முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

க.க:2 - மக்கா! நீ மனசளவிலும் தயாரா?


ம்! முன்னுரைன்னு அலப்பரை எல்லாம் ரொம்ப வெயிட்டா விட்டாச்சு! சரி ஆரம்பிக்கலாம்னு நெனைச்சா கண்ணுக ரெண்டும் மயமயங்குது! அதுக்காக விட்டுட முடியுமா என்ன? அதனால மொதல்ல கல்யாணம்னா என்னங்கறதுல இருந்தே ஆரம்பிக்கலாம்! இந்த கல்யாணம்கறது எப்படி ஆரம்பிச்சிருக்கும்? ஆதிகால மனுசன் அவனாகவோ இல்லை ஆப்பிளை தின்றோ இனக்கவர்ச்சி வந்து இனப்பெருக்கம் செய்ய ஆரம்பிச்ச காலத்துல கல்யாணம்கற ஒன்னை நெனைச்சுப் பார்த்திருப்பானா?! இல்லை அதனால இப்படி வாழ்க்கைல மூனுல ரெண்டு பங்கு ஒரு மண்டைக் கொடைச்சல்ல ஓடப்போகுதுன்னு தெரிஞ்சிருந்தா அந்த ஆப்பிளைத்தான் கடிச்சிருப்பானா? அது கொரங்கா இருந்தப்பவோ இல்லை மனுசனா இருந்தப்பவோ, எப்ப கூடி வாழும் இயல்புங்கறதை கண்டுபிடிச்சானோ அப்ப வந்திருக்கலாம் இதுக்கு அச்சாணி! எப்ப ஒரு பொருளை தன்னுடையது என உணரும் அறிவை பெற்றானோ அப்போது போடப்பட்டிருக்கலாம் இதற்கான விதை! ஒரே இனம் அப்படிங்கற உணர்வு எப்போது வந்திருக்கும்? உணவுக்கும் உறைவிடத்துக்குமான போராட்டங்களில் வலுசேர்க்க "நீயும் நானும் ஒன்னு! அதனால ஒன்னா சேர்ந்து எதிரிகளை எதிர்ப்போம் வா!" அப்படிங்கறதுல இந்த சூட்சமம் அடங்கியிருக்கலாம்! "Survival of the fittest" என்பதுதான் அடிப்படை விதியாக இருந்திருக்கக் கூடிய காலத்தில் மற்ற உயிரினங்களை எதிர்த்துவாழவும் வலுவேற்றிக்கொள்ளவும் வேண்டிய தேவையில்தான் கூடிவாழ கண்டறிந்திருக்க வேண்டும்!

கூடி வாழ்ந்தா மட்டும் எல்லோருடைய மனசும் ஒன்னாயிருமா என்ன? ஒரு குழுவுக்கான பொதுவான போராட்டங்களும் அதற்கான தீர்வுகளும் தீர்மானிக்கப்பட்டவுடன் குழுவுக்குள் தனிமனிதனுக்கான போராட்டங்கள் ஆரம்பித்திருக்கும்! தனியாளுக்கும் அதேதான்! வலுவுள்ளது தப்பிப் பிழைக்கும்! இந்த கூட்டத்துக்குள் வரும் குழப்பங்களை தீர்ப்பதற்காகத்தான் சில பொதுவான கட்டுப்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்! "இங்க பாரப்பா! இது எனது! தொடாதே! மீறி தொட்டால் ஒரே கடி! அதேமாதிரி நானும் உன்னுடையதை தொடமாட்டேன்! சரியா" இதுமாதிரி! அது அடிச்சு வீழ்த்துன மானோட தொடைக்கறியா இருந்தாலும் சரி! மழைக்கு ஒதுங்கற குகையா இருந்தாலும் சரி! இனப்பெருக்கத்துக்கான பெண்ணாக இருந்தாலும் சரி! அன்றிலிருந்து இன்றுவரை மனுசனுக்கு வலு புத்திதான்! தனிமனித நியாயங்கள், ஒரு சமூகத்துக்கான பொதுவான சமுதாயக் கட்டுப்பாடுகள் எல்லாம் இப்படித்தான் கண்டுபுடிச்சிருப்பாங்க! சரி விடுங்க! அது ஆணோ பெண்ணோ கல்யாணங்கறது ஒருத்தர்மீது மற்றவர் கொண்டுள்ள "இது எனது" அப்படிங்கற உரிமையாத்தான் அன்னைக்கும் இன்னைக்கும் இருக்கு! பெண்ணைவிட ஆண் என்பவன் உடலளவில் பலம் அதிகமானவனாக இருந்ததால் இந்த உரிமைகளை அவன் ஒரு Privilege ஆக எடுத்துக்கொண்டான். குழந்தைக்குட்டிகளோடு சேர்த்து பெண்ணையும் எதிரிகளிடம் இருந்தும் தன் இனத்தின் மற்ற ஆண்களிடமிருந்துமே பாதுகாப்பதால் இந்த உரிமையை பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பு வேலியுமாக அமைத்தான்! இயற்கையின் விதிப்படி ஆணும் பெண்ணும் சமம்! உடல் வலுவில் ஆண்களுடன் சரிசமமாக முடியாதவள் அந்த பலத்தினை மூளையில் ஏற்றிக்கொண்டிருக்க வேண்டும்! அதனாலதான் இன்னைக்கும் நமக்கு டாப்புல அவங்களை விட கொஞ்சம் அதிகமா காலியிடம் இருக்கு!

என்னத்துக்கு இப்படி டார்வினோட ஒன்னுவிட்ட சித்தப்பா பையன் மாதிரி பெனாத்திக்கிட்டு இருக்கேன்னு கேக்கறீங்களா! விசயம் இருக்குங்க! இதெல்லாம் தெரிஞ்சாதான் நாம என்னத்துக்கு கல்யாணம் கட்டிக்கனுங்கறதுக்கான அர்த்தம் புரியும்! மனுசனுக்கு அறிவு வளர வளர ஒரு சமூகமாக நாம் உரிமைகளுக்காக வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் போகப்போக உணர்வுகளாக மாறிவிட்டன! "இது என் நாட்டு எல்லை" இதைத்தாண்டி வரக்கூடாது" என்பது போன்ற உரிமைகள் "இந்தியா என் நாடு! இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்!" என்பது போன்ற உணர்வுகளாக மாறிவிட்டன! இது எல்லாமே நம் பழைய கால "வலுவுள்ளது பிழைக்கும்"கற கோஷத்தோட நாகரீகம் என்ற முலாம் பூசப்பட்ட புது வெர்சன் தான்! திருமணமும் இரு உணர்வுகள் கொண்ட இதயங்கள் இணையும் செயல் என்ற கற்பிதங்கள் இருந்தாலும் ஆழமா தோண்டிப்பார்த்தா இந்த "எனக்கு சொந்தமான பொருள்" என்ற உண்மை பல்லை இளிச்சிக்கிட்டு இருக்கும்! ஆகவே மக்களே! கல்யாணங்கறது செஞ்சுக்கற பையனுக்கும் பொண்னுக்கும் வேணா புதுசா இருக்கலாம்! இந்த சமூகத்துக்கு இது ஒரு அதரப் பழசான சமாச்சாரம்! நாம் ஒரு சமுதாயப்பிராணி என்ற எண்ணம் உள்ளவரைக்கும் கல்யாணம்னா அது ஒரு சமூகத்தில் கூடிவாழ சமூகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளையெல்லாம் ஏற்றுக்கொண்டு இனவிருத்தி செய்ய கொடுக்கப்படும் "இது எனது" என்கிற உரிமை! அவ்வளவே! அடடா! இருங்கப்பு! இதுக்கே எழுந்திரிச்சு ஓடுனா எப்படி? சொல்ல வந்த மேட்டரு இந்த உலகத்துல கல்யாணம் கட்டிக்கறது என்பது நீ ஒன்னியும் புதுசா செய்யப்போற அரியவகை செயலோ இல்லை நீதான் இந்த உலகத்துல மொதமொதல்ல செய்யப்போற சாதனையோ இல்லை... எல்லாரையும் போல நீயும்... அதனால இதை ஒரு பெரீரீரீரீய மேட்டரா நெனைச்சி கொழம்பிக்கற அளவுக்கு ஒன்னும் இல்லைங்கறதுதான்!

இன்னொன்னையும் நாம இங்க கவனிக்கனும்! ஒவ்வொன்னையும் அடிவரை தோண்டி அதற்குண்டான ஆதாரகாரணங்களை கண்டறிவது பகுத்தறிவு! இது ஒரு வறட்சியான அறிவு வளர்ச்சியை மட்டுமே கொடுக்கும்! ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது என்பதுபோல! இப்படியெல்லாம் ஆராய்ஞ்சுக்கிட்டே இருந்தா பெரிய விஞ்ஞானியாகவோ இல்லை புரட்சி செய்யற தலைவனாகவோ ஆகமுடியும்! ஆனா என்னைக்கும் நல்ல குடும்பியாக ஆக முடியாது! பட்டறிவுன்னு ஒன்னு இருக்கு! காலாகாலமா மனித இனத்தில் ஆகிவரும் மாற்றங்களை மனசுல வைச்சு இந்தமாதிரி வாழனும்னா இப்படியெல்லாம் இருக்கனும்கற அறிவு! முன்னது வெறும் வறண்ட உண்மைகள்! பின்னது மனித இனம் தவிர்க்க இயலாத உணர்வுகள்! பின்னதை வாழ்க்கையின் அடிப்படையாகவும் முன்னதை சாப்பாட்டுக்கு தொட்டுக்கற ஊறுகாய் போலவும் வைச்சுக்கிட்டா வாழ்க்கை எந்த பிரச்சனையுமில்லாம ஓடிரும்! கொடிய மாத்திப் புடிச்சிங்கன்னா ஒன்னு உலகம் போற்றுகிற பெரிய ஆளாகலாம்! இல்லைன்னா கிறுக்கனாகலாம்! எனக்கெல்லாம் இந்த ஆசையில்லாததால உணர்வுகளின் அடிப்படையிலான பட்டறிவுக்குதான் முதலிடம்!


அந்தக்காலத்துல 5 வயசுலையெல்லாம் கல்யாணம் செஞ்சு வைச்சுருவாங்களாமே! என்ன அநியாயம் இது? இந்த வயசுலயயே நமக்கு ஒன்னும் புரியலையே! அந்த வயசுல என்னத்த தெரியும்? இதுதான் அநியாயம்னா இப்ப நடக்கறது அதைவிட இருக்கு! பயகளுக்கு கல்யாண வயசுங்கறது 16 ஆகி, அப்பறம் ஒரு வேலை அமைஞ்ச உடனே செஞ்சுக்கறதா 20,22 ஆகி, பொறவு கொஞ்சம் காசு பாத்தவுடனே செய்யறதா 27 ஆகி, இப்பவெல்லாம் "சொந்தவீடு,கார், கையில 10லட்சமாவது பணம்.. இல்லைன்னா எனக்கு தேவையில்லை திருமணம்"னு 31 ஆகி நிக்குது! உடலளவில் 16ல் (என்னது இதுவே அதிகமா?! கில்லாடியா நீர்! ) எல்லாம் தயாரா இருக்கற நாம் மனசளவுல 29 வயசு ஆனாலும் தயாரா இருக்கமாங்கறதுதான் கேள்வி! பதிண்ம வயதுகளில் படிக்கறதை தவிர நமக்கு வாழ்க்கைல ஏதாவது சுமைகள் உண்டா?! அப்பங்காசுல தின்னுக்கிட்டும் உடுத்திக்கிட்டும் அலையற காலத்துல நான் ஆண் என்பதை நிரூபிக்கக்கூடிய அத்தனை வேலைகளையும் செய்யறோம்! அரும்பு மீசை வளர்த்தறதுல இருந்து பெண்களை ஒரு தினுசா பார்க்கறது வரை அவரவர் பாலினங்களை மற்றதுடன் வேறுபடுத்தி நிலை நாட்டுவதிலேயே அவ்வயது ஓடிப் போய்விடுகிறது. நான் ஆண் நீ பெண் என்ற சமூகம் கொடுக்கிற அழுத்தமான அடையாளங்களை நம்மீது பூசிக்கொள்வதில் தான் நாம் மும்முரமாக இருந்திருக்கிறோம். இருவருக்குமான வித்தியாசங்களை கண்டறியும் முயற்சியில் அறியப்படாத, மறைக்கப்பட்ட, கண்டறியாத உண்மைகள் இனக்கவர்ச்சியாக உருவெடுக்கின்றன. ஆணென்றால் இதுவா? பெண்னென்றால் இதுவா? என்ற கேள்விகளை மட்டுமே கண்டறியும் முயற்சிகள் ஒரு காலக்கட்டத்தில் ஓய்ந்து விட்டாலும் அதற்கான பதில்களை கண்டறியும் முயற்சிகளற்ற வாழ்க்கை ஒவ்வொன்றாய் அனுபவங்களின் மூலம் சொல்லிக்கொடுக்கிறது.


சரி! இதைத் தாண்டிட்டோம்னு வைங்க! ஒரு வேலையும் வாங்கி சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டோம். வீடு கொடுக்கும் தளைகளில் இருந்து விடுதலை. இந்த எண்ணத்தை கொடுப்பது பணம் மட்டுமே இல்லை. நம்மை நாமே கவனிச்சுக்கற அளவுக்கு வளர்ந்துட்டோம் என்பதற்கான சமூகத்தின் அங்கீரம்தான் வேலைக்கு போறதை மரியாதையாக பார்ப்பது. நீங்க எவ்வளவு சம்பாதிக்கறீங்க என்பது மேட்டரு இல்லை! எந்தவிதமாக உங்கள் வாழ்க்கையை இந்த இடத்தில் இருந்து கொண்டு செல்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது உங்களைப் பற்றிய சமூகத்தின் பிரதிபலிப்பு! இங்கிருந்து ஒரு நாலைந்து வருசத்துக்கு "வீட்டிலிருந்து விடுதலை" என்பதை அனுபவிக்க மனசு அலைகிறது. பசங்கெல்லாம் சம்பாதிக்க ஆரம்பிக்கற இந்த கட்டத்துல கூட இருக்கற பொண்ணுக எல்லாம் கல்யாணம் கட்டி போய்க்கிட்டே இருப்பாங்க! ஆச்சரியமா இருக்கும்! நம்பகூட பேக்கு மாதிரி சுத்திக்கிட்டு இருந்தவ இப்ப கல்யாணம்னு சொல்லிக்கிட்டு போறா! இவளுக்கெல்லாம் என்னத்த தெரியும்? எதுக்கு இப்பவே கல்யாணத்துல போயி மாட்டிக்கறா? அதுவும் அந்த மாப்ளைய பார்க்க சகிக்கலை! 29 வயசாம்! மண்டைல பாதிய காணோம்! USல இருக்காங்கற ஒரே காரணத்துக்காக கட்டிக்குடுத்துட்டாங்கனு மனசு ஆயிரம் பொரளி பேசத் துடிக்கும். வாரக்கடைசில பயக எல்லாம் ஒன்னா பீரைப் போட்டுக்கிட்டு இதைப்பத்தி மாஞ்சு மாஞ்சு பேசலாம்! அதுக்கு மேல ஒன்னும் நடக்காது! அடுத்த வருசம் அவ வயித்தை தள்ளிக்கிட்டு ரெண்டு சுத்து பெருத்து வர்றப்ப திரும்பவும் ஒரு ரவுண்டு பேச்சு வரும்! "எப்படி தேவதை மாதிரி இருந்தவ! இன்னைக்கு இப்படி ஆகிட்டா.. வாழ்க்கையே போச்ச்சுடா மாப்ளைன்னு" அவ வாங்கிட்டுவந்து கொடுத்த பாடிஸ்ப்ரேயை அடித்துக்கொண்டு பீர்களை எறக்கும்வேளையில் மீண்டும் ஒரு பொலம்பல் ஓடும்! என்னவோ அவ இவங்கிட்ட வந்து நான் சந்தோசமா இல்லைன்னு பொலம்புன மாதிரி!

குத்துமதிப்பா 20ல இருந்து 27 வரைக்கும் இன்னைய பசங்களோட கல்யாணம் அப்படிங்கறதோட கருத்து இப்படித்தான் இருக்கு. சுயமாய் நிற்கற தெம்புல பெண்ணை ஒரு இனக்கவர்ச்சி ஐகானாகத்தான் பார்க்க முடிகிறது. திருமணம் என்பது இரு குடும்பங்கள் இணைவது என்பதோ, ஆணும் பெண்ணும் இணைத்து இன்னொரு குடும்பத்தை உருவாக்குவதோ புரிவதே இல்லை! நாம் பார்க்கும் ஜன்னலின் வழி தெரியும் உலகம் அவ்வளவுதான். நண்பர்களுடம் ஆடுகிற ஆட்டமும் பாட்டமும் அவ்வளவு முக்கியமாகப்படுகிறது. ஒரு கட்டத்துக்கு மேல் தான் ஒரு தனிமையை உணர ஆரம்பிக்கிறோம்! வாரக்கடைசில நைட்டுபுல்லா கேங்கு போட்டுக்கிட்டு ஆட்டம் கட்டுனாலும் அடுத்த நாளு மனசுல வெறுமைதான் மிஞ்சும். பொங்க போடறதுக்கு நாலஞ்சு கூட்டாளிக இருந்தாலும் மனசுல எப்பவும் சொல்லறதுக்கு ஆளில்லாத ஒரு தனிமை இருந்துக்கிட்டே இருக்கும். பேசிப்பழக பெண் நண்பிகள் இருந்தாலும் சொல்லமுடியாத சோகத்தை சேர்த்துவைச்சிருக்கற சிட்டுக்குருவி மாதிரி மனசு அலைஞ்சுக்கிட்டே இருக்கும்! அடுத்தவங்க கல்யாணப்பத்திரிக்கை, லவ் மேட்டருங்க, பக்கத்துவீட்டு குழந்தைகளோட குதூகலம் இதையெல்லாம் பார்க்கறப்ப அம்மாப்பா, கூடப்பொறந்ததுக, கூட்டாளிக, மாமன் மச்சினனுங்க எல்லாரும் இருந்தும் நமக்குன்னு ஒருத்தரு இல்லையேன்னு வெறுமையை எப்போது உணர ஆரம்பிக்கிறீர்களோ அந்த நிமிடத்தில் நீங்கள் கல்யாணத்துக்கு தயார்!

ஆமா! இதெல்லாம் எனக்கு எங்க வந்தது? ஊட்டுல பார்த்து வைச்சாங்க.. கட்டிக்கிட்டேன்.. அப்படிங்கறவுங்களும் ஓன்னும் கொறைஞ்சுபோகலை! இந்த கட்டம் விட்டிங்கனா அடுத்தக்கட்டம்! ஒன்னு கவனிச்சிருக்கீங்களா? நமக்கெல்லாம் கல்யாண வயசு 28 மேல போயாச்சு! இந்த நெனப்பு வந்து சரி என்னவோ ஒன்னு நாமளும் கட்டிகுவம்கற பக்குவம் வர்றதுக்கே இத்தனை வருசமாகுது! ஆனா பொண்ணுங்க மட்டும் எப்படி 20 வயசுலயே மனசளவுல தயாராயிடறாங்க!? புரியாத புதிரா? அதெல்லாம் ஒன்னுமில்லைங்க! நாமெல்லாம் பகுத்தறிவு பின்னாடி "நாம நினைக்கறதே தத்துவம்"னு அலைஞ்சு திரிஞ்சு ஒன்னும் திருப்தியாகாம 28ல பட்டறிவுதான் வாழ்க்கையா இருக்குமோன்னு ஒரு நப்பாசைல வண்டிய இங்கன நிறுத்தறோம்! ஆனா அவிங்கெல்லாம் தெளிவு! இந்த பட்டறிவுங்கறதுதான் வாழ்க்கைன்னு அவங்க மனசுல இந்த சமூகம் மாத்திமாத்தி சொல்லி படிய வைச்சுறதால 20லயே வண்டிய நேரா நமக்கு முன்னால கொண்டுவந்து ஹால்ட் அடிச்சுடறாங்க!


சரி! இந்த நினைப்பு வந்துட்டா மட்டும் ஒடனே கல்யாணத்துக்கு ரெடின்னு தலையாட்டுறமா என்ன? வேலைக்கே ஆகாத ஒரு தத்துவம் ஒன்னு 100த்துக்கு 70 மக்கா வைச்சிருக்கறது "செட்டில் ஆனாதான் கல்யாணத்தை பத்தி பேச்செடுப்பேன்" அப்படிங்கறது! இந்த இளவஞ்சில இருந்து அந்த பில்கேட்ஸ் வரைக்கும் சொல்லறது இதுதான்! மனுச வாழ்க்கைல செட்டிலாவறதுங்கற ஒன்னே கிடையாது! இன்னைக்கு 10 லட்ச ரூவா சேர்த்துட்டா செட்டில்னு நினைச்சா அத அடையறதுக்குள்ள அந்த லட்சிய ஆசை 50 லட்சமா மாறியிருக்கும்! மனுச வாழ்க்கைல பொருளைப்பற்றிய தேடல் மூச்சு விடறப்பதான் முடியும்! நல்லா கவனிங்க! கல்யாணத்துக்கும் வாழ்க்கைல செட்டிலாகறதுக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது! சில பேரு மாமனாரு கிட்ட வெயிட்டா வாங்கிக்கிட்டு வாழ்க்கைல செட்டிலான மாதிரி ஒரு பில்டைப்பை போடுவாங்க! அந்த யானை விழுங்குன வெளாம்பழத்தையெல்லாம் இதுல சேர்க்காதீக! கல்யாணங்கறது வாழ்க்கைல ஒரு முறைதான்! தனித்தனியா பார்த்தா அது வாழ்க்கையின் மறக்க முடியாத நிகழ்வுதான்! ஆனா நம்மை முழுசா பணயம் வைச்சு இறங்கற அளவுக்கோ, இல்லை அப்படியே ஊனுருகி உயிருருகி காத்திருக்க வேண்டிய அளவுக்கோ அதுல ஒன்னுமே இல்லை! எப்படி மொதமொதலா சைக்கிள் ஓட்டுனமோ, மொத ஜீன்சை போட்டுக்கிட்டு தரைக்குமேல ரெண்டடி நடந்தமோ, மொத திருட்டு தம்மை கண்ணுல நீர்வர நெஞ்சம் துடிதுடிக்க இழுத்தமோ, எப்படி மொத மப்புல ரோட்டுக்கு சோறுபோட்டமோ அதேபோல வாழ்க்கையில் இதுவும் ஒரு இயல்பான நிகழ்வு! அவ்வளவே!


ஆகவே மக்களே! உங்களுக்கு முன்னாடி அண்ணணோ தங்கையோ கல்யாணத்துக்கு வெயிட்டிங்ல இல்லையா? வீட்டுல வேறெந்த பிரச்சனையும் இல்லையா? அப்பாம்மா, சொந்த பந்தம் எல்லாம் உங்க கல்யாணத்தை பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்களா? உங்களுக்கும் மேல சொன்னதெல்லாம் நடக்குதா? பேசாம தலையாட்டிருங்க! 27 என்பதே அதிகம். சும்மா வாழ்க்கைல செட்டில் ஆகிட்டுத்தான் கல்யாணம், வீடு வாஙகுனதுக்கப்பறம் தான் கல்யாணம், என் மனசுக்கு புடிச்ச தேவதை என் வாழ்க்கைல என்னைக்கு வராளோ அன்னைக்குதான் கல்யாணம்னு ஏதாவது சம்பத்தமில்லாத கொள்கைகளையெல்லாம் வைச்சுக்கிட்டு எப்படியும் வாழ்க்கைல பின்னாடி வந்தே தீரப்போகிற துன்பங்களுக்காக சேர்த்து வைச்சுக்க வேண்டிய வருடங்களை வீணடிச்சுறாதீக!!!

என்ன நாஞ்சொல்லறது?! இதுக்கு ஓகேன்னா மேற்கொண்டு ஆகவேண்டியதை பேசலாம்!

--------

கருத்துகள்

  1. பாடம் படிக்கிறதுக்கு முன்னாடி வகுப்புக்கு வந்ததை பதிவு செய்துகொள்கிறேன்:-)

    பதிலளிநீக்கு
  2. Ayya ilavanji,

    Naan confuse aviitein.. so quickly write your next step :-)

    - Karthi

    பதிலளிநீக்கு
  3. முத்துகுமரன்,

    நீங்கதான் ஸ்டூடண்ட் நெ.1 ! :)

    ***

    கார்த்திக்,

    ஒரு பின்நவீனத்துவ கட்டுரையை இப்படித்தான் அவதி அவதியா படிக்கறதா? ஆற அமற படிச்சாலே புரியறதுக்கு 2 நாளு ஆவாதா?!

    இதுவும் இல்லாம கல்யாணம் கட்டி 3 வருசம் ஆனவன் எப்படி அவ்வளவு ஈசியா ஒரே சிட்டிங்ல புரியற அளவுக்கு எழுதமுடியும்னு யோசிக்க வேணாமா?! அவனது கம்யூனிகேசன் சேனலெல்லாம் எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கும்னு நினைச்சுப்பார்க்க வேண்டாமா?

    புடிங்க இம்போசிசன்! இந்த பதிவை 3 முறை சத்தம்போட்டு படிங்க! :)))

    பதிலளிநீக்கு
  4. /// பேசிப்பழக பெண் நண்பிகள் இருந்தாலும் சொல்லமுடியாத சோகத்தை சேர்த்துவைச்சிருக்கற சிட்டுக்குருவி மாதிரி மனசு அலைஞ்சுக்கிட்டே இருக்கும்! அடுத்தவங்க கல்யாணப்பத்திரிக்கை, லவ் மேட்டருங்க, பக்கத்துவீட்டு குழந்தைகளோட குதூகலம் இதையெல்லாம் பார்க்கறப்ப அம்மாப்பா, கூடப்பொறந்ததுக, கூட்டாளிக, மாமன் மச்சினனுங்க எல்லாரும் இருந்தும் நமக்குன்னு ஒருத்தரு இல்லையேன்னு வெறுமையை எப்போது உணர ஆரம்பிக்கிறீர்களோ அந்த நிமிடத்தில் நீங்கள் கல்யாணத்துக்கு தயார்!////

    எனக்கு இதெல்லாம் 2 வருஷத்துக்கு முன்னாலயே தோண ஆரம்பிச்சுடுச்சு. எனக்கு இப்ப 19 வயசு தான். என்ன பண்ணலாம்??
    ///கல்யாணங்கறது வாழ்க்கைல ஒரு முறைதான்! ////
    என்ன சின்னபுள்ள தனமா இருக்கு???;-)

    பதிலளிநீக்கு
  5. //ஒரு பின்நவீனத்துவ கட்டுரையை இப்படித்தான் அவதி அவதியா படிக்கறதா? ஆற அமற படிச்சாலே புரியறதுக்கு 2 நாளு ஆவாதா?!//

    அப்ப திருமணத்திற்கு பின்னாடி எழுதுவதுதான் பின்நவீனத்துவமோ:-)).

    நன்றி குருவே:-)

    பதிலளிநீக்கு
  6. எங்க வீட்டில் இளவஞ்சி, பல பிரச்சனைகள் வரும் பொழுதெல்லாம் ஒரு விஷயம் மட்டும் நடக்கும், குடும்பம் என்றாலே இப்படின்னு மட்டும்னு நினைச்சிறாத அப்படின்னு சொல்லி, எங்க அம்மாவோ இல்லை சித்தியோ பெரிய அட்வைஸ் மூட்டையை இறக்க ஆரம்பிச்சிறுவாங்க.

    கல்யாணத்தை வெறுப்பதாக சொன்ன ஒவ்வொறு முறையும், எனக்கு அளவுக்கதிகமாக விளக்கபட்டிறுக்கிறது. குடும்பம் என்பதைப் பற்றி வீட்டில், ஆனால் எங்கக்காவுக்கும் எங்கமாவுக்குமான தொடர்பு, எனக்கும் எங்கம்மாவிற்குமோ இல்லை எனக்கும் எங்கப்பாவிற்குமோ கிடையாது. இது ஆண் வர்க்கத்தின் ஒரு பெரிய சாபக்கேடு.

    என்னைக்கேட்டால், இதையெல்லாம் பெண்கள் ஒருமாதிரியாகவும் ஆண்கள் ஒருமாதிரியாகவும் புரிந்துகொள்கிறோம் என்று நினைக்கிறேன். அவர்கள் இந்த குடும்ப சங்கடங்களை எப்படி போக்குவது என்று ஆர அமர ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். நாம் சீக்கிரமே மனதை விட்டுவிடுகிறோம். அது கல்யாணத்தை வெறுப்பதில் போய் முடிந்து விடுகிறது. அதனால் தான் அம்மாக்கள் ஆண் பிள்ளைகளிடம் சொல்வதில்லை பல விஷயங்களை.

    எங்கள் வீட்டில் நான் பல சமயம் வெகு சாமர்த்தியமாகவெல்லாம் விவாதித்திருக்கிறேன், நான் கல்யாணம் செய்து கொள்ளாமல் இருந்தால் என்ன என்று. ஆரம்பத்திலேயே பிரச்சனையை, சொல்லி வளர்த்ததால் வந்த விளைவென்றாலும், பல தரமான வாதங்கள், அம்மா, சித்தி, அக்காவால் வைக்கப்பட்டிருக்கிறது.

    பார்ப்போம் எல்லாம் என் கையில் தானே இருக்கிறது. :-) என்னவோப்போங்கள், பலவிஷயங்களை நினைவுபடுத்திவிட்டீர்கள். முதல் அறிமுகத்திற்கே இப்படி என்றால், இருக்கும் கொஞ்சமும் போய்விடுமென்று நினைக்கிறேன். :-)

    பதிலளிநீக்கு
  7. கார்த்திக்,

    //எனக்கு இப்ப 19 வயசு தான். //

    என்னது 19ஆ? உமக்கு யாரு மேன் ட்ரிபிள் ப்ரொமோஷன் கொடுத்து இந்த வகுப்புல உட்கார வைச்சது?!

    /////கல்யாணங்கறது வாழ்க்கைல ஒரு முறைதான்! ////
    என்ன சின்னபுள்ள தனமா இருக்கு???;-) //

    தம்பி, இந்த பதிவு கல்யாணத்துக்கு ரெடியாகறவுகளுக்காக எழுதறது! சைட் அடிக்கறதுக்கும், பிகரு தேத்தறதுக்கும் வேணா இது இல்லைன்னா இன்னொன்னுன்னு மனசுல தோனலாம்! கல்யாணம்னு வந்த பிறகு இது "இவள் ஒருத்திதான் என் வாழ்க்கைக்கு" என்ற எண்ணம் வேண்டும்! இதைப்பத்தி எழுதறப்ப "கல்யாணங்கறது வாழ்க்கைல ஒரு முறைதான்" னு அழுத்தம் திருத்தமா எழுதனும்! இத விட்டா இன்னொன்னுங்கற நெனப்பு மனசுல இருந்தா மணமேடை பக்கமே வந்துறாதீக!!!

    //என்ன பண்ணலாம்?? //

    பேசாம இதை ஒரு மர்ம நாவல்னு நெனைச்சு படிச்சுக்கிட்டு போங்க! உங்களுக்கெல்லாம் காலம் இருக்கப்பு! :)

    ***

    முத்துகுமரன்,

    கற்பூர புத்தியப்பா உனக்கு! போற போக்கை பார்த்தா க்ளாஸ் லீடராகவே ஆயிருவ போலிருக்கே!!

    கப்பு கப்புன்னு புரிஞ்சுக்கற உன்னை நினைச்சா எனக்கு அப்படியே புல்லரிக்குது! :)))

    ***
    Alien,

    வருகைக்கு நன்றி!

    மக்கா! பார்த்தீகளா! வகுப்புக்கு ஏலியன் வரைக்கும் வாராக!!!! பிரச்சனை அவிங்க கிரகம் வரைக்கும் பரவிடுச்சு போல!!! :)))

    பதிலளிநீக்கு
  8. மோகன்தாஸ்,

    //என்னைக்கேட்டால், இதையெல்லாம் பெண்கள் ஒருமாதிரியாகவும் ஆண்கள் ஒருமாதிரியாகவும் புரிந்துகொள்கிறோம் என்று நினைக்கிறேன். அவர்கள் இந்த குடும்ப சங்கடங்களை எப்படி போக்குவது என்று ஆர அமர ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். நாம் சீக்கிரமே மனதை விட்டுவிடுகிறோம்.//

    இதை இன்னொருமுறை படிங்க...

    //நாமெல்லாம் பகுத்தறிவு பின்னாடி "நாம நினைக்கறதே தத்துவம்"னு அலைஞ்சு திரிஞ்சு ஒன்னும் திருப்தியாகாம 28ல பட்டறிவுதான் வாழ்க்கையா இருக்குமோன்னு ஒரு நப்பாசைல வண்டிய இங்கன நிறுத்தறோம்! ஆனா அவிங்கெல்லாம் தெளிவு! இந்த பட்டறிவுங்கறதுதான் வாழ்க்கைன்னு அவங்க மனசுல இந்த சமூகம் மாத்திமாத்தி சொல்லி படிய வைச்சுறதால 20லயே வண்டிய நேரா நமக்கு முன்னால கொண்டுவந்து ஹால்ட் அடிச்சுடறாங்க! //

    அவ்ளோதான் மேட்டரு! :)

    //முதல் அறிமுகத்திற்கே இப்படி என்றால், இருக்கும் கொஞ்சமும் போய்விடுமென்று நினைக்கிறேன். :-) //

    அய்யா! எந்த சைடு விழுகறீங்க?! இந்த வயசுல கல்யாணம் வேணும் வேணாம்னு எந்த சைடு விழுந்தாலும் கவலையில்லை! உங்களுக்கெல்லாம் காலம் இருக்கப்போவ்!! :))

    பதிலளிநீக்கு
  9. 1.மனசு ஆயிரம் பொரளி பேசத் துடிக்கும். வாரக்கடைசில பயக எல்லாம் ஒன்னா பீரைப் போட்டுக்கிட்டு இதைப்பத்தி மாஞ்சு மாஞ்சு பேசலாம்! அதுக்கு மேல ஒன்னும் நடக்காது! அடுத்த வருசம் அவ வயித்தை தள்ளிக்கிட்டு ரெண்டு சுத்து பெருத்து வர்றப்ப திரும்பவும் ஒரு ரவுண்டு பேச்சு வரும்! "எப்படி தேவதை மாதிரி இருந்தவ! இன்னைக்கு இப்படி ஆகிட்டா.. வாழ்க்கையே போச்ச்சுடா மாப்ளைன்னு" அவ வாங்கிட்டுவந்து கொடுத்த பாடிஸ்ப்ரேயை அடித்துக்கொண்டு பீர்களை எறக்கும்வேளையில் மீண்டும் ஒரு பொலம்பல் ஓடும்! என்னவோ அவ இவங்கிட்ட வந்து நான் சந்தோசமா இல்லைன்னு பொலம்புன மாதிரி!


    2.வாரக்கடைசில நைட்டுபுல்லா கேங்கு போட்டுக்கிட்டு ஆட்டம் கட்டுனாலும் அடுத்த நாளு மனசுல வெறுமைதான் மிஞ்சும். பொங்க போடறதுக்கு நாலஞ்சு கூட்டாளிக இருந்தாலும் மனசுல எப்பவும் ஒரு சொல்லறதுக்கு ஆளிலாத ஒரு தனிமை இருந்துக்கிட்டே இருக்கும்.


    சரியா சொன்னிய!!உலகெங்கும் உள்ள
    கல்யாணமாகாத நம்ம மக்காமாரு மனசை புட்டு புட்டு வைச்சுட்டிய!!!!.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    பதிலளிநீக்கு
  10. எந்த சைட் விழப்போறேன்னு தெரியலை தான், இருந்தாலும் நீங்கள் சொல்வதைப்போல் இன்னும் வயசு இருக்கிறது. (போல் இருக்கிறது).

    ரொம்ப ஆர்வமா இன்னும் சில கேள்விகள், சில விளக்கங்கள் உங்களிடமிருந்தும் கிடைக்குமென்ற் நம்பிக்கையில் தான் உக்காந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. இளவஞ்சி, பெரீய்ய வேலைல இறங்கி இருக்கீங்க. அப்படியே இங்க ஓரமாத் தான் இருக்கேன்னும் சொல்லி வச்சுக்கிறேன்.

    கூட இருக்கற பொண்ணுக - US மாப்பிள்ள பத்தி எழுதியிருந்தீங்க. நானெல்லாம் அதுக்கு முன்னாடியே டவுசர் போட்டுச் சுத்துன காலத்திலேயே கல்யாணங்களுக்குப் போகும் போது மனசுக்குள்ளேயே 'சே இப்படி சூப்பரா இருக்கற அக்காவுக்கு இப்படியொரு ஆளு மாப்பிள்ளையா? இந்த மாதிரி ஆளெயெல்லாம் கட்டிக்க எப்படி ஒத்துக்கிட்டாங்க அவுங்க' என்று பாவப்பட்டிருக்கிறேன். இதுக்கெல்லாம் எதாவது உளவியல் காரணம் இருக்கலாம். ஆனால் அப்படிக் கட்டிக்கிட்டவங்களும் பின்னாடி சந்தோஷமாத் தான் இருக்காங்க. 'அட எவ்வளவு நல்ல பொருத்தம்'னு மேம்போக்காப் பாத்துச் சொல்ல முடியுற சில கூட அவ்வளவு சந்தோஷமா இருப்பதா சொல்ல முடியாது. அதனால, நீங்க சொல்ற 'அடுத்த தேவதை வரும் வரை காத்திருக்கப் போறேன்னு நாளை வீணாக்காதீங்க'ங்கற அறிவுரைய இன்னும் கல்யாணம் ஆகாத சின்னப் புள்ளீங்க நல்லாப் புடிச்சிக்கனும்னு என்னோட பரிந்துரையும்.

    வீட்டுல பொண்ணு பாக்கறப்போ நான் நினைத்த ஒன்னே ஒன்னு - கண்ணாடி போடாத பொண்ணா வேணும்னு! - ரெண்டு பேரும் சோடாப்புட்டின்னா வாரிசுகளுக்கும் அப்படியே அமைஞ்சுடும்னு நினைச்சதாலங்க! அப்படியும் முதலில் பாத்த பொண்ணு கண்ணாடிதான் போட்டிருந்தாலும் சரி பரவாயில்லைன்னு நினைச்சேன். பிறகு அமைஞ்சதுக்கு அப்படி இல்லைங்கறதுல சந்தோஷம்.

    சரி இப்படி எதிர்பார்ப்பே இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டா பிரச்சினை இல்லைன்னு நினைக்கறீங்களா? அது தான் இல்லை. நீங்க ஏமாந்துருக்கிற ஒரு நேரத்துல 'யாராயிருந்தாலும் கல்யாணம் செய்திருப்பீங்க, என் மேலன்னு தனியா என்ன ஈர்ப்பு இருக்கு'ன்னு ஒரு கணை வரும்!! அதுக்கும் தயாரா இருக்கணும்...

    (அப்புறம் யு.எஸ். மாப்பிள்ளைங்க பத்தி நாம அதிகமா ஒண்ணும் சொல்ல முடியாது :-) )

    பதிலளிநீக்கு
  12. ஆப்பிள்லே இருந்து பில் கேட்ஸ் வரை அலசி ஆராய்ஞ்சு பீராய்ஞ்சு போட்டிருக்கீங்க.. இளைய மக்களே, அனுபவச்சுரங்கத்தை தவற விட்டுவிடாதீர்கள்.

    ஆனாலும், இது உள்குத்து உள்ள பதிவோ எனத்தோற்றமளிக்கிறதே:-)

    //27 என்பதே அதிகம்.//

    நாம் பெற்ற துன்பம்?

    பதிலளிநீக்கு
  13. oஒரே ஒரு சந்தேகம் வந்திருக்கு. ஆனா இப்ப கேள்வி கேக்கலை. பொறவு பாத்துக்குவோம்...

    பதிலளிநீக்கு
  14. துபாய் ராஜா,

    வருகைக்கு நன்றி!

    ****
    மோகன்தாஸ்,

    //ரொம்ப ஆர்வமா இன்னும் சில கேள்விகள், சில விளக்கங்கள் //

    கவலையே படாதீக! பழம்தின்னு கொட்டை போட்ட பெரியவங்க நிறைய பேரு இங்க இருக்காக!! :)

    ****

    செல்வராஜ்,

    //இப்படி எதிர்பார்ப்பே இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டா பிரச்சினை இல்லைன்னு நினைக்கறீங்களா?//

    எதிர்பார்ப்பு இல்லாம இருக்கனும்னு சொல்லலை! "பருவத்தே பயிர்செய்" னு சொல்லறதுக்காக சொன்னது அது! :)

    //அப்புறம் யு.எஸ். மாப்பிள்ளைங்க பத்தி நாம அதிகமா ஒண்ணும் சொல்ல முடியாது :-) //

    அண்ணே, அது சும்மா ஒரு சாம்பிளுக்கு சொன்னது! :))))))))

    ****

    சுரேஷ்,

    //ஆனாலும், இது உள்குத்து உள்ள பதிவோ எனத்தோற்றமளிக்கிறதே:-) //

    ஹிஹி...

    ****

    தருமிசார்,

    //oஒரே ஒரு சந்தேகம் வந்திருக்கு. ஆனா இப்ப கேள்வி கேக்கலை. //

    என்னோட வயசு உங்க அனுபவம்! உங்களுக்கு எல்லாம் தெரியாததையா சொல்லறேன்! இந்த பதிவை ஆரம்பிச்சதே குட்டைய குழப்பியாவது மீன் பிடிக்க முடியாதாங்கற நப்பாசைதான்!

    அதனால, எதுவா இருந்தாலும் ஒரு குட்டு குட்டுங்க! குட்டு வைக்கறதுக்கு என்னுது மாதிரி 'தலை' எல்லாம் அடிக்கடி கிடைக்காது! :)))

    பதிலளிநீக்கு
  15. {{ //இப்படி எதிர்பார்ப்பே இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டா பிரச்சினை இல்லைன்னு நினைக்கறீங்களா?//

    எதிர்பார்ப்பு இல்லாம இருக்கனும்னு சொல்லலை! "பருவத்தே பயிர்செய்" னு சொல்லறதுக்காக சொன்னது அது! :)
    }}
    அட இந்தக் கேள்வி உங்ககிட்டக் கேட்கலீங்க. உங்களோட சேர்ந்து பொதுவா மத்தவங்களுக்குச் சொன்னது. உங்க பதிவின் தொனியில ஒன்றிப் போய் இப்படி வெளிவந்துவிட்டது!

    பதிலளிநீக்கு
  16. செல்வராஜ்,

    தவறான புரிதலுக்கு மன்னிச்சிருங்.. :)

    ****

    ராசா, பட்டணத்து ராசா, நந்தன்,

    வாங்க தம்பிகளா!!!

    போறபோக்கைப்பார்த்தா எனக்கு வெளில இருந்து உதை விழுகாதுன்னு நினைக்கறேன்! படிக்க வந்தேன்னு சொல்லிக்கிட்டு வந்திருக்கற உங்களையெல்லாம் பார்த்தாதான் வயித்த கலக்குது!

    பொன்ஸ் ஓபனா மண்டைல சிலேட்டை தூக்கிப்போடுவேன்னு சொல்லிட்டாங்க! ஆனா மக்கா நீங்க எல்லாம் என்னா ஐடியா வந்திருக்கீகளே தெரியலையே!! :((

    அடிக்கனும்னு முடிவு பண்ணிட்டீங்கன்னா கொஞ்சம் பார்த்து அடிங்கப்பு! பூஞ்சை உடம்பு! அடி தாங்காது!!!

    பதிலளிநீக்கு
  17. //பிறகு அமைஞ்சதுக்கு அப்படி இல்லைங்கறதுல சந்தோஷம். //

    வாத்தியாரே! செல்வராஜ் சொன்ன இந்த வாக்கியம்தான் இந்தமாதிரி பதிவு எழுதுற மனோபாவத்துக்கு அடிப்படை தகுதியா?.

    **இது ஒரு பின்நவீனத்துவ சந்தேகம்**

    பதிலளிநீக்கு
  18. //**இது ஒரு பின்நவீனத்துவ சந்தேகம்** //
    முத்துகுமரன், என்ன சொல்றீங்க? உங்களுக்கு இன்னும் பின் நவீனத்துவம்ங்கற சொல்லையே எழுதும் 'தகுதி' வரலைன்னுதானே இளவஞ்சி சொல்றாரு :)!!!

    பதிலளிநீக்கு
  19. முத்துக்குமரன்,

    //செல்வராஜ் சொன்ன இந்த வாக்கியம்தான் இந்தமாதிரி பதிவு எழுதுற மனோபாவத்துக்கு அடிப்படை தகுதியா? //

    இது ஒரு நல்ல கேள்வி!

    அவர் சொன்ன வாக்கியத்தை ஊன்றிப் படிங்க! 'சந்தோஷம்' என்ற வார்த்தையை எழுதியிருக்காரு!!!

    சந்தோஷத்துக்கும் பின்நவீனத்துவத்துக்கும் என்னையா சம்பந்தம்?!

    சந்தோஷம் என்ற வார்த்தையை அறிந்தவர்களெல்லாம் செல்வராஜ் மாதிரி வாழ்க்கையை சந்தோசமா வாழப்போயிருவாங்க! மத்தவங்க தான் இந்த மாதிரி பதிவெல்லாம் எழுத... ஹிஹி...

    (உங்க வாத்தியாரின் ஊட்டுக்காரம்மா செக்கச்சிவக்க காய்ச்சிய தோசைக்கையுடன் சற்றுமுன் வீட்டை விட்டு புயலெனக் கிளம்பியதாக இட்லிவடையில் லேட்டட்ஸ் அப்டேட் (நம்புங்க! அது எந்த வகையானாலும் தகவலை முந்தித்தருவது இட்லிவடை தான்! ) செய்யப்பட்டுள்ளதால் உங்க வாத்தியாரு எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்..... )

    பதிலளிநீக்கு
  20. //உங்களுக்கு இன்னும் பின் நவீனத்துவம்ங்கற சொல்லையே எழுதும் 'தகுதி' வரலைன்னு//

    வாம்மா பொன்ஸ்!

    இப்பத்தான் ஓராளு கேள்வி கேக்கற அளவுக்கு கொஞ்சம் தெளிஞ்சு ஒக்காந்திருக்காரு!

    அதுக்குள்ள சாச்சுப்புட்டியே யம்மா!

    நல்ல புள்ளையாத்தானே இருந்த! இந்த மாதிரியெல்லாம் உன்னை கேள்வி கேக்க சொல்லிக்கொடுத்து இங்க அனுப்பறது அந்த துபாய்கார அக்காதான்னு எங்களுக்கு தெரியாதா!?

    இதுமாதிரி எந்தவித உள்நாட்டுக்குழப்பத்துக்கும் எங்க கட்சித் தொண்டர்கள் மயங்க மாட்டார்கள்!

    வாழ்க ஒ.பு.ஒ கட்சி!
    வளர்க தொண்டர்களின் அறிவுத்தாகம்!!!

    :)

    பதிலளிநீக்கு
  21. பொன்ஸ், இந்த பதிவு பி. ந வைச் சார்ந்ததே. இவரூ ஒண்ணு சொல்ராரூ, சிஷ்ய பிள்ளைங்க, கரீட்டா தப்பா புரிஞ்சிக்கிதுங்க. போதாதற்கு செல்வராஜ் வேற, பிடிச்சிருந்த பொண்ணு, அமையலை சந்தோஷம்ன்னு சொல்ராரூ :-)))))))

    என்னவோ போ, அத்தினி வாத்தியாரூங்களும் வேஸ்ட், இதுல சிலேட்ட தூக்கிக்கிட்டு, லைன்னா வருதுங்க :-)

    கார்த்திக், உங்க பதிலை, அதுதாங்க, தனிமை விரும்பி, பாலகுமாரன் மேட்டர் பார்த்தேன். கொஞ்சம் பொறுங்க. சீரியஸாகவும் கதைக்கலாம். இளவஞ்சி எப்படி கொண்டுப் போகிறார் என்றுப் பார்த்துவிட்டு, எங்க பங்குக்கும் எழுதுகிறேன். நிஜமாகவே சீரீயசாத்தான்.

    பதிலளிநீக்கு
  22. அன்பு மாணவச்செல்வங்களே!

    சற்று முன்பு உஷாக்கா அவர்கள் இங்கு வந்து உங்களுக்கெல்லாம் "சமூக அறிவியல்" பாடத்தில் ஒரு சின்ன அசைன்மெண்ட் கொடுத்துச் சென்றிருக்கிறார்கள்!

    //இளவஞ்சி எப்படி கொண்டுப் போகிறார் என்றுப் பார்த்துவிட்டு, எங்க பங்குக்கும் எழுதுகிறேன் //

    நன்கு மிகக் கவனமாக மேலுல்ல வாக்கியத்தை படியுங்கள்! அதிலுள்ள ஆழ்ந்த அரசியலும், நம்மையெல்லாம் ஆண்டாண்டு காலமாக அவர்கள் ஆண்டு வரும் சூட்சுமத்தின் முடிச்சையும் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல!

    *** எப்படி கொண்டுப் போகிறார் என்றுப் பார்த்துவிட்டு *** இங்கதான் நிக்கறாங்க அவிங்க! அவங்களாக எதுவுமே செய்யமாட்டாக! நாம ஏதாவது ஆரம்பிச்சா கண்கொத்திப்பாம்பாக கவனித்து இந்த பிட்டை போடுவாக!! அதாவது நாம "வலது"ன்னு எழுதுனா அவிங்க "இடது"ன்னு கொடி பிடிப்பாக! நாம "வெள்ளை"னு சொன்னா "இல்லவேயிலை.. அது அட்டக்கருப்பு"ன்னு அடம்பிடிப்பாக!!

    என்ன ஒன்னு! அதை முதல்ல நாம ஆரம்பிக்கனும்! அப்பத்தானா ஏறுக்குமாறா கோக்குமாக்கா பேச வசதியாக இருக்கும்!!

    மிக முக்கியமான இந்த பாடத்தை அழுத்தமாய் எழுதி அடிக்கோடிட்டு பத்திரமா வைச்சுக்கங்க! பின்னாடி வருகிற ஸிலபஸ்க்கு ரெபர் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்! :)

    பதிலளிநீக்கு
  23. //என்ன ஒன்னு! அதை முதல்ல நாம ஆரம்பிக்கனும்! அப்பத்தானா ஏறுக்குமாறா கோக்குமாக்கா பேச வசதியாக இருக்கும்!!

    மிக முக்கியமான இந்த பாடத்தை அழுத்தமாய் எழுதி அடிக்கோடிட்டு பத்திரமா வைச்சுக்கங்க!//

    இளவஞ்சி, நானும் இந்தப் பாடத்தை அழுத்தமா அடிக்கோடிட்டு வச்சிக்கிட்டேன்.. பின்னாடி எதுனா பிரச்சனைன்னா பயன்படுத்த (அதாங்க பேசவிட்டு அப்புறமா நம்ம கட்சிய சொல்றது) வசதியா இருக்கும் :)

    பதிலளிநீக்கு
  24. //நன்கு மிகக் கவனமாக மேலுல்ல வாக்கியத்தை படியுங்கள்! அதிலுள்ள ஆழ்ந்த அரசியலும், நம்மையெல்லாம் ஆண்டாண்டு காலமாக அவர்கள் ஆண்டு வரும் சூட்சுமத்தின் முடிச்சையும் புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல!
    //

    நியாயமான கவலை...

    ஆனா நாங்க எல்லாம் உம்ம மாணவரய்யா. அதுனால கலாய்ச்சிடுவோம். கவலப்படாதீங்கப்பூ:-))

    பதிலளிநீக்கு
  25. //அத்தினி வாத்தியாரூங்களும் வேஸ்ட்//

    இதிலிருக்கும் உள்குத்தை வன்மையாக கண்டிக்கிறேன்., உண்மையிலேயே ஸ்மைலி இல்லை, வாத்தியாருன்னு யாரை சொன்னாலும் எங்க வீட்டிலும் இரண்டு வாத்தியார்கள் இருப்பதால்.

    பதிலளிநீக்கு
  26. அடடா! இளவஞ்சி நீங்க பெரிய வாத்தியாராயிட்டீங்கன்னு சொன்னாங்க. இப்பல்ல புரியுது. சம்சார சாகரத்தை நீந்தக் கத்துக்குடுக்குறீங்க. நீங்க சொல்றதுக்குப் பல பெரிய அனுபவஸ்தர்கள் வந்து ஆமாம் சொல்லும் போது...ஆகா...ஆபிஸ்ல ஜூஸ் குடிக்கும் போது பக்கத்துல உக்காந்து காப்பி குடிச்ச இளவஞ்சியா இதுன்னு தோணுது. அடுத்து பாக்கும் போது ஒங்களுக்குக் கும்புடு போட்டுட்டுதாய்யா பேசனும். (அது சரி...இப்பிடி ஒரு பதிவுன்னு வீட்டுல உத்தரவு வாங்கிக்கிட்டீங்களா?)

    ஆனாலும் உங்க பின்நவீனத்துவநிறமை நிறைந்த எழுத்து....ஒரு கணக்காத்தான் இருக்குது.

    பதிலளிநீக்கு
  27. பின்நவீனத்துவm என்றால் என்ன? இது தெரியாததால எனக்கு கல்யாண வயசு இன்னும் வரலைன்னு சொல்லிராதீங்க... நீங்க சொன்ன அறிகுறி எல்லாம் தெரிய ஆரம்பிச்சிருக்கு ;-)

    பதிலளிநீக்கு
  28. என்ன ஒன்னு! அதை முதல்ல நாம ஆரம்பிக்கனும்! அப்பத்தானா ஏறுக்குமாறா கோக்குமாக்கா பேச வசதியாக இருக்கும்//

    இளவஞ்சியாரே, அப்படியா சங்கதி?
    பார்க்க நுனிப்புல்- ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ளக்கதை

    பதிலளிநீக்கு
  29. பொன்ஸ், முத்துகுமரன், மோகன்தாஸ்,

    நீங்க கலக்குங்கப்பா!!! :)

    ராகவன்,

    //இப்பிடி ஒரு பதிவுன்னு வீட்டுல உத்தரவு வாங்கிக்கிட்டீங்களா//

    என்ன கேள்வி கேட்டீங்க?! யாராவது சொந்த செலவுல சூனியம் வைச்சுப்பாகளா?! :)

    உதயகுமார்,

    //நீங்க சொன்ன அறிகுறி எல்லாம் தெரிய ஆரம்பிச்சிருக்கு //

    இதுபோதுங்க! இன்னைக்கு நைட்டே வீட்டுக்கு பேசிடுங்க! :)

    இப்போதான் ராஜாவோட விக்கெட்டு விழுந்துட்டதா நம்பகமான தகவல்கள் வந்திருக்கு!! :)

    உஷா,

    இங்க என்ன நடக்குதுன்னு சிலபேரு கண்டுபுடிச்சுட்டாங்க! ! சிலபேர் இன்னும் அந்த லைனுக்கு வரலை! நீங்க அந்த ரெண்டாவதுல இருக்கறீங்கன்னு நினைக்கறேன்! :)
    சரி விடுங்க! கடைசி பதிவுக்குள்ளயாவது உங்களுக்கான பதிலை(!?) சொல்லறேன்! :))

    நீங்க பாட்டுக்கு உங்க சைடுல ஜமாய்ங்க! :)

    பதிலளிநீக்கு
  30. //எப்படி மொத மப்புல ரோட்டுக்கு சோறுபோட்டமோ//

    ஐயோ! வெட்டி வெட்டி போட்டா கவிதையா தெரிய வேண்டியத இப்படி உரைநடையிலயே சர்வசாதாரணமா எழுதுறீங்களே!

    பதிலளிநீக்கு
  31. வாத்தியார் இளவஞ்சி ,

    First and Formost karthik present Sir..

    இந்த பதிவுல

    // அடிவரை தோண்டி அதற்குண்டான ஆதாரகாரணங்களை கண்டறிவது பகுத்தறிவு

    இப்படி சொன்ன நீங்களே

    // இது ஒரு வறட்சியான அறிவு வளர்ச்சியை மட்டுமே கொடுக்கும்!

    இப்படியும் சொல்லலாம.. இப்ப கடைல வேலை செய்யும் போது ஒரு சிஸ்டம் டிஸைன் பண்ணுறதுக்கு இருக்குற மூளைய எப்படி எல்லாம் கசக்க வேண்டியது இருக்கு.. 1008 தடவை அடி வரைக்கும் நோண்ட வெண்டியது இருக்கும். சாதாரண '01' & '10' க்கே இப்படின்னா வாழ்க்கைல எப்படி யோசிக்கணும்..? என்ன கேட்டா கல்யாணம்ங்கிறது கம்யூனிஸ்ட் ரஷ்யாவையும் கேபிட்டலிஸ்ட் அமெரிக்காவையும் இன்டெக்ரேட் பண்ணுறதுக்கு சமாணம். அடி மாத்துனாலும் வாழ்க்கை வேஸ்ட்.. தவிர வாழ்க்கைங்கிறது கல்யாணம் மட்டுமே வா ? இன்னும் எவ்வளவு இருக்கு சாதிக்க.. அதை தனி ஆளா சந்திக்கணும்..

    Sorvival of the fittest என்ற தத்துவம் நிலைக்க பெற்ற இந்த உலகில் தனி ஒருவனாக போராடுவதே சிரமம்.. இதில எதுக்கு எக்ஸ்ட்ராவாக ஒரு லக்கேஜ் ? இது என்னை இந்த உலகில் சிக்கிரம் சோர்வடைய வைத்து பின்னடைய செய்யாதா ?

    // மனித இனம் தவிர்க்க இயலாத உணர்வுகள்

    மனிதன் உணர்வுகளுக்கு அடிமை ஆகும் போதுதான் தவறான செயல்களுக்கு துணை போகிறான்.. எதையுமே அறிவுபூர்வமாக அணுகவேண்டும்..

    ***

    நீங்க சொல்லுறத பாத்தா கல்யாணம் ஆகிட்டா மூளைய கழட்டி வச்சிட்டு, வெறுமனே சொல்லுறதுக்கு எல்லாம் பூம்பூம் மாடு மாதிரி ஆகிடணுமா.. அப்படி செய்வது என் சுயத்தை இழப்பது என்றாகிவிடாதா ?

    இதை எல்லாம் எப்படி சாதாரணமா எடுத்துக்கிறதுன்னு எனக்கு தெரியல

    ***

    உங்க கூற்றுபடி கல்யாணம் ஆனதுக்கு பின்னாடி எழுதுவது பின் நவீனத்துவம் என்றால், இது எல்லாம் எதையும் ஆராயாமல் உணர்ச்சிகளின் போக்கில் எழுதுவதா ? :-)

    இது எல்லாம் தெரிந்தும் தலையாட்டுவது, நமக்கு நாமே திட்டத்தில் சூனியம் வைப்பது போலாகாதா ?

    ***

    மதில் மேல் பூனையாக் உள்ளவனை மேலும் குழப்பி விடும் உங்களின் பதிவு :-).

    ***

    உஷா மேடம்,

    கண்டிப்பா பேசலாம்.. உங்க பங்குக்கு நீங்களும் குழப்புங்க :-)

    பதிலளிநீக்கு
  32. இளவஞ்சி,
    கடைசியா நான் சொன்னதை நீங்க சரியா புரிஞ்சிகிட்டீங்களான்னு தெரியலை.. ஆனா எனக்கு ஒண்ணு மட்டும் பிரகாசமாத் தெரியுது.. க்ளாஸ் எல்லாம் முடிஞ்சு உங்களைக் கூடிக் கும்மியடிக்கிற கூட்டத்துல நிச்சயம் எனக்கு வந்து வாய்க்கப் போறவரு கண்டிப்பா இருப்பாரு :).. எத்தனை வருசம் ஆனாலும் :)

    பதிலளிநீக்கு
  33. ஆஹா.... பாடங்கேக்க எல்லோரும் ஓடியாந்துட்டாங்க போல இருக்கே. சுறுசுறுப்பான
    சனங்கதான் போல.

    ஜூ.வி.லெகூட ஒருத்தர் 'தொடர்' எழுதறாராமே!

    இளவஞ்சி,

    தெரிஞ்சோ, தெரியாமயோ
    //.....சமுகத்துக்கு இது ஒரு அதரப் பழசான சாமாச்சாரம்! ...//

    இப்படி(ச்) சொல்லிட்டீரே, மெய்யாலுமா டைப்பிங் மிஸ்டேக்கு?

    பொம்பளைங்க கண்ணுலே விளக்கெண்ணெய் ஊத்திக்கிட்டுல்லெ படிக்கறோம்.

    ஆமாம் 27 வயசு கூடுதல்ன்னா
    22 பரவாயில்லையா?:-))))

    பதிலளிநீக்கு
  34. ஜோ,

    //வெட்டி வெட்டி போட்டா கவிதையா தெரிய வேண்டியத //

    இப்படி அநியாயத்துக்கு ஓட்டறீங்களே! நியாயமா!? :)

    ****

    கார்த்திக்,

    //தவிர வாழ்க்கைங்கிறது கல்யாணம் மட்டுமே வா ?//

    அதைதாங்க நானும் கேக்கறேன்?! ஒன்னுமே இல்லாத கல்யாணத்துக்கு ஏன் பயப்படனும்?! வெறுத்து ஒதுக்கனும்?!

    //இதில எதுக்கு எக்ஸ்ட்ராவாக ஒரு லக்கேஜ் ? //

    கை நிறைய சம்பாதிக்கறதாலேயே நாம இன்ஜினாகவும், வர்றவுக லக்கேஜாகவும் ஆகிடமாட்டாங்க! இந்த இடத்துல கல்யாணத்துக்கு மாப்ளையா இல்லாம உங்க வீட்டுல பையனா யோசிச்சுப்பாருங்க! அப்பாதான் சம்பாதிச்சி குடுக்கிறார்! ஆனா அம்மாதான் அத்தனையும் இழுத்துப்போட்டு பார்த்து, நம்மையும் வளர்த்து, அப்பாவுக்கும் உறுதுணையா இருந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துக்கிட்டு போறாங்க! மனசலவில நேர்மையா சொன்னா வீட்டுல அம்மாதான் இன்ஜின்! அப்பா உட்பட நாமெல்லாம் நீங்க சொன்ன எக்ஸ்ட்ரா லக்கேஜ் தான்! அம்மா மட்டும் "போங்கப்பா நீங்கெல்லாம்! என்னோட சுயத்துக்கும் வளர்ச்சிக்கும் தடையா இருக்கீங்க"ன்னு நினைச்சுட்டா லக்கேஜெல்லாம் திசைக்கு ஒன்னு பிடிப்பில்லாம விழுக வேண்டியதுதான்!

    //எதையுமே அறிவுபூர்வமாக அணுகவேண்டும்.. // கண்டிப்பாக! அது வெளியுலகை ஜெயிக்கறதுக்கு!!! வீட்டுக்குள்ள வேளைக்காவாது! கோடானுகோடி நட்சத்திரங்கள் உள்ள இந்த உலகத்தில் நீயும் நானும் தூசிலும் தூசுன்னு அறிவுப்பூர்வமாக சொன்ன அதே வாயோட "என்ன சட்டினி இது! உப்பும் இல்லாம உரைப்பும் இல்லாம"ன்னு சொல்லற வாய் நம்முடையது!

    அறிவுபூர்வமாகத்தான் அனைத்தையும் அனுகவேண்டுமெனில், அறிவுபூர்வமாக ஆராய்ந்து கண்டறிந்த சிக்மெண்ட் ஃப்ராய்டின் அம்மா-மகன், அப்பா-மகள் ஈர்ப்புக்கான காரணங்களை தெரிந்த பிறகும் இங்கு குடும்பமாக வாழமுடியாது!

    //பின் நவீனத்துவம் என்றால், இது எல்லாம் எதையும் ஆராயாமல் உணர்ச்சிகளின் போக்கில் எழுதுவதா ? :-) //
    அடடா! ஒரு பேச்சுக்கு சொன்னா இதை பின்நவீனத்துவமாகவே மாற்றி என்னை இலக்கியவாதியாக மாற்றி முன்பல்லை உடைக்காம விடமாட்டீங்க போல இருக்கு! :)

    உணர்சிகளின் போக்கில் இல்லை.. உணர்வுகளின் போக்கில் எழுதுவது!

    உங்களால் முடியுமெனில் 'ideology' என்ற உங்கள் சித்தாந்தத்தை இங்கு விளக்க முடியுமா? அதற்கான எனது புரிதல்கள் வேறு! அதைக்கொண்டு என்னால் முடியுமெனில் உங்களுக்கு பதிலளிக்கிறேன்!

    ****
    பொன்ஸ்,

    //கூடிக் கும்மியடிக்கிற கூட்டத்துல நிச்சயம் எனக்கு வந்து வாய்க்கப் போறவரு கண்டிப்பா இருப்பாரு :)//

    இப்படியொரு வாய்ப்பு இருக்குங்கறதுக்காகவே இங்க என்னை போட்டுத்தாக்க கூட்டம் சேரப்போகுது!!!

    ஏம்மா! உங்க மப்புக்கு நாந்தான் ஊறுகாயா?! :))))))

    பதிலளிநீக்கு
  35. கார்த்திக் மற்றும் அனைத்து அறியா பிள்ளைகளுக்கும் ஒரு அறிவிப்பு- வாருங்கள் நுனிப்புல் பக்கம், ஒப்பாரி இல்லை, சோகப் பாட்டு இல்லை, புரியாத தத்துவம் இல்லை. இருபக்க பிரச்சனையையும் ஆழ்ந்து, அலசி தீர்வு சொல்லி, வாழ்க்கை தேர்வில் 100/100 வாங்க , உங்களுக்கு நல்ல வாய்ப்பு
    ( தேறாவிட்டால், உங்களுக்கு திறமை
    போதாது என்று சொல்லிவிடுவோமில்லே)

    படிக்க- ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ளக் கதை

    பதிலளிநீக்கு
  36. //படிக்க- ஆணுக்கும் பெண்ணுக்கும் என்னாளும் உள்ளக் கதை
    //
    போச்சு, ஏற்கனவே இங்க இருக்கிறதுங்க எல்லாம் மதில் மேல் பூனை தான். இப்போ துபாய்க்கு போவதா, பெங்களூர்லயே இருக்கிறதான்னு யோசிக்கப் போறாங்க..

    உஷாகா, க்ளாஸ் டயத்துல என்ன வெட்டிப் பேச்சுன்னு கேக்கறீங்களாக்கா, இதோ வந்துட்டேன்கா!!

    பதிலளிநீக்கு
  37. துளசியக்கா,

    //இப்படி(ச்) சொல்லிட்டீரே, மெய்யாலுமா டைப்பிங் மிஸ்டேக்கு? //

    என்னைப்பத்திதான் உங்களுக்கு தெரியுமே! 10 டைப்பிங் மிஸ்டேக் இல்லைன்னா அது என்னோட பதிவாகவே இருக்காது! :( திருத்திடறேன்!

    //ஆமாம் 27 வயசு கூடுதல்ன்னா
    22 பரவாயில்லையா?:-)))) //

    அதுசரி! பயக எப்ப 100% அக்மார்க் மாக்கானுகளா இருக்கமோ அப்ப செஞ்சா புள்ளைங்களுக்கு கட்டிமேய்க்க வசதியா இருக்கும்னு நினைக்கறீங்களா?!

    :)

    பதிலளிநீக்கு
  38. அன்புள்ள இளவஞ்சி அய்யா,

    என் நண்பர்கள் எல்லோருக்கும் கல்யாணம் முடிந்துவிட்டது. இப்போதெல்லாம் முன்னர்போல் நண்பர்களுடன் நேரம் செல்விட முடியவில்லை. என்னால் அல்ல , அவர்களால், இதனால் நானும் கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். இதற்கு வேறு வழியே கிடையாதா? உங்கள் ஆலோசனை என்ன?

    நங்கைநல்லூர்
    சென்னை
    (பஸ் வழி: 51பி)

    பதிலளிநீக்கு
  39. இளவஞ்சி, விளம்பரம் பண்ணினதுக்கு காசு கேக்கலையா நீங்க.

    //ஒரு அறிவிப்பு- வாருங்கள் நுனிப்புல் பக்கம், //

    இப்படி பிரபலமான பதிவில் இலவசமாக விளம்பரம் செய்வது தவறு.

    பதிலளிநீக்கு
  40. கார்த்திக்ராமாஸ்,

    //நேரம் செல்விட முடியவில்லை. என்னால் அல்ல , அவர்களால், //

    ஏங்க.. இதெல்லாம் இன்னைக்கு நேத்தா நடக்குது?! அந்தக்காலத்துல ராஜராஜசோழனே கல்யாணத்துக்கு அப்பறம் நண்பர்களுடன் செலவிட்ட நேரத்தை குறைத்துக்கொண்டதாய் அகழ்வாராய்ச்சி கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன!!! (சும்மா அடிச்சி விடறதுதான்! :))) )

    // இதற்கு வேறு வழியே கிடையாதா?//

    வழி உண்டு! பழிக்குப்பழியாய் நீங்களும் இந்த குட்டைல குதிக்கறதுதான்! இல்லைன்னா கடைசிவரைக்கும் விசேசநாளுக்கு மட்டும் அவிங்க வீட்டுக்கெல்லாம் போய் அவங்க போடற வடைபாயாசத்தை சாப்டுட்டு "நல்லா சமைக்கறீங்க"ன்னு சர்டிபிகேட்டு குடுத்துக்கிட்டு இருக்கறது மட்டும்தான் நடக்கும்! :)

    இங்க இன்னொரு மேட்டரும் இருக்கு! நீங்க இன்னும் கடுவனா சுத்திக்கிட்டு இருக்கறதாலதான் உங்களை சேர்த்துக்கறதுக்கு ஒரு தயக்கம் இருக்கும்! நீங்களும் கட்டிக்கிட்டீங்கன்னா வாரக்கடைசிலையாவது "பேமிலி மீட்"னு ஒரு பிட்டைப்போட்டு அம்மணிகளையெல்லாம் ஒன்னாக்கூடி பொரளிபேச விட்டுக்கு, புள்ளைகுட்டிகளையெல்லாம் "எல்லாரும் நல்ல புள்ளைங்களா ஒன்னாக்கூடி விளையாடுங்க"ன்னு தள்ளிவிட்டுட்டு.. நாம பாட்டுக்கு ரெண்டு பீர்கேஸோட ஒரு ரூம்ல கூடிக் கும்மியடிக்கலாம்! (அதாவது கஸ்ட நஸ்டங்களை பகிர்ந்துக்கலாம்! :) )

    என்ன சொல்லறீங்க?! :)

    ****

    மோகன்தாஸ்,

    // இலவசமாக விளம்பரம் செய்வது தவறு. //

    இதெல்லாம் மேட்டரே இல்லை! சகஜமா எடுத்துக்கனும்!

    எழுதறதே 700பேரு! இதுல ஒருத்தரை ஒருத்தரு அமுக்கிக்கிட்டு இருந்தா வேலைக்காகுமா?!

    பதிலளிநீக்கு
  41. திரு இளவஞ்சி அவர்களுக்கு,
    தங்களின் அனைத்து இடுகைகளையும் படித்து முடித்து,மன்னிக்கவும் சிரித்து முடித்து இதை எழுதுகிறேன் மேலும்,
    தங்களின் எழுத்தின் பிரவாகம் கண்டு
    அதிசயிக்கிறேன்.
    எப்பிடி சாத்தியமாகிறது இந்த நடை?
    எப்பிடி சாத்தியமாகிறது இந்த ரகளை?

    வானம் வசப்பட தேவை சிறு முயற்சி என்று சொல்லாதார் எவர்.

    வாழ்த்துக்கள்.

    கண்ணன் இராமசாமி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு