



நான் முதன்முதலில் அன்னவைக் கண்ட இடம் உண்மையில் அவளை முதன்முதலில் பார்த்த இடமல்ல! அவளை இதற்கு முன்பு ஒருமுறை நண்பர்களுக்காக கார் திருடிக் கொண்டு வந்த வழியில் கண்டிருக்கிறேன். பயத்திலும் பதட்டத்திலும் கோவத்தின் விளிம்பிலும் இருந்த கணம். சரியாக முகம் மனதில் பதியவில்லை எனினும் நினைவில் நிழல் என விழுந்துபோன ஒரு உருவமாய் அவள். நிலவொளி சிதறும் கலங்கிய நீரின்மீது அகல்விளக்கு மிதக்க விடும் பெண்ணின் பிம்பம் பிரதிபளித்தது போல கண்கள் விரும்பிக் கண்டும் காணாததுமாய். ஆனால் அன்றைக்கு அவளுக்கு நானொரு பொறுப்பற்ற சல்லிப்பயல் என மனதில் விழுந்திருக்க வேண்டும்.

அன்னவுடனான அறிமுகமும் நட்பும் எந்த ஊரில் எந்த கிறித்துவ நண்பனை பார்க்கச் சென்று அடிகள் வாங்க இருந்தோமோ அந்த நண்பனிம் மூலமே ஏற்பட்டது. அவனது வீடு அன்னவின் எதிர்வீடாய் அமைந்தது இறைவன் எங்களுக்கு ஏற்கனவே இப்படித்தான் என எழுதி வைத்துவிட்டதனால் இருந்தாலும் அவனது அறையின் சன்னல் எப்படி எனது அகத்தின் வாசலாய் மாறி அன்னவின் வரவினை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தது என்பதுதான் ஆச்சரியமாய் மாறிற்று. அந்த சன்னலும் நானும் அன்னவின் ஒரு நொடி தரிசனத்திற்காக காத்திருந்த பொழுதுகள் சொல்லில் சொல்லிவிட முடியாத மகிழ்ச்சியும் ஏக்கமும் நிரம்பியவை. ஆனால் என்ன? ஏக்கங்கள் வாழ்வினை வளப்படுத்தாவிடினும் நினைவிலாவது நினைத்ததை உணரவைக்க இயலுமெனில் இருந்துவிட்டு போகட்டுமே? தூரத்து நெருப்பின் ஒளியில் குளிர்காயும் வறியவனைப்போல.

அம்மா இல்லாத ஆண்கள் உண்மையில் அம்மாக்களை தேடுவதில்லை. அம்மாவின் அரவணைப்பும் கதகதப்பும் எங்கேனும் கிட்டிவிடாதா என்ற தேடலே எல்லாப் பெண்களின் முகங்களையும் ஆழப்பார்க்கச் செய்கிறது. பார்க்கும் முகங்களில் ஒரு சிலவே நட்பாகவோ கூடப்பிறந்தவளாகவோ உணரச்சொல்கிறது. ஒரு நிமிடம் மட்டுமே கண்டதாயினும் ஒரே ஒரு முகமே பட்டென மனதில் விழுந்து இவள் எனக்கானவள் என்ற இணைப்புக்கு பதியம் போடுகிறது. அன்னவின் விலா எழும்புகள் ஒரு புதிர்தேசம்! சட்டென பார்க்கையில் அவைகள் கழுத்தினை தாங்கிப்பிடிக்கும் பீடமாகத்தான் தெரியும். ஆனால் உண்மையில் அவை மெலிந்து கீழ்நோக்கிக் குவிந்த அவளது சிறுமுலைகளை ஏற்கும் கேடய விளிம்பின் முனைகளெனவோ அல்லது எடைகளற்ற அச்சிறு பஞ்சுப்பொதிகள் நிரவிய மேடிட்ட பகுதிகள் சிறுநீரலைகள் தளும்பும் ஏரிக்கரையினையோ ஒத்திருக்கும். இருந்தும் இல்லாமலும் புடவையின் முந்தானைக்கடியில் விளையாட்டுக் காட்டும் அவையிரண்டும் புதிரின் விடையறிய ஏங்கித் திணறும் என்மேல் என்றைக்கும் இரக்கம் காட்டியதில்லை.

அன்னவிடம் பேசுவதற்கும் பழகுவதற்கும் சில வாய்ப்புகள் கிடைத்தது. அதாவது ஏற்படுத்திக்கொண்டேன். அவளது செல்போனுக்கு சில குறுஞ்செய்திகளும் அனுப்பிவிட்டு பதில் வந்துவிடாதா என தேவுடு காத்த காலங்கள் அவை. அவள் வேலை செய்யும் புடவைக் கடைக்கே சென்று அவளை பார்த்துக்கொண்டிருப்பதும் அவளுடன் பேசவிழைவதும் அவளுக்கே பிடிக்கவில்லைதான். தொல்லை தாங்காமல் ஒருமுறை அழைத்து உனக்கும் எனக்கும் ஆகாது நம் மதங்கள் வேறு என பல காரணங்களை அடுக்கினாள் ஒருநாள். வரட்டுக் காய்ச்சலின் பிடியில் இருக்கும் ஒருவனுக்கு சூடான டீயும் தொட்டுத்திங்க ஒரு பன்னுமே உடனடித் தேவை. அவளோ நாம் ஏன் பிரியாணி இப்பொழுது சாப்பிட இயலாது என விளக்கிக்கொண்டிருந்தது எனக்கு அசூசையாகவும் கோவத்தையும் வரவழைத்தது. மூளையால் அல்ல, மனதால் ஒன்றை நம்ப ஆரம்பித்துவிட்டால் அதற்கு தர்க்கரீதியிலான பதில்களோ தகவல்களோ தேவையே இல்லை. நம்பிக்கை ஒன்றே எதுவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிட வழி நடத்துக்கிறது. அது என் மீது அன்னவின் விருப்பம் கனியும் காலத்திற்கு என்னை கைப்பிடித்து கூட்டிச் சென்றது.



ஆண்களுக்கு வீட்டில் இருக்கும் பெண் என்பவள் ஒரு அடையாளச்சின்னம். அம்மா என்றால் அன்பாய் மட்டுமே இருக்கவேண்டும். அக்கா என்றால் அவள் பாசத்தை மட்டுமே காட்டவேண்டும். அவர்களுக்கு வேறு உணர்வுகளோ உறவுகளோ வீட்டு ஆண்கள் பார்த்து வைத்ததை மீறி நிகழ்ந்து விடக்கூடாது. இந்த பிம்பத்தில் இருந்து சிறிது விலகினாலும் ஆண்களுக்கு அவர்கள் உரிமையின் மேல் அடி விழுகிறது. எனக்கு பத்து பெண்நண்பிகள் என பொதுவெளியில் பீற்றிக்கொள்ளும் ஒருவனால் அவன் தங்கையோ அக்காவோ எனக்கு ஒரு ஆண்நண்பன் எனச் சொல்வதை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவள் வீட்டுக்கு சம்பாதித்துப் போடுபவளாக இருந்தாலும்கூட.
அன்னவுக்கும் வீட்டுச்சிறை கிடைத்தது. அவன் தம்பிக்கு நான் வேறுமதம் என்பதைவிட அவனை அடித்ததுதான் ஆற்றவியலாத வெறி. அவள் அப்பாவுக்கு பெண் வேலைக்குப்போய் குடும்பத்தை காப்பாற்றுபவள் என்பதைவிட சுயபுத்தியாய் காதலித்துவிட்டாள் என்பது பெருத்த அவமானம். எவ்வளவு சீக்கிரத்தில் அவளுக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து கட்டிவைத்து குடும்பமானத்தை காக்கிறோமோ அவ்வளவிற்கு ஊரார் வாயில் விழவேண்டாம் என்கிற நிம்மதி. அன்னவை விட்டு பிரியவேண்டும் என்பது என் விருப்பமோ அவளது விருப்பமோ அல்ல. ஆனால் ஒருவரை ஒருவர் வருத்திக்கொண்டு வரவைப்பதா காதல்? அவளுக்கு வேரொரு ஆளுடன் நிச்சயம் ஆனது. நான் என் அப்பாவுடம் அவரது ஊருக்கு மீன்பிடி தொழிலுக்காக அழைத்து வரப்பட்டேன். இரண்டு குடும்பமும் நினைத்திருக்க வேண்டும் இந்த மாற்றங்கள் நிச்சயமாய் எங்கள் காயங்களை ஆற்றிவிடவேண்டுமென.
வாழ்க்கை எல்லோரையும் எப்பொழுதும் கைவிட்டுவிடுவதில்லை. அது காட்டும் நல்வழியெல்லாம் நண்பன் என்ற உருவிலேயே வருகிறது. அந்த கிருத்துவ நண்பன் என் அப்பாவின் ஊருக்கே வந்து எனைக்கண்டான். அன்னவின் திருமணத் தேதியை சொன்னான். கடைசிவரையில் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே வைத்து மருகி கருகிப்போன அவனது காதல் கதையை கேட்டபொழுது எனக்கு அன்னவுடன் ஏன் சேர்ந்து வாழ்ந்துவிட முடியாது எனத்தோன்றிற்று. மனதுக்குள் மருகி தினந்தினம் சாவதைவிட ஒருநாளாவது அவளுடன் வாழ்ந்துவிடுவது உத்தமம் எனப்பட்டது. இப்பொழுதும் எனக்குள் இருந்த மிருகம் செத்துத்தான் கிடந்தது. ஆனால் நம்மை நம்பி இருக்கும் ஒரு உயிரை கைவிடல் ஆண்மையில்லை என்பது தெளிந்தது. நேரே கிளம்பி அன்னவை அவளது சர்ச்சிலேயே கண்டு உண்மையான ஆண்மகனாய் அவள் கைப்பிடித்து நடத்தி அழைத்து வந்த வேளையில் கட்டமைக்கப்பட்ட ஆண்மை எனப்படும் பொய்மைகள் எதனாலும் எங்களை தடுத்து நிறுத்திவிட இயலவில்லை. அன்னவுக்கு என் செயல் பெருத்த ஆச்சரியமாகவும் இன்ப அதிர்ச்சியாகவும் இருந்தாலும் இம்முறை அவள் என்னுடன் வந்துவிட துளியளவும் தயங்கவில்லை. இம்முறை அன்னவை அழைத்துக்கொண்டு வெகுதூரம் வந்துவிட்டிருந்தேன். நண்பனது வீட்டில் தங்கி டிரைவராக ஒரு வேலையைத்தேடிக்கொண்டு அன்னவுடனான திருமணத்திற்கும் தயாரானேன். அவரவர் மதம் அவரவருக்கு என்றபடியே.

கூடா நட்பு எங்கே முடியும்? நல்லதும் கெட்டதும் அவரவர் வாழ்வின் முறைமைகளும் சமூகம் அவரவரை வைத்திருக்கும் இடங்களைப் பொறுத்துமே மதிப்பிடப்படுகிறது என்றாலும் எளியது வழுக்கி விழும் இடங்களில் வலியது தயவுகள் கிஞ்சித்தும் காட்டாது புரட்டியெடுத்து விடுகிறது. கார்திருடும் கும்பலில் இருந்த நண்பர்களில் ஒருவன் பெரியகுற்றங்களாக செய்யபோய் ஒரு நிகழ்வில் கழுத்தறுபட்டு கொல்லப்பட்டான். சந்தேகத்தின் பேரில் போலிஸ் என்னைப்பிடித்து சிறைச்சாலைக்கு அனுப்பியது. நிர்க்கதியாய் நின்ன அன்ன அவளது குடும்பத்தாரால் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். வலுக்கட்டாயமாக அவளுக்கு மீண்டும் திருமண ஏற்பாடுகள் நடந்தன. நான் குற்றவாளியாய் சித்தரிக்கப்பட்ட படங்கள் கொண்ட செய்தித்தாள் அவளுக்கு காட்டப்பட்டது. அவள் எங்கிருந்தாலும் எந்தநிலையிருந்தாலும் என்றைக்காவது வந்தழைத்துச்செல்வேன் என்ற நம்பிக்கை அவளை வாழத்தூண்டியிருக்க வேண்டும். ஆனால் நான் மீண்டும் அடிதடி குற்றச்செயல்கள்தான் ஆண்மை என்ற நிலையில் மாட்டியிருக்கும் இந்த சூழல் அவளை நம்பிக்கையிழக்க செய்திருக்க வேண்டும். என்மீதான நம்பிக்கை சிதறடிக்கப்பட்டதைவிட அவள் அவள் மீதான நம்பிக்கையை இழந்திருக்கவேண்டும். எதை நம்பி என்னை விரும்பினாளோ எப்படி நான் இருக்கக்கூடாது என்பதால் என்னுடன் வரத் துணிந்தாலோ அந்த நம்பிக்கை சிதறடிக்கப்பட்ட அந்த இரவில் அவள் தற்கொலை செய்துகொண்டாள்.
போலீஸின் பிடியில் இருந்து தப்பி ஓடி அவள் வீட்டை அடைந்த கணத்தில் தான் அவளைக் கண்டேன். சடலமாய் வீட்டின்முன் கிடத்தப்பட்டிருந்தாள். இப்பொழுது அந்த வீட்டில் என்னை யாரும் தடுக்கவோ அடிக்கவோ இல்லை. அவளை கட்டியணத்து அழுதேன். அதே ஒல்லியான விரைத்த உடல். கூர்ந்த நாசி, சதைப்பற்றற்ற கன்னங்கள். சிவப்பு பருக்கள். புதிருக்கு விடைதெரிந்த தளும்பாத மார்புகள். கலையாத உடை. பச்சை நரம்புகள் ஓடும் நீளமான விரல்கள். மூடிக்கிடக்கும் பெரிய கண்கள். அசைவற்ற உடல். உதடுகள் இணையும் ரசவாதக்குழியில் இன்றைக்கு எனக்கான எந்த சேதியும் இல்லை. காதோரம் வழியும் அந்த ஒரு கற்றை முடிகள் மட்டும் அவள் முகத்தில் எப்பொழுதும் போல சுதந்திரமாக காற்றில் உருண்டு அலைந்து கொண்டிருந்தது.
வாழ்வில் ஒருமுறை உணரப்பட்ட உன்னதங்கள் எதுவும் நினைவில் இருந்து அழிந்து விடுவதில்லை. அவைகள் நம்முள் ஒன்றாக கலந்துபோய் விடுகின்றன. அந்த உன்னதங்கள் நம் வாழ்வு செல்லும் பாதையை சீரமைக்கின்றன. பிடிவழுவாது மிச்சத்தினை நடந்து கடக்க உதவுகின்றன. அன்ன இப்பொழுது என்னுடன் இல்லைதான். ஆனால் அவள் காதல் எனும் உன்னதம் என்னை இன்னமும் வழிநடத்திக் கொண்டுதான் இருந்தது. அர்த்தமுள்ளதோ இல்லையோ ஒரு சிறு நம்பிக்கை நம்வாழ்க்கையை நாம் பிடித்தபடி வாழவைக்கிறது. அது எவ்வளவு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும். ஆனால் அது நம்மளவில் அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருப்பதால் அதன் பலன் அளப்பறியது. ஆற்றில் தண்ணீருக்கு அடியில் முங்கி கண் திறந்து பார்த்தால் மனசுக்கு பிடித்தவர்கள் நமக்காக தெரிவார்கள் என்பது சிறுகுழந்தையின் விளையாட்டுதான். ஆனால் நான் அதனை மனப்பூர்வமாக நம்பினேன். எப்பொழுதெல்லாம் அன்னவை காண விரும்பினேனோ அப்பொழுதெல்லாம் ஒரு முங்கு நீச்சலில் அவளைக்கண்டேன். எனக்கு இப்பொழுது அன்ன என்னைவிட்டு எங்கும் போய்விட இயலாதென்பதில் ஏக மகிழ்ச்சி.

இப்பொழுது அன்ன உடலாக என்னுடனில்லை. அவள் இல்லாமல் வாழ பழகிக் கொண்டிருக்கிறேன். அன்னவை போல என்னால் மனதில் இருப்பதை கண்களில் சொல்லாமல் மறைத்து வாழ தெரியவில்லை. என் மனதில் திணிக்கப்பட்ட சகமனிதர்கள் பற்றிய சந்தேகங்களும் அச்சங்களும் பொறாமைகளும் கொடுத்த குழம்பமும் கலங்கமும் நிறைந்து அபோதம் ஏறிப்போயிருக்கும் கண்களை மறைக்க கருப்புக்கண்ணாடி அணிந்து கொள்கிறேன். உள்ளிருக்கும் மிருகம் இப்பொழுதும் செத்துத்தான் கிடக்கிறது. அன்னவை பார்க்க வேண்டுமெனில் இன்னமும் ஒரு முங்கு நீச்சல் மட்டுமே எனக்கு போதுமானதாக இருக்கிறது.
சில நம்பிக்கைகள் எப்பொழுதும் பிறருக்கு சிறுபிள்ளைத்தனமானவைகள் தான். ஆனால் அவைகளே நம்பியவனின் வாழ்க்கையை உன்னதங்களுடன் இணைக்கின்றன. வழி நடத்துகின்றன. கைப்பற்றி அழைத்துச்செல்கின்றன.
நான் நடந்துகொண்டிருக்கிறேன்.
annayum rasoolum - 2013
ட்விட்டர்ல புழங்கி.. ஸ்க்ரோல் இழுத்து மெதுவா படிக்கவே வரமாட்டேங்கிது இப்பெல்லாம்..
பதிலளிநீக்குஅண்ணன் தம்பி ஒரே ரூம் சிக்கல் வரைக்கும் படிச்சேன்.. அதுக்கு மேலயும் நல்லாத்தான் எழுதியிருப்பீஙன்னு, குறிச்சு வச்சுட்டு போறேன்.. அப்புறம் விலாவரியா படிச்சுகிடுறேன். ;)
படமும் நமக்கு புடிச்சது தான்.
ரசூலைப்பற்றி சிலாகித்துச் சொல்ல ... இந்தப் பத்தி அப்படி பிடிச்சிப் போனது. அப்படியே படத்தைப் பார்த்தால் வரும் உணர்வுகள் பொங்கி வழிந்தன.
பதிலளிநீக்குஉங்களை ‘விரட்டி’ எழுத வைத்த படத்திற்கு என் நன்றி.
வித்தியாசமான நடையில் ஒரு திறனாய்வு ... இல்லை .. இது ஒரு திறனாய்வில்லை. படம் உங்களை எழுத வைத்துள்ளது.
"வாழ்க்கை என்ன குளித்தலை வெண்ணையா?" ஊத்துக்குளி வெண்ணெய் கேள்விப்பட்டிருக்கிறேன் அது என்ன குளித்தலை யில் ஸ்பெஷல்?
பதிலளிநீக்கு"அழகாய் இருப்பதனால் மட்டும் ஒரு பெண் மனதிற்கு பிடித்துப்போவதில்லை. மனதிற்கு பிடித்துப்போவதால் தான் ஒருத்தி அழகாகிறாள்". மிக அருமையான வாசகம்
ஆஹா...
பதிலளிநீக்குஅருமையான பதிவுங்க தல”
உங்க “புல்லட்” போட்டோவுக்கு அப்புறம் இன்னைகுத்தான் இந்தப்பக்கம் வர வாய்ச்சது.
வாங்க ராசா...
பதிலளிநீக்குஎன்னைக்கின்னாலும் படிங்க.. ஒருநாள்ல முடியாது இது :)
தருமி சார்,
ஆமாங்க... நேர்க்கோட்டில் சொல்லப்பட்ட சாதாரண காதல் கதைதான். ஆனால் சொன்னவிதத்திலும் தரத்திலும் உணர்வுக்குவியல் :)
டைரக்டரான காமெராமேன் யாரும் சோபித்ததாக என் அறிவுக்கு தெரிந்து இல்லை. ஆனால் காமெராமேனான ராஜீவ்ரவிக்கு இயக்குனராக இதுதான் முதல் படம்! அட்டகாசம். படத்தை பத்தி பாராட்டிசொல்ல வார்த்தைகள் கிடைக்காததால் உணர்ந்ததை அப்படியே கொட்டிட்டேன்! :)
வையாபதி,
அது ஊத்துக்குளி தாங்க.. அன்னவை பார்க்கப்போகிற பரவசத்தில் உளரிட்டேன். திருத்திவிடறேன். நன்றி :)
கும்க்கி,
வாங்க.. ஒன்னும் பழுதில்லை.
நானே அதுகப்பறம் இப்பதான் இங்க வாரேன்! ஹிஹி :)
படம் பார்க்கவே தேவையில்லை..நல்லா இருக்கு..
பதிலளிநீக்குபடத்தை பார்த்து ரசித்து அனுபவித்ததை விட உங்களின் இந்த நீண்ட ஆழமான பதிவு மிகவும் நெகிழவும் ரசிக்கவும் வைத்தது. மீண்டும் இன்றோ அல்லது நாளையோ பார்க்க போகிறேன்.
பதிலளிநீக்குஅருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.
செம..செம
பதிலளிநீக்குஅப்படியே இழுத்துக்கிட்டு போயிடுச்சுய்யா
இதுக்குத்தானே உம்ம வாசிச்சு தொலைய வேண்டியிருக்கு.
பம்மாத்து இல்லாத இப்படி இயல்பான வரிகளில் ஒரு படத்தைப் பற்றிய சிலாகிப்புகள் கேட்டு ”காலம் கொறயாயி மோனே!” :-)