முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

க.க:3 - பலியாடுகளிடம் தேவையான சில மாற்றங்கள்...


கக்கூடி மனதளவில் ரெடியான மக்கா எல்லாம் அடுத்து என்னத்தை இவன் மண்டைல வைச்சுக்கிட்டு நம்ப மண்டைல கரண்டி விட்டு கலக்காத கொறையா கொழப்பப் போறானோன்னு வந்திருக்கீக! ஆமா! அடுத்தது என்னன்னு நீங்க நெனச்சிருக்கீங்க?! என்னப்பு மோட்டு வளைய பார்க்கறீங்க? என்னது யோசிக்க முடியலையா? அதான் கல்யாணத்துக்கு தயார்னு தெளிவா அறிக்கை விட்டுட்டுத்தானே இங்க வந்தீங்க? இதோட வாழ்க்கைல யோசிக்கறதை மறந்துடுங்க! முயற்சி செஞ்சாலும் முடியாது! அவ்வளவு பவர்புல் நீங்க எடுத்திருக்கற இந்த முடிவு! :))) ச்சும்ம்மா உட்டாலங்கடீங்க!


சரி, நீங்க OK சொல்லிட்டீங்க! உங்க வீட்டாரெல்லாம் சந்தோசமா பயலுக்கு கோட்டி தெளிஞ்சிருச்சின்னு சந்தோசப்பட்டுக்கிட்டு "கல்யாணம் வரைக்கும் இவனை இப்படியே வைச்சிரு மாரியாத்தா"ன்னு பணமுடியெல்லாம் கூட போட்டிருப்பாங்க! உங்களைச் சுத்தி உங்க வாழ்க்கையை நல்ல விதமாக அமைத்துக்கொடுக்க நலம் விரும்பிகள் அப்பா, அம்மா, அக்கா, தாய்மாமான்னு இத்தனை பேரு துடியா இருக்காங்க! சரி! நீங்க என்ன செய்யப்போறீங்க? உங்களை எப்படி நீங்க உங்க கல்யாணத்துக்காக தயார்படுத்திக்கப் போறீங்க? இத்தனை நாள் வாழ்ந்த பேச்சுலர் வாழ்க்கையும் அதற்குத் தேவைப்படும் மனநிலையும் வேறு! காலம் முழுதும் ஒரு பெண்னுடன் சேர்ந்து வாழ்வதற்குத் தேவையான மனநிலை என்பது வேறு! வேற வழியில்லையப்பு! மாறித்தான் ஆகனும்!

பேச்சுலர் வாழ்க்கைல நம்ப லைப் ஸ்டைலே வேற! எந்த முடிவும் எடுக்கறதுக்கு முன்னாடி எத்தனை தடவை யோசிப்பீங்க? எத்தனை முறை யோசிச்சாலும் எத்தனை பேரை கலந்தாலோசிச்சாலும் அது உங்களோட முடிவுதான். கூட்டாளிக கிட்ட கேப்பீகளா? எல்லாரும் ஒரே குட்டைல ஊறிய மட்டைகள்! "இது"ன்னா சரி "இது"! "அது"ன்னா சரி "அது"! அவ்வளவுதான் முடிவெடுக்கறதுல உள்ள குழப்பம்! அதனால "நைட்டு எங்கடா சாப்பிட போகலாம்?" அப்படின்னு ஒரு கேள்வி வந்தா நேரா சரவணபவன் போய் உட்கார்ந்தாலும் கவலையில்லை! ட்ரிப்ளிக்கேன்ல கெளம்பி அப்படியே நுங்கம்பாக்கம் வழியா ஊர்ந்துபோய் டி.நகர்ல கொஞ்சநேரம் காத்து வாங்கி கலர் பார்த்துட்டு, ஏதாவது Sale போட்டிருக்கற கடைல ஏறியிறங்கி 10 மணிக்கா முருகன் இட்லி கடைல க்யூல நின்னு 11 மணிக்கு நாலு இட்லிய தின்னுட்டு மெதுவா வீட்டுக்கு வந்தாலும் கவலையில்லை! பசங்களுக்கு எல்லாமே ஒன்னுதான்!

இதுவே கல்யாணம்னு ஆகிட்டா இப்படியெல்லாம் இருக்க முடியாதுங்க! இங்க போலாம்னு முடிவு செஞ்சா இங்கதான் போகலாம்! அப்படியே மனம் போனாப்புல போகமுடியாது! இங்க தான் இருக்கு சிக்கல்! எந்த முடிவெடுத்தாலும் ஆப்பு உறுதின்னு தெரிஞ்சுட்டதுன்னா "முடிவை நீங்க எடுங்க"ன்னு அவங்க எப்பவும்போல தள்ளி விடும்போது நாம முழிக்கற முழி இருக்கே! காணச் சகியாது! ரோட்டை க்ராஸ் செய்யற நாய் இங்கயும் அங்கயும் மாறிமாறி தவ்வற மாதிரிதான் நம்ப நிலைமை ஆகிறும்! இது "ஏங்க! இந்த வாரம் எங்க மாமா ஊருக்கு போலாமா"ங்கறதுல இருந்து "இந்த அரக்கு கலர் பார்டர் வைச்ச புடவை எனக்கு நல்லா இருக்கா" வரைக்கும் அனைத்துக்கும் பொருந்தும்! என்ன சொல்லறேன்னா இப்போ இருக்கற பேச்சுலர் வாழ்க்கைய வைச்சு நாமெல்லாம் ஒரு பிரச்சனையை அனுகறதுலையும் தீர்க்கறதுலையும் அசகாய சூரருங்கன்னு மனசுல ஒரு நினைப்பு இருக்கும்! நம்முடைய சிந்தனையோட்டத்துல இதுவரை நாம சேர்த்துக்கவே சேர்த்துக்காத ஒரு எதிர்பால் உயிரினத்தோட கருத்துக்களை நாம் கலந்துக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கறப்பதான் நம்முடைய முடிவெடுக்கும் திறன் பல்லைக் காட்டிரும்!


கல்யாண மார்க்கெட்ல எண்ட்ரி குடுத்துட்டீங்க! இனி உங்களை எந்த அளவுக்கு நீங்க சந்தைப்படுத்தறீங்களோ அந்த அளவுக்கு விலை போவீங்க! விலைன்ன உடனே வரதட்சிணைனு நினைக்காதீங்க! அது உங்களோட எதிர்பார்ப்புகள். அதாவது நீங்க எந்த அளவுக்கு உங்க எதிர்பார்ப்புகளுக்கு தகுதியானவனாக உங்களை மாத்திக்கறீங்களோ அந்த அளவுக்கு அவைகள் நிறைவேற வாய்ப்புகள் அதிகம்! தகுதியறிந்து எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதுவும் இங்க ஆட்ட விதி! ஆனா இந்த தகுதிகளை நாம் வளர்த்துக்கறதை யாரும் தடுக்க முடியாதில்லையா? தகுதி வளர்க்கறதுன்ன BE படிச்சிருக்கற நாம ஒடனே எப்படியாவது டாக்டரேட் வாங்கறது இல்லைங்க. கல்யாண சந்தைல உங்களை நீங்கதான் மார்க்கெட் செய்யனும்! அதுக்காக என்னென்ன செய்யலாம்?


மொதல்ல உங்க இமேஜ் தப்பா இருந்தா அதை மாத்தனும்! இன்னும் காலேஜ் பையன் மாதிரி ஒரு வாரம் தோய்க்காத அழுக்கு ஜீன்சு, மண்டையோடு போட்ட பிரிண்டடு சட்டை, பகுட்டுல கருவண்டு ஒட்டிக்கிட்டு இருக்கறலாப்புல வைச்சிருக்க தாடி, கண்ணுக்கு கலைஞர் கொடுக்கப்போற இலவச டீவி ரெண்டை ஜாயிண்ட் செஞ்சு போட்டாப்புல பெரிய பிரேம் கண்ணாடி, மண்டைல சப்பாத்திக்கள்ளி வளர்ந்தாப்புல முள்ளு முள்ளா நிக்கற ஹேர்ஸ்டைலு இதையெல்லாம் மாத்திருங்க! கணவனாக வேண்டும் என்ற கனவிருந்தால் கனவான் வேசம் போட்டுத்தான் ஆகனும்! உங்களைப்பற்றிய தகவல்கள் யார் மூலம் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பொண்னு வைச்சிருக்கறவுங்களுக்கு போய் சேரலாம்! ஆகவே மக்களே! வேசம் கலையுங்கள்! வாரத்துக்கு மூனுமுறை கூட்டாளிகளோட விடியற வரைக்கு குடிக்கற பழக்கத்தை விட்டொழியுங்கள்! வாரம் ஒருமுறை அளவாக குடித்துவிட்டு ஜென்டில்மேனாக படுக்கைக்கு போய்விடுங்கள். ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டு தம்மை சர்வ சாதாரணமாக ஊதறீங்களா? நாளைக்கு ஒன்னோ ரெண்டோ அடிச்சுட்டு மிண்ட் போட்டுக்கங்க! இந்த காலத்து ஹீரோங்க மாதிரி எப்பவும் சரைக்க காசில்லாம 6 நாள் தாடியோட இருக்காதீங்க! லைட்டா பீரைப்போட்டுக்கிட்டு விடிய விடிய கூட்டாளிககூட "என்ன இருந்தாலும் குஷ்பு சொன்னது தப்புதாண்டா"ன்னு நயாப்பைசாக்காகத விசயத்தை குஷ்புவே அவங்க கொழந்தைகளை கட்டிப்பிடிச்சுட்டு நிம்மதியா தூங்கிக்கிட்டிருக்கற நேரத்துல வாக்குவாதம்கற பேர்ல பிரிச்சு மேயறீங்களா?! அதையெல்லாம் "நீ சொன்ன சரியாத்தான் இருக்கும் மாப்ள"ன்னு படக்குன்னு சமாதானக்கொடிய காட்டிட்டு நேரங்காலமா படுத்துக்கற பழக்கமா மாத்திருங்கப்பு! இங்க நான் சொல்லறதுல உங்களுடைய வரப்போற வாழ்க்கைக்கு எது உதவுதோ இல்லையோ இந்த ஜகா வாங்கறது மிக உதவியா இருக்கும்!


"அதெப்படி? கல்யாணம்னா என் பழக்க வழக்கத்தையெல்லாம் மாத்தனுமா! என் சுயத்தை இழக்க மாட்டேன்" அப்படின்னு ஏதாவது வீர வசனங்கள் வைத்திருந்தால் வரும் பெண்னைப்பற்றிய உங்க எதிர்பார்ப்புகளிலும் சிலதையெல்லாம் அழிச்சிருங்க! நினைச்சுப்பாருங்க! குளிச்சு அஞ்சு நாள் ஆனவன் மாதிரி, தோய்க்காத முட்டில கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டுக்கிட்டு, சிக்கெடுக்காத பங்க் தலையோட, சிகரெட் நாத்தம் போக்க பான்பராக் போட்ட வாயோட ஒருத்தன் உங்க ஆபீஸ் பக்கத்துல வேலை செய்யறான்னு வைங்க! பையனுக்கு நல்ல வேலை நல்ல சம்பளம்தான்! அவனுக்கு உங்க அக்காவையோ, தங்கையையோ கேட்டு வந்திருக்கு! பையன் எப்படின்னு உங்களை பார்த்துட்டு வரச்சொல்லறாங்க! நீங்க வந்து என்ன சொல்லுவீங்க?! பையன் ஸ்டைலே தனி! கண்டிப்பா குடுக்கலாம்னா?!


அதேபோல இந்த ஸ்டேஜிக்கு வந்த பிறகு, USலயோ இல்லை UKலையோ ஆன்சைட்டுல இருக்கறப்ப, வீக்கெண்டு பார் போகையில வெள்ளைக்கார குட்டிகளை முட்டிக்கிட்டு இருக்கற மாதிரியாக, கைல பீர் கேனோட எடுத்த படங்களை எல்லாம் கூட்டளிககிட்ட பிலிம் காட்டறேன்னு அனுப்பற வேலையையெல்லாம் விட்டுருங்க! அதெல்லாம் எங்க சுத்தி யார் கைக்கு போய் முடியும்னு யாருக்கும் தெரியாது! நம்ப பிரண்டு ஒருத்தரு பிரேசில் மாடிகிராஸ்ல கழுத்துல பாசிமாலை போட்டு பிகருங்க "காட்டற" போட்டோவையெல்லாம் கூட நின்னு எடுத்துக்கிட்டதை எங்களுக்கெல்லாம் அனுப்பிவைச்சான்! அப்ப பார்க்கறப்ப எங்களுக்கு பொகைன்னா பொகை! அவனுக்கு பொண்ணு பார்க்கறப்ப நிச்சயம் முடியற ஸ்டேஜில அந்த பொண்ணோட சொந்தக்காரபையன் "இந்த மாப்ளை பையனை எங்கயோ பார்த்தமாதிரி இருக்கே"ன்னு ரொம்ப யோசிச்சு பழைய மெயில் எல்லாம் கொடைஞ்சு அதுல ரெண்டு "சுத்தமான" போட்டோவை பிரிண்டுபோட்டு அவங்கப்பன் கையில கொடுத்துட்டான்! அதுக்கப்பறம் அந்த ஃபங்ஷன் நடந்ததுங்கறீங்க!?

கல்யாணப்பேச்சு ஆரம்பிச்ச உடனே செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான மேட்டரும் இருக்கு! இதுவரை நீங்க அரிய பொக்கிஷமா சேர்த்து வைச்சிருக்கற உங்க முன்னாள் காதலி(கள்)யிடம் பெற்ற க்ரீட்டிங்கார்டு, லிப்ஸ்டிக் பதிச்ச அழுக்கு கர்ச்சீப்பு, ஆட்டின்ல உங்க ரெண்டுபேரு இன்சியலும் போட்ட கீ செயினு, ஒன்னுமன்னா நிக்கற போட்டோ, பஸ்டிக்கெட்டு, காய்ஞ்சு போன ஒரு மல்லிப்பூ.. இந்த மாதிரி சாமச்சாரத்தை எல்லாம் கடைசியா ஒருமுறை க்ளோசப்ல ஆசைதீர பார்த்துட்டு தலைய சுத்தி வீசிருங்க! கஸ்டம் தாங்க! என்ன செய்யறது? முதல் காதல் நினைவுகள் என்பது மனசில் செதுக்கிய கல்வெட்டுகள் தான்! அழிக்க முடியாதுதான்! நாளைக்கு வரப்போறவ கிட்ட இந்த மாதிரி ஒரு லவ்வரு இருந்தான்னு கூட சொல்லலாம்! தப்பில்லை! ஆனா "அந்திசாயும் ஒரு மாலையில் என் முதல் காதலியின் கூந்தல் தோட்டத்தில் பூத்த மலரிது"ன்னு அந்த காய்ஞ்ச மல்லியைக்காட்டி இன்னும் இதை பொக்கிசமா பாதுகாக்கிறதை பெனாத்துனீங்கன்னு வைங்க! அது சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கறது ஆயிரும்! (இதை முதல்ல சொன்ன புண்ணியவான் யாருப்பா? ஒரு நாளைக்கு 10 முறையாவது வாயில வருது! :) ) இந்த இடத்துல இன்னொன்னும் முக்கியமா கவனிக்கனும்! வரப்போகிற வாழ்க்கை முழுவதையும் முகம் தெரியாத ஒரு பெண்ணுடன் வாழத் தீர்மானித்த பிறகு தேவையில்லாத பழைய நினைவுகள் எல்லாம் எதுக்குங்க?! நம்மைப் போலவேதான் வர்றவங்களும் வளர்ந்திருப்பாங்க! எனவே, திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையில் எவ்வளவு நேர்மையாக ஒருவருக்கொருவர் உண்மையாக வாழ்கிறோம்கறதுதான் முக்கியம்! இதை விட அதிமுக்கியமானது நாம நாலு லவ் ஃபெயிலியரை வைச்சுக்கிட்டு வர்றவங்க கிட்ட அவங்களோட பழைய மேட்டரையெல்லாம் கேட்டு நோண்டக்கூடாது என்பது!

பசங்க நாமெல்லாம் ஆன்சைட்டு, வெளியூரு வேலைன்னு எப்படியாவது கொஞ்சமாவது சமைக்க கத்துக்கிட்டிருப்போம்னு நினைக்கறேன்! இல்லைன்னா மொத வேலையா அதை கத்துக்க ஆரம்பிங்க! எப்படியும் கொறைஞ்சது டிகிரி படிச்ச புள்ளையத்தான் கட்டப்போறீங்க! அதுங்களும் நம்பள மாதிரிதான்! படிக்கறேன் படிக்கறேன்னு சொல்லிக்கிட்டு வீட்டுவேலை எதுவுஞ் செய்யாம வளர்ந்து நிக்கும்! 100க்கு 70 புள்ளைங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி சமையல் தெரியாதுன்னு நான் அடிச்சு சொல்லுவேன்! இப்பெல்லாம் பொண்ணு பார்க்கற எடத்துல "சமைக்க தெரியுமா? பாடத்தெரியுமா"ன்னு கேக்கறதே தப்பான சமாச்சாரமா ஆகிட்டு வருது! கல்யாணத்துக்கப்பறம் அவங்களும் வேலைக்கு போனாங்கன்னா கண்டிப்பா சமையல் ரூம்ல கரண்டி புடிக்கற வேலை வந்தே தீரும்! "சமையலெல்லாம் கத்துக்க முடியாது"ன்னு அடம் புடிக்கறீங்களா? அப்ப சரி! கொஞ்சம் சிரமம் அதிகமாத்தான் இருக்கும்! அதனாலென்ன? சமாளிச்சுக்கலாம்!

நீங்க இப்போ எவ்வளவு சம்பளம் வாங்கறீங்க? அதுல PF, Tax எவ்வளவு புடிக்கறாங்க? மாசத்துக்கு எவ்வளவு செலவு செய்யறோம்? ஏதாவது தெரியுமா? அத்தனையும் விரல் நுனில வைச்சிருக்கறீங்கன்னா உங்களுக்கு இந்த பத்தி வேண்டாம்! "மாசம் ஒரு அமவுண்டு பேங்க்ல கிரெடிட் ஆகும்! அதுல கொஞ்சம் வீட்டுக்கு குடுத்துடுவனா.. அப்பறம் பசங்களோட தங்கியிருக்கற வீட்டு செலவுக்கு இவ்வளன்னு சொல்லுவாங்க.. அதையும் குடுத்துடுவனா..அப்பறம் கிரெடிட் கார்டு பில்லு கட்டுவனா.. அப்பறம்... ஐயையோ! மத்ததெல்லாம் எப்படி செலவாச்சுன்னு தெரியலையேன்னு" பொலம்பற கேசா!? அப்படின்னா தயவு செய்து கணக்கெழுத ஆரம்பிங்கப்பு! இது மூலமா வேண்டாத செலவுகளையெல்லாம் கண்டுபிடிச்சு குறைக்கறதுக்காக இல்லைன்னாலும் நாளைக்கு வரப்போறவுக இந்த மாதிரி "என்னா கணக்கு"ன்னு கேக்கறப்ப பேந்த பேந்த முழிக்காம ஏதாவது சொல்லி சமாளிக்கறதுக்காவது இந்த ப்ரேக்டீசு உதவும்! இன்னொன்னும் சொல்லறேன்! எப்ப கல்யாணம் செஞ்சுக்கலாம்னு முடிவு செஞ்சுட்டீங்களோ அந்த மாசத்துல இருந்தே உங்க சேமிப்பு சக்திக்கு ஏத்தபடி ரெண்டோ, அஞ்சோ தனியா எடுத்து வைச்சுக்க பழகிக்கங்க. எதுக்குன்னு பின்னாடி சொல்லறேன்!


இதையெல்லாம் செய்ய ஆரம்பிச்சு ஒரு பழக்கமாகவே மாத்திக்கற வழியைப் பாருங்க! இன்னைக்கு இல்லைன்னாலும் ஒரு நாளைக்கு இதெல்லாம் பழகித்தான் ஆகனும்! அப்ப இருக்கப்போகிற வரப்போகிற பிரச்சனைகளுக்கு நடுவுல இதையும் பழகனும்னா அது இன்னுமொரு மண்டையிடிதானே? அதனால இப்ப டைம் இருக்கறப்பவே இதையெல்லாம் ஹேபிட்டா மாத்திக்கங்க! ஒரு குடும்பஸ்த்தன் ஆகப்போகிறவன் என்ற நெனைப்பை எப்பவும் மனசுல இருத்திக்க இதெல்லாம் உதவும்! அவ்வளவுதாங்க! இதுக்கப்பறம் உங்க மக்கா எல்லாம் "மாப்ள! கல்யாண பேச்செடுத்த ஒரே மாசத்துல உன் முகத்துல கல்யாணக்களை கட்டுக்கடங்காம வழியுதேடா"ன்னு உங்களை ஓட்டலைன்னா என்னை என்னன்னு கேளுங்க! :)
உங்க வீட்டுல நம்பிக்கையான, எல்லா விசயங்களையும் முன்னின்று உங்களுக்காக செய்யற, நெளிவு சுளிவோட பேசத்தெரிந்த ஒன்னு விட்ட மாமாவோ இல்லை சித்தப்பாவோ இருக்காங்களா? அப்படின்னா அடுத்ததுல பாதி பிரச்சனை விட்டது போங்க! இன்னைக்கு அவ்வளவுதான்! தூக்கம் வருதுங்க! ஏதாவது விட்டுப்போயிருந்தாக்கூட நாளைக்கு பின்னூட்டத்துல பார்த்துக்கலாம்!

குட்டுநைட்டு மாப்ளைகளா! :)

--------

கருத்துகள்

  1. வாத்தியாரே வந்துட்டேன்...

    தூங்கிட்டு காலைல வந்து சந்தேகம் கேட்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  2. //////அதுல PF, Tax எவ்வளவு புடிக்கறாங்க? ////
    இதை தெரிஞ்சு என்ன பண்றது.???????????அதான் அவனுகளே எடுத்துக்கிட்டானுங்களே.:-(
    //////////////
    "மாசம் ஒரு அமவுண்டு பேங்க்ல கிரெடிட் ஆகும்! அதுல கொஞ்சம் வீட்டுக்கு குடுத்துடுவனா.. அப்பறம் பசங்களோட தங்கியிருக்கற வீட்டு செலவுக்கு இவ்வளன்னு சொல்லுவாங்க.. அதையும் குடுத்துடுவனா..அப்பறம் கிரெடிட் கார்டு பில்லு கட்டுவனா.. அப்பறம்... ஐயையோ! மத்ததெல்லாம் எப்படி செலவாச்சுன்னு தெரியலையேன்னு" பொலம்பற கேசா!?
    //////////
    நாமெல்லாம் இந்த கேஸ¤தான். என்ன சம்பளம் ஒரு வேலையிலேந்து இன்னொன்னுக்கு தாவும்போது HR கிட்ட (பேரம்)பேசும்போது மட்டும் தான் தெரியும்.

    /////தயவு செய்து கணக்கெழுத ஆரம்பிங்கப்பு////
    அது எப்படின்னு கொஞ்சம் சொல்லுங்க..

    பதிலளிநீக்கு
  3. yannungo.., mandaila moodi(hair) kammiya irukkurathai french dhadi vachuthanungo ooru optical illusion mathri oopaethikitu irukoom adhukum aapu vaipiga polairruke (aiyayo theriyadha poonuga kooda itha paathu usharraiduvangallo) pillaigala itha padikadhega, this is only for guys.

    superb post. sorry for typing in thanglish I don't have tamil key board.

    பதிலளிநீக்கு
  4. நான் வந்துட்டேன் வாத்தியாரே!
    //பையன் ஸ்டைலே தனி! கண்டிப்பா குடுக்கலாம்னா// சூப்பரா சொன்னீங்க.
    சரி மேட்டர் சீரியஸா போது நாமளும் சீரியஸாவோம்
    //என் சுயத்தை இழக்க மாட்டேன்// இதுல என்னங்க தப்பு? அப்பன் ஆத்தாவே மாத்தாத ஒரு புள்ள வந்தா மாத்த போது?

    பதிலளிநீக்கு
  5. சார் லேட்டா வந்துட்டேன் அரியர்ஸ் பாஸ் பண்ணிடுறேன். பிளீஸ் உள்ளே வரலாமா?

    பதிலளிநீக்கு
  6. //ஒரு வாரம் தோய்க்காத அழுக்கு ஜீன்சு, மண்டையோடு போட்ட பிரிண்டடு சட்டை, பகுட்டுல கருவண்டு ஒட்டிக்கிட்டு இருக்கறலாப்புல வைச்சிருக்க தாடி, கண்ணுக்கு கலைஞர் கொடுக்கப்போற இலவச டீவி ரெண்டை ஜாயிண்ட் செஞ்சு போட்டாப்புல பெரிய பிரேம் கண்ணாடி//

    நமக்கு ஒன்னியும் ஆகப்போறதில்ல :(( இது என்னமோ நிங்க எனக்கே எனக்கு எழுதனமாதிரி தெரியுது.

    பதிலளிநீக்கு
  7. //அப்பன் ஆத்தாவே மாத்தாத ஒரு புள்ள வந்தா மாத்த போது? //
    வாத்தியாரே, நட்சத்திரம் தேற மாட்டரோ?!!

    ஆமாம், எல்லாமே நிறைய வீட்டுப்பாடம் வைக்கிற வேலையா இருக்கே, இத்தனையும் ஒரே நாள்ல சொல்லிட்டீங்க?! நேத்திக்குக் கொஞ்சம் மதில் மேலேர்ந்து இந்தப் பக்கம் குதிச்சவங்க கூட இன்னிக்கு திரும்பி மதில்லயே ஏறி அந்தப் பக்கம் போகலாமான்னு பாக்கப் போறாங்களோன்னு தோணுது!!!

    பதிலளிநீக்கு
  8. கொஞ்சம் ஓவராத்தான் கிளப்பரீங்க பீதிய..

    சும்மா ஒரு வார்த்தையில அதை விட்டுறு.. இதை சேத்துரு'ன்னு சொல்லிட்டீங்க.. இதெல்லாம் ஆவுற காரியாமா.. எதுக்கும் மறுபடியும் யோசனை பண்ணனும் போல.. :(

    பதிலளிநீக்கு
  9. முத்துகுமரன்,

    //தூங்கிட்டு காலைல வந்து சந்தேகம் கேட்டுகிறேன் //

    நீ எப்ப வேணா வாப்பா! ஆனா க்ளாஸ் லீடருங்கறதை மனசுல வைச்சுக்க! :)

    ****

    சோழநாடன்,

    //அது எப்படின்னு கொஞ்சம் சொல்லுங்க//

    கணக்கெழுதறதுன்னா இன்னைக்கு காலைல டிபன் 16.50, கின்ஸ்-3.00, கூட ஹால்ஸ் - 50 பைசா, லன்ச் - 35... இப்படி இல்லைங்க! இதெல்லாம் நமக்கு சுட்டுப்போட்டாலும் வராது! கொஞ்சம் பெரிய செலவினங்கள்! ATMல கார்டை விட்டு 3000 ரூவா எடுத்தா அது தீரும்போது... பைக் பெட்ரோல் 500, மாயாஜால்-300, உட்லேண்ட் செருப்பு- 1400, க்ளோபஸ் சேல் - 1300.. இந்த அளவுக்காவது இருக்கனும்! இதுகூட இல்லாம ரெண்டு நாளைக்கு முன்னாடி பர்சுல 3000 ரூவா வைச்சமே! இப்போ 150 தான் இருக்கு! மிச்சமெல்லாம் காக்கா தூக்கிக்கிட்டு போயிருச்சான்னு கொழம்பற அளவுல இருக்கப்படாது!

    இதையெல்லாம் 3 தடவை செஞ்சீங்கனா போதும்! உங்களை அறியாமலேயே வெட்டி செலவுகள் பாதியா கொறைஞ்சிரும்!

    ****

    கமல்,

    என் ப்ரோபைல் போட்டோவ பாருங்க! நான் முகூர்த்த்தப்பவே அச்சு அசலா அப்படித்தான் இருந்தேன்! :)

    சொல்ல வந்தது ஆகாத போகாத எக்ஸ்ட்ரா பிட்டிங்கையெல்லாம் கழற்றிட்டு பார்க்க பளிச்சுன்னு இருக்கனும்னு! சில எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ்தான் நம்பளை அட்லீஸ்ட் பார்க்கற மாதிரியாவது வைச்சிருக்குன்னா தப்பே இல்லை! வைச்சுக்கலாம்!! :)))

    பதிலளிநீக்கு
  10. நந்தன்,

    //அப்பன் ஆத்தாவே மாத்தாத ஒரு புள்ள வந்தா மாத்த போது? //

    அப்பன் ஆத்தாளுக்கு ஏத்த புள்ளையா நாம என்னைக்காவது மாறியிருக்கமா? நம்மை பெத்த ஒரே காரணத்துக்காக நாம் எப்படியிருந்தாலும் அப்படியே ஏத்துக்கறாங்க!

    இங்க மேட்டரு அது இல்லை! வரப்போல புள்ளை வந்து உங்களை மாத்தறது இல்லை! ஒரு குடும்பத்தலைவனா ஆகறதுக்கு தகுதியா உங்களை நீங்களே மாத்திக்கறது!

    //என் சுயத்தை இழக்க மாட்டேன்//

    நம்மை நாமே உணர்ந்து நம் வாழ்க்கை சந்தோசமாக இருக்க தேவையான மாற்றங்களை கண்டுணர்ந்து நம்மை நாமே அடுத்த லெவலுக்கு முன்னேத்திக்கறதும் சுயம் தானப்பு!

    ****

    சிங். செயகுமார்,

    வாங்கப்பு! அரியர்ஸு, பாஸ், பெயிலுங்கறதே இங்க கிடையாது! வாழ்க்கை முழுவதும் எழுதப்போற எக்சாமு இது!!! கவலையே படாதீங்க! :)))

    ****

    பட்டணத்து ராசா,

    //நமக்கு ஒன்னியும் ஆகப்போறதில்ல// என்னப்பு இப்படி சொல்லீட்டிங்க! மனச விடாதீங்க.. இதேபோல "ஒரு வாரம் தோய்க்காத அழுக்கு ஜீன்சு, மண்டையோடு போட்ட பிரிண்டடு சட்டை, கண்ணுக்கு கலைஞர் கொடுக்கப்போற இலவச டீவி ரெண்டை ஜாயிண்ட் செஞ்சு போட்டாப்புல பெரிய பிரேம் கண்ணாடி" போட்டுக்கிட்டு ஒருத்தி இந்த உலகத்துல உங்களுக்கு பிடிச்ச மாதிரியே இருக்க மாட்டாங்களா என்ன?! என்ன ஒன்னு! நீங்களே தேடிப்பிடிக்கனும்! வீட்டுல பார்க்கமாட்டாங்க! :)))

    பதிலளிநீக்கு
  11. பொன்ஸ்,

    //நேத்திக்குக் கொஞ்சம் மதில் மேலேர்ந்து இந்தப் பக்கம் குதிச்சவங்க கூட இன்னிக்கு திரும்பி மதில்லயே ஏறி அந்தப் பக்கம் போகலாமான்னு //

    விடுங்க.. இன்னைக்கு அந்தப்பக்கம் போனாலும், என்னைக்காவது இந்தப்பக்கம் வந்துதான் ஆகனும்! :)

    ****

    ராசா,

    //கொஞ்சம் ஓவராத்தான் கிளப்பரீங்க பீதிய..//

    மனித வாழ்க்கையில் மாற்றம் ஒன்றுமட்டுமே என்றைக்கும் மாறாதது!

    இது நீங்க சொன்னதுதான்! :)

    //எதுக்கும் மறுபடியும் யோசனை பண்ணனும் போல.. :( //

    என்னது யோசனை பண்ணறீங்களா?! மொத பத்திய திரும்பவும் படிங்க! :)))

    பதிலளிநீக்கு
  12. //உங்க வீட்டாரெல்லாம் சந்தோசமா பயலுக்கு கோட்டி தெளிஞ்சிருச்சின்னு சந்தோசப்பட்டுக்கிட்டு "கல்யாணம் வரைக்கும் இவனை இப்படியே வைச்சிரு மாரியாத்தா"ன்னு பணமுடியெல்லாம் கூட போட்டிருப்பாங்க! //

    இளவஞ்சி, நீங்க வேற... இப்பொல்லாம் கதை மாறிடுச்சு... என் ஃபிரெண்ட் 5 பேருக்கு கல்யாணம் ஆயிடுச்சு... என் கூட 10 பொண்ணுங்க வேலை செய்யுது... இப்படியெல்லாம் பயமுறுத்தி வீட்டில் பொண்ணு பார்க்க வைக்கலாம்னு நிறைய பேரு கிளம்பிருக்காங்க...

    ஆனா வீட்டில்,இன்னும் பயல் இருட்டில தனியா நடக்க கூட பயப்படரான், குழந்தை மாதிரின்னு சொல்லி அழ வச்சுட்டு இருக்காங்க...

    பதிலளிநீக்கு
  13. //100க்கு 70 புள்ளைங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி சமையல் தெரியாதுன்னு நான் அடிச்சு சொல்லுவேன்! //
    இப்ப உயிர்வாழத் தேவையான அளவுக்கு குறைந்த பட்சமாக சமைக்கத் தெரியும். முழுமையா கத்துகிட்ட பின்னாடிதான்
    இந்த கோதாவுலயே இறங்க போறேன்.
    //தயவு செய்து கணக்கெழுத ஆரம்பிங்கப்பு!//
    ஒரு கோடி கொடுத்தாலும் ஒரு கோடியே பத்து லட்சத்திற்கு கணக்கு சொல்ற ஆளு நான். கல்லூரி காலத்தில் நண்பர்கள்
    வீட்டில் தாக்கல் செய்யும் வரவு செலவு அறிக்கைகளை தயார்த்த அனுபவம் உதவும் என்று நினைக்கிறேன்:-))

    //நீங்க இப்போ எவ்வளவு சம்பளம் வாங்கறீங்க? அதுல PF, Tax எவ்வளவு புடிக்கறாங்க? மாசத்துக்கு எவ்வளவு
    செலவு செய்யறோம்? ஏதாவது தெரியுமா? அத்தனையும் விரல் நுனில வைச்சிருக்கறீங்கன்னா உங்களுக்கு இந்த
    பத்தி வேண்டாம்!//

    பிரச்சனையே இல்ல. மாசம் ஆனா சம்பள கவரை மேலிடத்திடம் கொடுத்திட்டா போச்சு....
    ஆளக் கவுத்தமாதிரியும் ஆச்சு. ஏதாவது தப்பு பண்ணினாலும் முன் ஜாமீன் எடுத்தமாதிரியும் ஆச்சு.

    என்ன நாஞ்சொல்றது.:-)

    பதிலளிநீக்கு
  14. //அது சொந்த செலவுல சூனியம் வைச்சுக்கறது ஆயிரும்! (இதை முதல்ல சொன்ன புண்ணியவான் யாருப்பா? ஒரு நாளைக்கு 10 முறையாவது வாயில வருது! :) )//

    நேரங்காலம் இல்லாம நானும் இதை சொல்லி பழகிட்டேன்... கேக்கறவன் எல்லாம் நான் பெரிய அறிவாளின்னு நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க...

    என்னையும் தெரியாமல் நீங்க சொன்ன பாடத்தை சரியா செயல் படுத்திட்டு இருக்கேன்..

    பதிலளிநீக்கு
  15. /////தயவு செய்து கணக்கெழுத ஆரம்பிங்கப்பு////
    அது எப்படின்னு கொஞ்சம் சொல்லுங்க..//

    சோழநாடன், முதல்ல இங்க ரெஜிஸ்டர் பண்ணுங்க...

    http://www.buddybills.com/clnLogin.asp

    வீட்டுக்கணக்கு, வீக் எண்ட் பீர் கணக்கு என தனித்தனியா டிராக் பண்ணலாம்...

    பதிலளிநீக்கு
  16. இப்பத்தான் சூடுபிடிக்குது.

    //100க்கு 70 புள்ளைங்களுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி சமையல் தெரியாதுன்னு நான் அடிச்சு சொல்லுவேன்! //

    எப்புடிங்க இப்படியெல்லாம்! பிரமாண்டமா இருக்கு போங்க.

    பதிலளிநீக்கு
  17. முத்துகுமரன்,

    //தனியா நடக்க கூட பயப்படரான், குழந்தை மாதிரின்னு சொல்லி அழ வச்சுட்டு இருக்காங்க//

    அப்படியா சொல்லறீங்க?! அடுத்தமுறை வீட்டுக்கு போகும்போது டிவில ஏதாவது லவ்சீன் வந்தா அதை ஒரு ஏக்கப் பெருமூச்சோட பார்த்துக்கிட்டே "ஏம்மா?! இந்த ஓடிப்போய் கல்யாணம் செஞ்சுக்கறதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?!" அப்படின்னு ஒரு பிட்டைபோட்டுட்டு சத்தம் போடாம கெளம்பி வந்துருங்க!

    அடுத்தமுறை ஊருக்கு அனேகமா தாலி கட்டதான் போகவேண்டி வரும்! :)

    உங்க கணக்கு சுட்டிக்கு நன்றி!

    ****

    முத்துகுமரன்,

    //என்ன நாஞ்சொல்றது.:-) //

    அடடா! பரிச்சை வைக்கறதுக்கு முன்னாடியே இப்படி லட்டு லட்டா 100 வாங்கறீங்களே?! என் கண்ணே பட்டுடும் போல இருக்கு! :)

    ****

    மோகன்தாஸ்,

    //எப்புடிங்க இப்படியெல்லாம்! //

    நாங்கெல்லாம் சின்ன வயசுல இருந்தே.. ஹிஹி...

    பதிலளிநீக்கு
  18. இளவஞ்சி .. என்ன இந்த க்ளாஸ்ல மட்டும் இப்பிடி கூட்டம் அலைமோதுது..

    இளவஞ்சி சார் கூட சேர்ந்து யாராவது கெஸ்ட் லக்சர் எடுத்தாலும் நல்லாத்தான் இருக்கும்..

    சரி சரி.. ..யாருப்பா அங்க போர்ட மறைக்கிறது...

    பதிலளிநீக்கு
  19. அனானி,

    //Nalla Kelapurangiya Beethiya.... //

    கடைசில மந்திரிச்சுக்கலாம்! கவலைய விடிடுங்க! :)

    ****

    வாங்க சுகா,

    //சரி சரி.. ..யாருப்பா அங்க போர்ட மறைக்கிறது... //

    நாந்தாங்க அது! இதோ தள்ளி நிக்கறேன்! :))

    பதிலளிநீக்கு
  20. ஏன் இளவஞ்சி, உங்களுக்கே இது நல்லாருக்கா??
    இப்பிடி நீங்க எடுத்தெடுத்துக் குடுக்க, பேச்சுலரெல்லாம் பேச்சிலராகாமே குடும்பஸ்தனானா, அப்பறம் இன்னோரு ஆறேழு வருசத்துக்கப்பறம் யாருங்க உஷாக்கா மாதிரி தொடரெழுதறது? :-)))

    பதிலளிநீக்கு
  21. 'மழை' ஷ்ரேயா,

    //அப்பறம் இன்னோரு ஆறேழு வருசத்துக்கப்பறம் யாருங்க உஷாக்கா மாதிரி தொடரெழுதறது? :-))) //

    என்னங்க இப்படி குண்டைத்தூக்கி போடறீங்க?! இன்னும் ஆறேழு வருசமானாலும் யாராவது இப்படி ஆம்பளைங்க எது செஞ்சாலும் பதிலுக்கு ஏறுமாறா ஏதாவது செஞ்சுக்கிட்டுதான் இருப்பாங்களா?!

    அப்ப எங்களுக்கெல்லாம் என்னைக்கும் விடிவுகாலமே கிடையாதா?!

    அட என் சொக்கா!!! :)))

    பதிலளிநீக்கு
  22. ஏய்யா இதுக்கே இத்தனை விசயம் இருக்கா? இப்பவே கண்ணைக் கட்டுதே...

    ஒரே ஒரு வாராம் போட்ட அழுக்கு ஜீன்ஸூ, லைட்டா மஞ்சளும் செவப்பும் கலந்தாப்புல ராமர் ப்ளூல கலரடிச்ச தலை, கொஞ்சமாப் பிஞ்ச பெல்ட்டு, நெறையப் பிஞ்ச பர்ஸூ, இதெல்லாம் இருந்தா வெளங்கி வெள்ளக் கோழி கூவிரும் போல... பீதியக் கெளப்புறீங்களே...

    அத்தோட காலமெல்லாம் நடக்குற பரீச்சை என்னைக்குனாலும் பாஸ் பண்ணிக்கிறலாமின்னும் சொல்றீங்க... சரி எழுதித்தான் பாத்துருவமே..

    பதிலளிநீக்கு
  23. உண்மைய நிறையச் சொல்லி, கொஞ்சமா சொல்லாம விட்டுப் பாடம் எடுக்கிறீங்களா???
    இல்ல, எதுக்குக் கேட்கிறேன்னா..//அப்ப எங்களுக்கெல்லாம் என்னைக்கும் விடிவுகாலமே கிடையாதா?!//னு கேட்கிறீங்களே.. சும்மா உங்களருமை மாணவர்களுக்காக வாத்தியாரே குழாய்வெளிச்சமா(அதாங்க ட்யூப் லைட்டு) நடிக்கிறீங்களோன்னு சந்தேகம் வந்துது. அதுக்குத்தான். :O)

    பதிலளிநீக்கு
  24. 'மழை' ஷ்ரேயா,

    //குழாய்வெளிச்சமா(அதாங்க ட்யூப் லைட்டு) நடிக்கிறீங்களோன்னு //

    என்ன அநியாயம் இது?! கல்யாணம் செஞ்சுக்கனும்னு ஆசைப்பட்டு அதற்குறிய தகுதியை அடையனும்னு எவ்வளவு கஷ்டப்பட்டு "ட்யூப் லைட்"டாக மாறியிருப்பேன்!!!

    அதையெல்லாம் "நடிப்பு" என்று ஒரே வார்த்தையில் சொல்லி என்னை தரவிரக்கம் செய்ய முயலும் உங்க அறிக்கையை நான் ஒ.பி.ஒ கட்சியின் நிரந்தர உறுப்பினன் என்ற அடிப்படையில் வன்மையாக கண்டிக்கிறேன்!!!! :)))

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விட்டில் பூச்சிகள்

"அ ய்யா... நம்ப பையன்னு தெரியாமக் கூட்டிக்கிட்டு வந்துட்டோம். மன்னிச்சிடுங்க. பலதடவை கேட்டும் தம்பி யாருன்னு சொல்லவேயில்ல! காலேஜ்ல இருந்து புகார் வந்ததால கூட்டிக்கிட்டு வந்துட்டோம்..." இன்ஸ்பெக்டரின் அறைக்கு முன்னால் ரைட்டருக்கு பக்கத்தில் இருந்த நீளமான பென்ஞ்ச்சில் வலிக்கும் கால்களை நீவியபடி குறுகி உட்கார்ந்திருக்கறேன் நான். கொஞ்சநேரம் முன்னாடி வரைக்கும் ஜட்டியோடு செல்லுலதான் வைச்சிருந்தாங்க. வர்றவங்க போறவங்க எல்லாம் முடியை பிடிச்சி அப்பியதில் கண்ணம் கன்னிப்போய் கிடக்கிறது. வாயைத்திறந்து எதுவும் பேசாததால், "என்னா திமிருடா உனக்கு?"ன்னு லத்தில துணிய சுத்தி புட்டத்திலும் கெண்டைக் காலிலும் செம அடி! எல்லாம் உள்காயம். மேலுக்கு பார்த்தா ஒன்னுமே இல்லை. உள்ள வலி சும்மா வின்னு வின்னுங்குது. சிட்டி நைட்டு ரவுண்ட்ஸுக்கு கிளம்பிய அப்பாவுக்கு நியூஸ் போயிருக்கும் போல. நைட்டு 11 மணிக்கு ஸ்டேசனுக்கு வந்துட்டாரு. மெல்ல சாய்ந்து இன்ஸ்பெக்டரின் அறைக்குள் எட்டிப் பார்க்கிறேன். குற்றவாளிகளோடு பழகிப்பழகி மாறிப்போன அதே இறுகிப்போன அப்பாவின் முகம். "வேற ஏதாவது பிரச்சனை இதுல

நல்லா (நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய...

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஏழுமலையான் துணை! அன்பருக்கு புண்ணியம் கோடி மற்றும் நமஸ்காரங்கள்! இதனைப்படிக்கும் அன்பர்களும் கீழே குறிப்பிடும் நால்வரும் மனதிற்கொள்ள வேண்டியது! இந்த பதிவினைப் படித்த நான்கு நாட்களுக்குள் அவர்களும் 'நாலு' என்ற தலைப்பு வரும்படி ஒரு பதிவினை போட வேண்டியது! தவறுபவர்கள் ஏழுமலையான் தரும் தண்டனைகளை சிரமேற்க வேண்டியது! இந்த பதிவினை படித்து அதன்படி நடக்காத ஒரு பதிவரது பிளாகர் அக்கவுண்டு தாமாகவே பதிவுகளை அழித்துவிட்டது. படித்துவிட்டு ஒரு + கூட போடாமல் சோம்பேறித்தனமாக இருந்த ஒருவரது பதிவுகளின் பின்னூட்டங்கள் அனைத்தும் ஒரே நாளில் கானாமல் போயிற்று! "இதெல்லாம் ஒரு விளையாட்டா?" என சலித்துக்கொண்ட ஒருவரது IP அட்ரஸ் "IP ஆராய்சியாளர்கள் சங்கத்"தின் தலவருக்கு தாமாகவே சென்று சேர்ந்தது! அதன் பிறகு யார் எந்த அல்ப பின்னூட்டங்கள் இட்டாலும் அந்த IPயே வந்ததும் குறிப்பிடத்தக்கது! பதிவினை படிப்பவர்களுக்கு, படித்த 1 நிமிடத்துக்குள் 10 பின்னூட்டங்களும் 10 +ம் அளிப்பவர்களுக்கு வலைப்பதிவின் சகலசவுகரியங்களும் வந்து சேரும். விசயமே இல்லாமல் அவர்களது பிளாக்கு