பின்னாடி நில்லு"ன்னு வரிசைல இருந்து தள்ளி விட்டோம். அவனும் சும்மா இல்லை. "என்னய்யா மேல கைய வைக்கறீங்க? நீ யாரு என்னக் கேக்கறதுக்கு?"ன்னு திரும்பத் திரும்ப லைனுக்குள்ள வந்தான். இந்த தள்ளுமுள்ளுலயும் சத்தத்துலயும் நெஜமாவே ஒரு ரயில்வே போலீசு கையில குச்சியோட வந்துட்டாரு.

"தள்ளுங்கய்யா.. என்னாங்க இங்க தகறாறு?"

'சார்... தட்கால் டிக்கெட்டுக்கு அஞ்சாரு ஃபாரம் வச்சுக்கிட்டு நிக்கறான். கேட்டா நம்பளையே என்னாங்கறான். என்னான்னு கேளுங்க"

"சார், நானும் லைன்லதான் நிக்கறேன்..' இது அவன்.

"இல்ல சார்... இப்பக்கூட அந்த டிராவல் ஏஜண்டுக்கிட்ட இன்னொரு பாரம் வாங்குனான். இவனுங்களுக்கெல்லாம் இதே பொழப்பு. நாங்க எல்லாம் டிக்கெட்டு எடுக்கறதா வேண்டாமா?"... இது முன்னாடி நிக்கறவரு.

"அட விடுங்கப்பா.. ஏதோ கொஞ்சம் சில்லறை வரும்போல.. சம்பாதிச்சிட்டு போறான்.." இது போலீசு.

"அதெப்படி சார்.. எங்களுக்கு டிக்கெட்டு கிடைக்க வேண்டாமா? பிராடுத்தனம் பண்ணறான். பார்த்துட்டு சும்மா இருங்கறீங்க" இது கோரஸ்...

'டேய்.. வாடா.. வெளில வாடா... இத்தன பாரமாடா வைச்சிருக்க... சும்மா விடுவாங்களா?" - இது போலீசு..

"சார்... வரிசைலதான் சார் இருக்கறேன்.... பாரத்துக்கெல்லாம் ஆளுங்க வருது சார்..." அவன் சொல்லச் சொல்ல "வாடா வெளீல.. காலங்காத்தால கழுத்தறுத்துக்கிட்டு.."ன்னு அவனை கழுத்துமேல கையாவைச்சு தள்ளிக்கிட்டு போனாரு போலீஸ்.

"விடுங்க சார்... கைய வுடுங்க சார்.."னு சொல்லிக்கிட்டே போனவன் சடார்னு திரும்பினான்.

'ஒம்மாள...ஓ.... பு...... சு..... ஓ..... எம்பொழப்புல எதுக்குடா மண்ணைப் போடற.."ன்னு ஆரம்பிச்சவன் இன்னும் கேவல கேவலமாய் என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டியபடியே போலீஸ்காரரு தள்ளத்தள்ள வெளியே சென்றான்.

எனக்கு தாங்கமுடியாத ஆத்திரமாயிருச்சு. ரத்தம் கொதிக்குது. அத்தனை பேரும் என்னையே பாக்காறாங்க

"விடுங்க சார்... படிக்காத ஆளுங்க வேற எப்படி பேசுவானுங்க... இவனுங்க கூட எல்லாம் வைச்சுக்கவே கூடாது" ங்கறாரு பின்னாடி நிக்கறவரு.

"பாஸ்ட்டர்ட்... என்ன பேச்சு பேசறான் பாருங்க... பாக்கறது ஏஜெண்டு வேலை.. இதுல நம்பளைத் திட்டறான் நாயி.." எனக்கு கையெல்லாம் டென்ஷன்ல நடுங்குது. அத்தனபேரு முன்னாடியும் எவன்னே தெரியாத ஒரு ஜந்துவிடம் திட்டு வாங்கியது பயங்கற அவமானமாப் போயிருச்சு.

அதுக்கப்பறமென்ன? அதே டென்ஷன்ல நின்னு டோக்கனை வாங்கிக்கிட்டு அதுக்கப்பறம் டிக்கெட்டும் கிடைச்சு வெளில வரவரைக்கும் அத்தனைபேரும் என்னையே பரிதாபமா பாக்கற மாதிரியே இருந்தது.

மெதுவா ரிசர்வேசன் ஆபீசைவிட்டு பிளாட்பாரத்துக்கு வந்தேன். நீல்கிரீஸ் சேரன் எல்லாம் வந்து போயிருச்சு. பொண்டாட்டி வர்ற ட்ரெயினு 9 மணிக்குத்தான் வந்து சேரும் போல. மணி எட்டரைதான் ஆகுது. தூக்கக் கலக்கத்தோடும், கண்ணுல பீளையுடனும், பல்லு வேளக்காம ஊத்த வாய்களுடனும் மொத்தமா ஒரு பெரிய கும்பலை இறக்கி விட்டுட்டு கெளம்புச்சு ஒரு வண்டி. எனக்கு இன்னும் ஆறலை. அந்த நாதாரிப்பய திட்டுனதுல இருந்து ஹார்ட்பீட்டே சரியில்லை. ரத்தம் கொதிச்சுக்கிட்டே இருக்கு. என்ன நாடுயா இது? ஒரு சிஸ்டம் ஒழுங்கா இருக்கா? எல்லாத்துலயும் ஏமாத்து... பிராடுத்தனம்.. நாடே பித்தலாட்டக் கண்ட்ரியா மாறீட்டு வருது. எவனுக்காவது அக்கறை இருக்கா? லேசாக தலை வலிக்க ஒரு காபி குடிச்சா நல்லா இருக்குமேன்னு ஸ்டாலை நோக்கி நடந்தேன். காபி வாங்கி திரும்புவதற்குள் குபுக்குன்னு கிளம்பியது நாத்தம்! 10 நிமிசம் நின்ன வண்டி கிளம்பறதுக்குள்ள காட்டுப்பயக காலைக்கடனை முடிச்சுட்டானுங்க போல! ச்சை... நிக்கற வண்டில டாய்லெட் போகக்கூடாதுங்கற காமன்சென்ஸ்சாவது இருக்கா? வீச்சம் தாங்காமல் வாங்கிய காபியை பாதிக்கு மேல் குடிக்க முடியாமல் வெறுப்பாக கப்போடு தூக்கியெறிந்தேன்.

ம்ம்ம்... உலகத்துலயே பெரீரீரீய ரயில்வேன்னு பேரு. ஒரு சுத்த பத்தமா இருக்கா? கேண்டீன்ல இருந்து கக்கூசு வரைக்கும் நாறுது. 10 வருசத்துக்கு முன்னாடி எப்படி இருந்துச்சோ அதுக்குக் கொஞ்சமும் குறையாம...

அந்த சண்டையையே நினைத்துக் கொண்டிருந்தால் தலைவலி அதிகமாகும் போல தோன்றியது. ஹிக்கின்பாதம்ஸில் ஒரு ஹிண்டுவை வாங்கிக் கொண்டு பென்ச்சில் வந்து அமரும் போதுதான் கவனித்தேன். இரண்டு பெண்கள் கூடையும் முறமுமாக காலையில் இருந்து வந்துசென்ற வண்டிகளில் இறக்குமதியான நரகலை அள்ள இரண்டு ஆண்கள் தண்ணீர் குழாயைக் கொண்டு பீய்ச்சியடித்தபடி நரகல் அள்ளிய இடத்தை கழுவிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் அவனைக் கவனித்தேன். மடித்துவிட்ட காக்கி பேண்ட்டும் சாயம்போன பனியனுமாய் அவன் தான். அவனே தான்! மீண்டும் எனக்கு ரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.

நான் அவனைப்பார்த்து விட்ட ஒரு நொடியில் அவனும் என்னைப் பார்த்தான். என் முகத்தில் படர்ந்திருந்த குரூர புன்னகையை அவனும் கவனித்திருக்க வேண்டும். முகத்தில் சிறிய அதிர்ச்சிக்குப் பிறகு குனித்து கழுவ ஆரம்பித்தான்.

"அடச்சே! வெறும் பீயள்ளற ஆளா நீ? இந்த ரேஞ்சுல இருந்துக்கிட்டா என்னை கெட்ட வார்த்தைல திட்டின? பாஸ்ட்டர்ட்... இப்ப எனக்கு தெரிஞ்சிருச்சுடா... உன்னை மாதிரி ஆளுங்களையெல்லாம் எங்க வைச்சு அடிக்கனும்னு" என மனதில் கருவியபடியே...

..விடுவிடுவென நடந்து அடுத்த பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த ரயிலின் ஒரு கம்பார்ட்மெண்டில் ஏறி கழிவரையினுள் நுழைந்து பேண்ட்டை கழற்றி அமர்ந்து முக்க ஆரம்பித்தேன்.

* * * * *

Story inspired by the news http://in.rediff.com/news/2006/apr/27look.htm

கருத்துகள்

  1. //ஒன்னுக்கு ரெண்டா சாப்பிடப்போக அது ரெண்டுக்கே ஒன்னுக்குப் போற மாதிரி//

    மற்றபட்டி வழக்கம் போல இளவஞ்சி டச் :-)

    பதிலளிநீக்கு
  2. kovaththa kaatta ennamaa idea thareenga!!!!

    பதிலளிநீக்கு
  3. இளவஞ்சி
    ரொம்ப முக்காதீங்க...
    அடுத்த வண்டிக்கு நான் அந்த பிளாட்பாரம் வர வேண்டியுள்ளது.:-))
    எழுத்து நடை சூப்பர்.

    பதிலளிநீக்கு
  4. பதிவின் தலைப்பில் உள்குத்து ஏதேனும் உள்ளதா ? :-)))

    பதிலளிநீக்கு
  5. ரெண்டு மூணு சந்தேகம்;
    - நிஜமா ஊருக்கு வந்திருக்கீங்களா?
    - சும்மானாச்சுக்கும் எழுதியிருக்கீங்களா?
    - சீரியஸா..?
    - கட்டுரை என்ன சொல்ல வருது?

    மொத்தத்தில எனக்கு புரியவேயில்லை ..

    பதிலளிநீக்கு
  6. சராசரி இந்தியனாக, இந்தியாவைத் திட்டிக் கொண்டே அதே அக்கிரமத்தை வரிசையாக செய்வது, ம்ம்ம்....

    //வெறும் பீயள்ளற ஆளா நீ? //

    நாலு பேரு உங்க பிளாக்ல முக்குறது உறுதி :-)

    பதிவுக்கு சம்பந்தமில்லாத மேட்டர்.

    இந்தப் பதிவில் இருக்கும் புகைப்படம் அமெரிக்க உள் நாட்டுப் போர் ஆரம்பிப்பதற்கு முன்னால் எடுத்தது. லிங்கன் நினைவகத்தில் பார்த்த ஞாபகம்.

    பதிலளிநீக்கு
  7. நண்பர்களின் வருகைக்கு நன்றி!

    உள்குத்தெல்லாம் இல்லைங்க. வெளிப்படையான கதைதான். ஆனால் இதில் மறைந்திருக்கிற அடுத்தவனை அடக்கியாளும் குயுக்தி பலபேருக்கு வெளிப்படையாக தெரிவதில்லை. தெரிந்தாலும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

    இட ஒதுக்கீடு பற்றி என்னால் பலப்பல புள்ளிவிவரங்களையும் தகவல்களையும் படித்து புரிந்துகொள்ள முடிந்ததில்லை. நீதிமன்ற தீர்ப்புகளை வார்த்தைக்கு வார்த்தை விளங்கிக்கொள்ளும் அளவுக்கும் அறிவுஜீவி இல்லை. ஆனால், இட ஒதுக்கீட்டை எதிப்பவர்கள் அதன் காரணங்களாக எடுத்துச்சொல்லும் திறமை, தகுதி போன்றவற்றில் ஒளிந்து கொண்டிருக்கும் எள்ளலை, சுயநலத்தை பொதுநலமாக மாற்றிச்சொல்லும் வார்த்தை ஜாலங்களை படிக்கும்போது உணர்ந்து கொள்ள கடினமாக இருந்ததேயில்லை.

    படிப்போ, பதவியோ, வசதிவாய்புகளோ மட்டுமே மனிதப் பண்புகளை கொடுத்து விடாது போல. வாய்ப்புக் கிடைக்கும்போது சக மனிதனை வெகு எளிதாக பிறப்பை வைத்தும் செய்த தொழிலை வைத்தும் போட்டுப் பார்த்து விடுகிறார்கள். நாட்டுக்கு மருத்துவ 'சேவை' செய்வதற்காக படிப்பவர்கள் இட ஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது தெருக்கூட்டுவதையும் செருப்பு தைப்பதையும் செய்துகாட்டிய செய்தி கீழே. அதைப் படித்தபோது தோன்றிய கதைதான் இது.

    http://in.rediff.com/news/2006/apr/27look.htm

    உதய்,

    படம் நீங்க சொல்லறதுதான். முதுகில் இருக்கும் தழும்புகளை மீண்டும் வெளிச்சம் போட்டு தடவிப்பார்ப்பதில் சில பேருக்கு இன்னும் ஆனந்தம் இருக்கிறது என்பதைத்தான் இந்த செய்தியும் படமும் உணர்த்துவதால் சேர்த்தேன்.

    பதிலளிநீக்கு
  8. இதுக்கு தான் உங்களை எல்லாம் தனியா விடக்கூடாது.. இப்படி அறிவு பசி எடுத்து திரியரீங்களே??

    பதிலளிநீக்கு
  9. >தருமி said...
    ரெண்டு மூணு சந்தேகம்;
    - நிஜமா ஊருக்கு வந்திருக்கீங்களா?
    - சும்மானாச்சுக்கும் எழுதியிருக்கீங்களா?
    - சீரியஸா..?
    - கட்டுரை என்ன சொல்ல வருது?

    மொத்தத்தில எனக்கு புரியவேயில்லை ..

    intha kuzhappam enakkum irunthathu ennadaa vaathiyaar ippadi sothappalaa mudichittaaraennu. aanaa unka vilakkathai paarthathum enkiyo poyittenka. noothula oru vaarthai sonnaaalum .....

    nethila adicha maadhiri sollitteenka.

    kalakkal return ilavanji

    பதிலளிநீக்கு
  10. ராசா,

    வயசாக வயசாக இப்படியாயிரும் போல! :)

    நால்ரோடு,

    பதிவைப்படிச்சிட்டு நீங்க எல்லாம் வண்டி வண்டியா திட்டுவீங்க.. அப்பறமா வந்து விளக்கம் சொல்லலான்னு பார்த்தேன். ஆனா எல்லாரும் தலைல மட்டும் அடிச்சுக்கிட்டு அழகிரிய திட்டறதுக்கு மொத்தமா போயிட்டீக்க போல :)

    வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. ஐயோ! இளவஞ்சி...அந்தாளு ரொம்பக் கெட்டவரு. எனக்கு அவரப் புடிக்கவே இல்லை. அந்த வகையில கதாசிரியரா நீங்க ஜெயிச்சிட்டீங்க.

    ஒரு உண்மை தெரியுமா? நாம யார அடிப்போம்னா...நம்மள விட வலிமை குறைஞ்சவனத்தான். ஆனா அத ஒத்துக்க மாட்டோம். அந்த அளவுக்கு அடுத்தவன ஏறி மிதிக்கிறது நமக்குள்ள ஊறிப் போயிருக்கு.

    நல்ல நடை. நல்ல எழுத்து. இதெல்லாம் தானா வர்ரதில்ல. ம்ம்ம்ம்ம்..பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. இளவஞ்சி..
    இந்த பதிவ... இப்ப தான் படிக்கறன்.
    நீங்க எழுதினது. படிக்க நல்ல இருந்தது.

    ஆனா.. உங்க கோவம் அர்த்தமானாதா தெரியல. நாடு சரி இல்ல... ரெயில்வே சரி இல்ல.. அப்பிடின்னு சொல்லரதெல்லாம்.. ரொம்ப அபத்தம். இது 120 கோடி கூட்டம் சார். அமெரிக்காவை விட... மூன்று மடங்கு சின்ன இடத்தில்... அமெரிக்காவை போல... ஐந்து மடங்கு மக்கள். யாருக்கு என்னத்த வசதி பண்ணிக் கொடுக்க.

    நீங்கலும்.. நானும்... என்னத்த ஒழுங்கா பன்றம். நீங்க கடைசியா சொன்ன் மாதிரி.. எல்லாரும்.. முக்கரோம்.

    நாமே விடை தேட வேண்டும். பொருத்திருந்து பார்ப்போம்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு