முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாதொருபாகனும் இணைய இந்துத்துவ எதிர்ப்பும்


சென்னையில் வேலை பார்த்த காலத்தில் எனக்கொரு அலுவலக நண்பர் இருந்தார். சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே வளர்ந்தவர். பள்ளி கல்லூரி சுற்றுலாவுக்கு சிலவெளியூர்கள் சென்றுவந்ததோடு சரி. சொத்தங்களும் வேலூர். கல்லூரியும் சென்னையை ஒட்டி. பேசுவதெல்லாம் சென்னை மற்றும் அதன் உயர்வுகள் பற்றியே இருக்கும். அவர் பார்வையில் கோவை மதுரையில் இருந்து வேலைக்கு சென்னை வந்த நாங்களெல்லாம் ஏதோ பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் என்றே எண்ணம். எங்கள் வாழ்க்கைமுறைகள் எதுவும் அவருக்கு தெரியாது. அறிந்துகொள்ளும் ஆர்வமுமில்லை. பொள்ளாச்சி எனில் மசக்கவுண்டனுங்க வேட்டியும் பெண்கள் கண்டாங்கியும் கட்டிக்கொண்டு வாழ்பவர்கள் என்கிற சினிமா கொடுத்த சித்திரம் தவிர வேறு அறியாதவர். கூட வேலைபார்த்த நண்பரின் திருமணத்திற்கு என அனைவரும் ஈரோட்டுக்கு கிளம்பினோம். ஏற்காடு எக்ஸ்பிரஸ் சென்று சேரும்வரை அவருக்கு புது ஊரைப்பார்க்கும் ஆர்வம் தாளவில்லை. எங்கேயோ கேள்விப்பட்ட ஈரோடுபோய் திருச்சிவரு ஜோக்கையெல்லாம் சொல்லிக்கொண்டு வந்தார். ரயில் நிலையத்தில் இறங்கி பஸ்ஸ்டாண்டு ஒட்டிய லாட்ஜில் அறையெடுத்து செட்டிலாகி மண்டபத்துக்கு போக ரெடியாகிக்கொண்டிருக்கும் பொழுதில் நண்பர் வியந்துபோய் சொன்னது. "யோவ்.. இந்த ஊர்லகூட ரோட்டுல சிக்னலெல்லாம் இருக்குய்யா.." அவரை மேலும் கீழும் நாங்கள் பார்த்த பார்வை இருக்கிறதே. என்னாத்தை சொல்ல?



நம் நண்பர்களுக்கே வருவோம். சுரேஷ்கண்ணன் சுப்ரமணியபுரம் பற்றிய கட்டுரையில் அந்தக்கால மதுரை டவுன்பஸ் பெயிண்ட் அடிக்காத அலுமினிய பாடியில் பளபளவென்று இருந்ததை ஒரு குறையாக எழுதியிருந்தார். சென்னைக்கு வெளியே ஏறக்குறைய எல்லா நகரங்களிலும் நகருக்குள் ஓடும் டவுன்பஸ்கள் அப்படித்தான் இருந்தன. கோவையில் இன்றும் அப்படித்தான் இருக்கிறது. அவரது தெரியாமை இயக்குனரின் குறையாக எழுதவைத்தது. மாதொருபாகன் ஓவர் முற்போக்கு உடம்புக்கு ஆகாது என்பது லக்கியின் கூற்று. இரு பக்கங்களில் உள்ள வரிகளில் சிலதுமட்டும் எடுத்துக்காட்டி தான் புத்தகம் முழுதாய் படிக்கவில்லை என்பதையும் சுட்டியபடி. அவராவது பத்திரிக்கையாளர். வாசகரின் எதிர்பார்ப்புக்கும் சந்தை தேவைக்கும் ஏற்ப கட்டுரைகள் உருவாக்குபவர். அன்றைய காலக்கட்ட தேவைக்கு ஏற்ப சார்புநிலையில் எழுத காரணமுண்டு என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் கறாரான கருத்துக்களை யாரைப்பற்றியும் கவலைப்படாமல் முன்வைக்கும் மாமல்லன் கூட தெரிந்தெடுத்த சில பக்கங்களை மட்டும் கொண்டு அதிர்ச்சிமதிப்பீடுக்காக இந்த நாவல் சாரமில்லாத தட்டையான செய்யப்பட்ட ஒன்று என்று முன்முடிவுவோடு அறிவித்தே விட்டது வருத்தமாக இருக்கிறது.



நமக்கு தெரிந்தவரையில் நம் பார்வைக்கு எட்டியவரையில் நம் புத்திக்கு தெளிந்தவரையில் நம் மனதுக்கு உணர்ந்தவரையில் என சில வரையரைகள் உண்டு. அதைக்கொண்டு அதன்மேலாக அனைத்தையும் கற்க பகுத்தறிய உணர முயலலாம்தான். சில வாசல்கள் திறக்க வாய்ப்புண்டு. ஆனால் நமக்கு தெரிந்தது மட்டுமே உண்மை நம் கண்களுக்கு தெரியும் மற்றதெல்லாம் வெற்று என வாதிடவும் நிரூபிக்கவும் முயலும் போதுதான் மற்றவர் பார்வையில் நாம் நம் மதிப்பினை இழக்கிறோம்.






பெருமாள்முருகன் மீது மிகப்பெரிய மரியாதையும் மதிப்பும் உண்டு. சில இணையக்கட்டுரைகள் மூலமாக தெரியவந்து பீக்கதைகள் புத்தகம் வழியாக அவரை வாசிக்க ஆரம்பித்தது. எல்லா யோனி மதன புணர்ச்சி கவிதை கதைகளைப்போல இவரும் ஒரு அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக பீக்கதைகள் என எழுதி பெயர்வாங்க பார்த்திருக்கார் எனவே ஆரம்பதில் அசூசையுடன் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் ஒவ்வொரு கதை முடிவிலும் அவர் சொல்லாமல் விட்டுச்சென்றது வெறும் சிலநிமிட அதிர்ச்சி அல்ல. அடிவயிற்றை கவ்வும் அவலம். முதல் கதையிலேயே கிராமத்தில் இருந்து நகரத்துக்கு வந்து வீட்டு ப்ளாட்டினுள்ளேயே பாம்பே கக்கூசு இருக்கும் வாழ்க்கையில் திங்கற செய்த சோறெல்லாம் அந்த கக்கூசு அகோரப்பசியில் வாய்பிளந்து விழுங்கிக்கொள்வதாய். இன்னொரு கதையில் கிராமத்தில் இருந்து வேலைக்கு நகர நகராட்சி கழிப்பிடத்தில் சேர்த்திவிடப்படும் சிறுவன் ஆரம்பத்தில் அரற்றி பின்பு கொஞ்சம் கொஞ்சமாய் அந்த நாற்றமும் அருவருப்பான வேலைக்கு பழகிக்கொள்ளும் காலத்திணிப்பு. சீக்கிரம் ஆவட்டுண்ணே என குரல்கொடுத்துக்கொண்டே கதவுகளை தட்டியபடிக்கு தண்ணீர் ஊற்றி காசு வசூலிக்கும் வாழப்பழகும் கிடைத்த வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும் நிதர்சனம். இதுபோல ஓடும் பஸ்சில் சிறுவன் பேண்டுவைத்ததால் தாய் படும் அவமானம், கண்தெரியாத வாயாடிக்கிழவியை பழிவாங்க புதிதாய் கட்டிய கழிவறையின் தரைமுழுதும் மண்டு பேண்டுவைக்கும் சிறுவர்கள் என பல கதைகள். மிகவும் பாதித்த கதை ஒன்று. கொஞ்சம் வசதியான அத்தைவீட்டுக்கு நெல்லுச்சோறு திம்பான் தன் மகன் என்கிற ஆசையில் கோடைவிடுமுறைக்கு அனுப்பிவிட்டு விருந்தும் மருந்தும் மூன்று நாளாகி ஜலதாரையெல்லாம் பீயாக கோரிவைத்துவிட்டான் என்கிற குற்றச்சாட்டில் திரும்ப அழைத்துவரப்படும் சிறுவன். மிகுந்த பாதிப்பை கொடுத்த கதை. இவை எதுவுமே அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எழுதப்பட்டவை அல்ல என்பது வாசித்து உணர்கையிலேயே பிடிபட்டுவிடும். இந்த கதைசொல்லும் பாங்கு கைவரப்பெற்ற எழுத்தாளருக்கு அதிர்ச்சிக்கு என தனியே எழுத முனைந்தால் கூட அவை கதையோட்டத்தில் அமுங்கிவிடும் வாய்ப்பே அதிகமாக இருக்கும்.




மாதொருபாகன் போனவருடம் படித்தது. பின்னட்டையையும் முகவுரையையும் படிக்கும்போதே புத்தகத்தின் சாரம் இதுதான் என தெரிந்து போயிற்று. ஏற்கனவே விடலைவயதில் இதுமாதிரி திருச்செங்கோட்டு திருவிழாவில கையப்பிடுச்சி இழுத்துக்கொண்டு போய் பிள்ளைகொடுப்பாங்கன்னு கேள்விப்பட்ட கதைகள் தான். ஆனால் இதை எப்படி சொல்லியிருப்பார் என்கிற படபடப்பு ஒட்டிக்கொண்டாலும் இந்த விசயத்தை மிகுந்த எச்சரிக்கையாகத்தான் ஆராய்ந்து எழுதியதாக அவர் முகவுரையில் சொல்லியிருந்தாலும் பொன்னாவின் காளியின் வாழ்க்கையை வாசிக்க வாசிக்க அதெல்லாம் அமுங்கிப்போகிறது. நாவல் முழுதும் கடைசி அத்தியாத்துக்கு முன்புவரைகூட செய்யப்பட்டதாக இல்லை. எப்படி மிக ஜாக்கிரதையாக இந்த விடயத்தை சொல்லப்போகிறோம் என்கிற எச்சரிக்கை உணர்வு அவ்வப்போது தென்பட்டாலும் அவைகூட துருத்தலாக இல்லை. குழந்தைபேறு இல்லாத ஒரு பெண்ணுக்கு கிடைக்கும் ஏச்சுகளும் பேச்சுகளும் சமூக மதிப்பிழத்தலையும் அவை கொடுக்கும் மன அழுத்தங்களையும் காளியின் காதலையும் களவியையும் பிரியங்களையும் தாண்டி இந்த இழப்பு கொடுக்கும் வலிகளை மிக நிச்சயமாக அதிர்ச்சிக்கு மட்டுமே எழுதியிருக்க மாட்டார் என்பதை வாசிக்கும் எவரும் மிக நிச்சயமாக உணார்ந்துகொள்ள முடியும். எழுதும் எதுவும் தவறாக போய்விடக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வு கூட அவரது பொறுப்பை கூட்டிக்காட்டுகிறதே ஒழிய செய்யப்பட்டதாக வாசிபனுபவத்தை இறக்கவில்லை. கடைசி அத்தியாயம் பிரளயம். வம்சம் தழைக்க பொன்னாவின் தேர்வும் அவை சுற்றிய உணர்வுக்கொந்தளிப்புகளும் மிக நேர்மையாக எழுதப்பட்ட ஒன்றாகவே நான் உணர்ந்தேன்.


ஒரு படைப்பின் வெற்றி தோல்விகளுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கும். ஆனால் ஒரு எளிய வாசகன் எந்த புள்ளியில் அதனுடன் அதன் ஓட்டத்துடன் இணைந்துகொள்கிறானோ அதைப்பொறுத்தே அவனுக்கு கிடைக்கும் அனுபவ தரிசனங்கள். நானும் ஒரு இணைய சராசரி தானே? நான் காளியாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பேன் என்கிற கேள்வி வாசிக்கையில் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. என்னதான் பெரியார் எழுத்துக்களை படிப்பவன் என்றாலும் கருப்பை சுதந்திரம் பெண்களுக்கு அவசியம் என்று படித்து உணர்ந்திருந்தாலும் கடைசி வரை பொன்னா செல்வாள் என்பதை மனம் ஏற்றுக்கொள்ளவே இல்லை. நானாக இருந்திருந்தால் இன்றைய காலத்துக்கு இருக்கும் வசதிக்கு விந்துதானம் பெற்று செயற்கைமுறை கருத்தரிப்பில் குறைந்தபட்சம் தாயாவது பாதி பெற்றோராக இருக்கும்வகையில் முயன்றிருக்கலாம் என என் முற்போக்கு மனதை சமாதானப்படுத்திக்கொண்டேன். தனக்கென நடக்கும் நிகழ்வுகளில் மட்டுமே தன் கொள்கைப்பிடிப்புகளும் நியாய அநியாங்களும் அதன்மேல் நாம் வைத்திருக்கும் உண்மையான பிடிப்புகளும் நமக்கே தெரியவரும். அதுவரை ஊராருக்கு சொல்வதுதானே? அடித்துவிடும் அவசரத்தில் சொல்லலில் இருக்கும் சுகத்தில் அடித்துவிட்டுக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறோம்.





மாதொருபாகன் படித்த இரண்டு நாட்களில் அடுத்து நான் வாசித்தது தமிழ்மகனின் ஆண்பால் பெண்பால் எனும் இன்னுமொரு அற்புத எழுத்துநடை கொண்ட நாவல். இதுதான் நான் வாசித்த தமிழ்மகனின் முதல் நாவல். முதல் பாதி நாவல் பெண்ணின் பார்வையிலும் அடுத்த பாதி ஆணின் பார்வையிலும். குழந்தைப்பேறு கொடுக்கமுடியாத ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு அழுத்தத்தில் மனநோயாளியாக மாறிபோகும் பெண்ணின் கதை. எம்ஜியாரின் பரம ரசிகையான அந்தப்பெண் குழந்தைப்பேறின்மையில் கிடைக்கும் அழுத்தத்தில் அடிகளில் உடலில் தோன்றிய வெண்படைகளில் எம்ஜியாராகவே தன்னை வரித்து அழித்துக்கொள்பவள். எம்ஜியாருகூட குழந்தைபாக்கியம் இல்லாம இப்படித்தானே கஷ்டப்பட்டிருப்பாரு என நினைத்து நினைத்து தன்னில் எம்ஜியாரு ஒரு மலடியாக ஆவியாகவே வந்து இறங்கிவிட்டதாக நம்பிக்கையில் வாழ்வை சிதைத்துக்கொள்ளும் பெண். முதல்பாதி முழுக்க அந்தப்பெண்ணின் பார்வையில் கொஞ்சம் கொஞ்சமாக கதை விரிய அந்த பெண்ணுக்கே குறை என்கிற ரீதியிலேயே போகும் கதை. இரண்டாம் பாதியில் அந்த ஆணின் பார்வையில் நடந்த எல்லா நிகழ்வுகளும் மறுபடி சொல்லப்பட குறையுள்ள ஆண் அதை மறைக்க நடத்தும் ஆணாதிக்க அரசியல் செய்கைகளையும் அவை கொடுக்கும் பாதிப்புகளையும் தமிழ்மகன் எழுதிச் செல்லச்செல்ல ஒரு ஆணாக சடுதியில் இந்த குயுக்திகளை எங்கே எப்படி நாசுக்காக நாகரீக போர்வையில் செய்துகொண்டு இருக்கிறோம் என்பது முகத்தில் அறைந்துகொண்டே இருந்தது. கடைசி அத்தியாயத்தில் மட்டுமே அந்த ஆண் மனநல நோயாளியாக்கப்பட்ட அந்த பெண் மீது அன்பும் பரிதாபமும் தோன்ற முடிவதாக கதை, அதுவும் அந்தப்பெண் ஒருவார்த்தை கூட கணவனின் ஆண்மையின்மை பற்றி பைத்தியமான பின்பும் கூட சொல்லவில்லை என்பதால் கிடைக்கும் குற்றவுணர்வு கொடுக்கும் அன்பு மற்றும் பிரியம். கதைப்போக்கும் சொல்லிய விதமும் பெண் ஆணாக ஒரே ஒருவர் மாற்றிமாற்றி சிந்தித்து இவ்வளவு தத்ரூபமாக எழுதியவகையில் தமிழ்மகனின் உணர்வு பூர்வமான படைப்பு.

இந்த இரண்டு நாவல்களும் ஒருவாரமாக மண்டையில் ஓடிக்கொண்டே இருந்தது. மனசுக்கு நேர்மையாய் எந்த படைப்பின் முடிவு சரியானது என யோசித்ததில் செய்நேர்த்தியிலும் கதை சொல்லும் லாவகத்திலும் தமிழ்மகன் முன்னின்றாலும் நகர வாழ்க்கையில் படித்த வேலையில் இருக்கும் பெண் தன்குறை இல்லையெனினும் குழந்தையின்மையை எதிர்கொள்ள இயலாமல் ஆணின் சூழ்ச்சியில் மிதிபட்டு மனநோயாளியாகிப்போன முடிவைவிட... எழுதுவது தவறாகிவிடக்கூடாது என்கிற பொறுப்புணர்ச்சி மேலாக படைப்பில் வெளிப்பட்டாலும் பொன்னாவின் சுயதேர்வு மற்றும் சுதந்திர முடிவு மனதுக்கு ஏற்புடையதாக இருந்தது. நிஜவாழ்வில் நான் ஆதரிப்பேனா என்பது இன்னமும் எனக்கு தெளிவில்லை தான். ஆனால் அந்த படைப்பு வெறும் அதிர்ச்சி மைலேஜுக்கு எழுதி பெயர்வாங்க செய்ததல்ல என உறுதியாக நம்புகிறேன்.


நான் ஒருவருடமாகவே மீண்டும் சமூகவலையில் இருக்கிறேன். பெருமாள்முருகனும் நம்மைப்போலவே தான் முகநூலையும் பாவித்துக்கொண்டு வருகிறார். அவர் நிலைத்தகவல்களில் ஒருமுறைகூட வரம்பு தாண்டியோ லைக்குக்கு ஆசைப்பட்டு எழுதியதாகவோ அவசரகதி கவனயீர்ப்புக்காக எதையும் சொல்லியதாக செய்தாக நினைவில்லை. ஒரே ஒரு புக்குபோட்டு லட்சக்கணக்கில் மேடைகட்டி சர்ரியலிச நியோநார்சலிய பின்நவீனத்துவ நாசமாய்ப்போன இசங்களெல்லாம் கொண்டு வழிமொழிந்து பேட்டிகண்டு இலக்கியவாதி பச்சைகுத்திய குபீர் இலக்கிய பேராண்மைகள் நிறைந்த அறிவார்ந்த சபை இது. இங்கு இத்தனை படைப்புகள் எழுதிய பெருமாள்முருகன் ஒருமுறைகூட அலட்டி தளும்பி பார்த்ததில்லை. அதனால்தான் ஓராளு சிக்கீட்டாரு சாத்துங்கடா என்பதைக்கூட ஆளு யாரு என்னன்னு தெரியாமல் அவசரகதியில் குரல்வலையில் கத்தியை சொருகிட்டு ஓடிக்கொண்டே இருக்கிறோம். அவசர அடி லைக்கு யுகத்தில் சில பக்கங்களை மட்டுமே படித்துவிட்டு மாட்டடி அடித்து ஓய்வதற்கு முன்பே அடுத்த புரட்சிக்கு தயாராகிறோம்.


இதில் எல்லாவற்றையும் விட ஆச்சரியம் ஆரெஸசஸ் ஆதரவாளர்கள் என அறியப்பட்ட என் நண்பர்களது எதிர்வினைதான். நாட்டில் நடக்கும் எல்லாப்பிரச்சனைகளிலும் காவிச்சிந்தனையையும் இடுப்பில் இருக்கும் வேட்டியை பிடுங்கிவிட்டு காக்கிநிஜாரை மாட்டிவிட துடிக்கும் அவசரமும் புரிந்துகொள்ள முடிந்ததே. ஆனால் நீங்கள் வடக்கில் இருந்து டவுசர் பாக்கெட்டில் நிறைத்து கொண்டுவந்து இங்கு இறக்குமதி செய்ய துடிக்கும் இந்துத்துவதுக்கும் ஏற்கனவே இங்கிருக்கும் இந்துத்துவதுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. ஊர்த்திருவிழா என்பது இந்துப்பண்டிகையாக இருந்தாலும் இந்துக்களுக்கு மட்டுமேயானதல்ல. நடந்த நடக்கும் நிகழ்வுகளுக்கு நம் மாநிலத்தில் நம் மாவட்டத்தில் நம் ஊரில் நம் கிராமத்தில் நம் பழக்கவழக்கங்களில் தேடினாலே பல விடைகள் கிடைக்கக்கூடும். அந்த தேடலில் வெளிப்படும் பழமைவாதங்களையும் சாதி அழுத்தங்களையும் அடிமைத்தனங்களையும் நமக்குள் நாமே அலசி நாகரீகமடைய இயலும். நமக்கென ஒரு வாழ்க்கை முறையுண்டு. மொழியுண்டு. இயல்புண்டு. பரந்த மனப்பான்மை உண்டு. எதிர்க்கருத்துக்களுக்கு இடம்கொடுக்கும் தன்மையுண்டு. இதையெல்லாம் மதிக்காமல் அனைத்தையும் ஒற்றைப்படையிலாக்க அனைத்துக்கும் ஒரே இந்துத்துவ முத்தரை குத்த ஆயத்தம் செய்யும் இவர்கள் தம் குழுக்கள் பாதிக்கும் வரை தம் தனித்துவ வாழ்வுமுறை அழிக்கப்படும் வரை நாட்டுநலனுக்கெனவே இதெல்லாம் என நம்பிக்கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் நாட்டில் என்ன நடந்தாலும் அதில் தன் லத்தியை பதிப்பேன் என்பது எங்குபோய் முடியும்?



மதத்தின் பெயரால் கட்டமைக்கப்பட்ட எந்த நிறுவனமயமாக்கலும் பன்முகத்தன்மையை அழித்து ஒற்றைத்தன்மையை திணிக்கும் எனபதே வரலாறு. இன்றைக்கு நம் பொது எதிரி பயங்கரவாதம் எல்லோரும் மதத்தின் பெயரால் ஒன்றிணைந்து நாட்டைக்காப்போம் என்பது நல்லவிதமாகவே தோன்றவைக்கலாம். ஆனால் அலங்கரித்து கொம்புசீவி போட்டிக்கு ஆயத்தப்படுத்தப்பட்ட காளையும் பொது எதிரிக்கென உருவாக்கப்பட்டு வேலை நோக்கம் இல்லாமல் சும்மா இருக்கும் படையும் ஒன்றுதான். பயிற்சியின் தினவில் ஒருநாள் சாதாரண மக்களை மிகச்சாதாரண காரணங்களுக்காக போட்டுப்பார்க்கத்தான் போகிறது. நிலமை நம் கையை மீறி போகையில் நம்மால் அடிபட்டவன் செய்தது போலவே நாமும் அரற்றமட்டுமே முடியும்.



அதுவரை மற்றோரின் புத்தக எரிப்புகளையும் கருத்துக்களை அவதூறுகளால் அடித்து துவைப்பதையும் இணையவாழ்வு பரபரப்பு சுகம் என்கிறவகையில் கொண்டாடிக்கொள்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு